Home விமர்சனம் நான் வேற மாதிரி சினிமா விமர்சனம்

நான் வேற மாதிரி சினிமா விமர்சனம்

குடும்பக் கதைபோல் தொடங்கி, சஸ்பென்ஸ் திரில்லர் ரூட்டில் நுழைந்து, ‘நான் வேற மாதிரி’ என கிரைம் திரில்லராக வேகமெடுக்கும் படம்.

இளம்பெண் நிஷாவின் குடும்பத்தில் பாட்டி திடீரென மரணமடைகிறார். அதையடுத்து அவளது அண்ணி, அண்ணன்கள் மரணமடைகிறார்கள். ‘மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை’ என படம் பார்க்கும் நமக்கு தெரிகிறது. அதே சந்தேகம் போலீஸுக்கும் வர, விசாரணை தொடங்குகிறது. அதில் அவர்கள் என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பது படத்தின் திரைக்கதை… நடந்த மரணங்களுக்கு என்ன காரணம், யார் காரணம் என்பது கிளைமாக்ஸ்.

நிஷாவாக ஜோதிஷா. அழகாக இருக்கும் அவரை சற்றே பூசினாற்போலிருக்கும் பளபள தேகம் கூடுதல் அழகாக்கியிருக்கிறது. அந்த சதைப்பிடிப்பான உதடுகள் வசன உச்சரிப்பின்போது கவனத்தை ஈர்க்க, ரொமான்ஸில் கிறக்கமான உடல்மொழியை தந்து ஏமாற்றம், துக்கம், பயம், பதட்டம், அழுகை என கதைக்கு தேவைப்படும் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியான தன் உடற்கட்டை பாடலொன்றில் தாராளமாகக் காண்பித்திருப்பது ஆண்களில் பலரை சூடேற்றாமல் விடாது.

நாயகன் ஷா பார்ப்பதற்கு அமைதியாக தெரிகிறார். காதல் காட்சிகளை அதே அமைதியோடு கையாண்டு, நிறைவுக் காட்சியில் ஆக்ரோஷ மனிதராக மாறி காடு மேடுகளில் வெறித்தனமாக ஓடி ரத்தம் சொட்டச் சொட்ட வேறொரு முகபாவம் காட்டியிருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற நஷீர் பாஷா நடையில் விரைப்பையும், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிப்பதில் கம்பீரத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.

வில்லன் ரேஞ்சுக்கான கேரக்டரை விளையாட்டுத்தனமாக செய்கிற பொறுப்பு ‘சித்தா’ தர்சனுக்கு. அதில் அவர் குறைவைக்கவில்லை.

நாயகியின் அண்ணன்களாக வருகிறவர்கள், அண்ணி, பாட்டி என இன்னபிற நடிகர் நடிகைகள் அவரவர் பங்களிப்பை சரிவர செய்திருக்கிறார்கள்.

இன்று புகழிலும் உடலளவிலும் பிரமாண்டமாக வளர்ந்திருக்கிற ‘டிக்டாக்’ இலக்கியா ஒல்லிப்பிச்சான் தோற்றத்தில் வந்துபோகிறார். அதிலிருந்து படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை கணிக்க முடிகிறது.

கதையின் பெரும்பகுதி வீடுகளுக்குள்ளேயே நடந்தாலும் அலுப்பு தட்டாத கோணங்களில் கேமராவை சுழலவிட்டிருக்கும் ஜி ஜெயபாலன், கிடைத்த கேப்பில் ஏற்காட்டின் பசுமையை திரைக்குள் இழுத்துப் போட்டிருக்கிறார்.

மா சிவசங்கர் இசையில் ‘இந்த பூனையும் பால் குடிக்குமா?’ பாடலையும், ‘டகுலு உடாதே மாமு டகுலு உடாதே’ மதுபானக் கூட குத்தாட்டப் பாடலையும் ரசிக்க முடிகிறது. ‘என் அன்பு தங்கச்சிக்கு நிச்சய தாம்பூலம்’ பாடல் பரவாயில்லை ரகம். பின்னணி இசை காட்சிகளின் பரபரப்புக்கு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பு கூட்டியிருக்கலாம்.

தொடர் மரணங்கள், அதன் பின்னணியை அலசி ஆராய்தல் என கதைக்களத்தை ஓரளவு விறுவிறுப்பாக அமைத்த இயக்குநர் எஸ் ஜவஹர்லால், ஹாரர் பட பாணியில் இடையிடையே சில காட்சிகளைச் செருகி அடுத்தடுத்த காட்சிகள் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.

நான் வேற மாதிரி _ அளவான பட்ஜெட்டில் அதிரிபுதிரி அனுபவம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்