‘நடுவன்’ சினிமா விமர்சனம்
‘இது முகமூடி மனிதர்களால் சூழப்பட்ட உலகம்‘ என்ற ஒன்லைனில் பின்னப்பட்ட எமோஷனல் திரில்லர்.
தன் நண்பன் பணத்தை முதலீடு செய்ய, தன்னுடைய உழைப்பைக் கொட்டி அந்த டீ தூள் தயாரிப்பு தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்திவருகிறார் பரத்.
பரத்தின் நண்பன் தொழிற்சாலையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் தொழிற்சாலையிலேயே குடித்துவிட்டு போதையிலேயே பொழுதைக் கழிக்கிறார். கூடவே பரத்தின் மனைவியுடன் கள்ள உறவையும் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விவரம் பரத்திற்கு தெரியவருகிறது. அதன் விளைவு என்னவென்பது அடுத்தடுத்த காட்சிகளில்… இயக்கம் ஷாரங்
பரத் படம் முழுக்க, கஞ்சி போட்ட சட்டைபோல் விரைப்பாக வருகிறார். மனைவிக்கு தன் நண்பனுடன் தவறான உறவு இருப்பது தெரிந்தபின் மனதுக்குள் புழுங்கும்போது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
பரத்தின் நண்பனாக கோகுல் ஆனந்த். மென்மையான வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார்.
பரத்தின் மனைவியாக அபர்ணா வினோத். லட்சணமாக இருக்கிறார். நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை.
பரத்தின் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிற இளைஞன் அருவி பாலா தனது குடிகார நண்பர்களுடன் சிக்கிச் சீரழிகிற காட்சிகள் ஈர்க்கவில்லை; கதையோடு பொருந்தவுமில்லை! ‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்று அறிவுரை சொல்வதற்காக வேண்டுமானால் அந்த காட்சிகள் பயன்படலாம்.
நாவல்களைப் போல் அத்தியாயம் பிரித்து தனித்தனி தலைப்புகள் வைத்து கதையை நகர்த்தியிருப்பது கதையோட்டத்தின் எதிர்பார்ப்பை சற்றே தூண்டுகிறது.
காட்சிகளுக்கு தனது இசையால் விறுவிறுப்பு கூட்ட முயற்சித்திருக்கிறார் தரண் குமார். கதை நிகழ்விடமான கொடைக்கானலின் பனி படர் மலைகளை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறது யுவாவின் கேமரா.
வசனங்களில் ஆங்காங்கே கெட்ட வார்த்தைகள்… காரணம்? தியேட்டருக்கு வராமல் ஓ.டி.டி.யில் வெளியாகிற படங்களுக்கு சென்சார் கட்டுப்பாடுகள் கிடையாது. நடுவனும் தியேட்டருக்குப் போகாமல் சோனி வைவ் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸாகிறது.