Home Uncategorized நீளிரா சினிமா விமர்சனம்

நீளிரா சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய கதையில் உருவாகும் படங்கள் என்றாலே குண்டு வெடிப்பு, உயிர் பறிப்பு, கற்பழிப்பு என்ற வேதனை நிகழ்வுகளையே சுற்றிவரும். இந்த படம் சற்றே வித்தியாசப்பட்டு, கல்யாணம் நடக்கவிருக்கும் ஒரு வீடும் அந்த வீட்டின் மனிதர்களும் என வேறொரு அனுபவத்தை தருகிறது.

ஒரு இரவில் நடந்து முடிகிற கதை என்பதால் ‘நீளிரா’ என்ற, நீண்ட இரவைக் குறிக்கும் சொல் படத்தின் தலைப்பாகியிருக்கிறது.

இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நேரமாகப் பார்த்து ஒரு தமிழர் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சுபநிகழ்வுக்கு சிங்கள அரசிடம் அனுமதி பெறுவதிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்து, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க திடுதிப்பென, சிங்கள அரசுக்கெதிராக போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் குழுவை ஒடுக்குவதை அசைன்மெண்டாக கொண்ட அமைதிப்படையினர் வீட்டுக்குள் நுழைந்து பதற்றச் சூழலை உருவாக்க, இன்னொரு பக்கம் சிங்கள் ராணுவத்தினர் தீவிரமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த வீட்டிலுள்ளவர்களுக்கும் இன விடுதலை போராளி குழுவினரும் தொடர்பிலிருக்க திட்டமிட்டபடி கல்யாணம் நடந்ததா இல்லையா என்பது மீதிக்கதை…

கிளைமாக்ஸில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுகிற அந்த தனித்துவமான சம்பவம் எதிர்பாராதது. இயக்கம் சோமிதரன்

நம் நாட்டிலிருந்து போன அமைதிப்படை ஈழ மண்ணில் என்னவெல்லாம் செய்தது என்பது உலகறிந்த வரலாறு. இந்த படத்தில் அமைதிப்படையின் கேப்டனாக வருகிறவர் நல்லவரிலும் நல்லவராக நடந்து கொள்கிறார். அந்த கேரக்டரில் நடித்திருப்பவர் கன்னட நடிகர் நவீன் சந்திரா. அப்படியிருக்க அவரை எப்படி கெட்டவராக காண்பிக்க முடியும்? போகட்டும், அதெல்லாம் வில்லங்க விவகார அரசியல். நவீன் சந்திராவின் நடிப்பில் குறையில்லை. கதைக்கு அது போதுமானதாக இருக்கிறது.

போராளிகள் குழுவில் அங்கம் வகிப்பவராக வருகிற சனந்த் உணர்ச்சிக் கொந்தளிப்பை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். மணப்பெண்ணாக வருகிற சித்து குமரேசன் அழகாக இருக்கிறார்; முகபாவங்களில் சூழ்நிலைக்கேற்ற பதட்டத்தை கடத்துகிறார்.

‘எமகாதகி’ பட நாயகி ரூபா கொடுவாயூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வருகிறார்; நடிப்பு தரம். அவர் யார், என்ன நடந்திருக்கும் என்பதை புரியவைக்கும் ஒருசில காட்சிகள் மனதை கலங்கடிக்கலாம்.

மணப்பெண்ணின் அம்மாவாக வருகிற கபிலா வேணுவில் துவங்கி கயல் வின்சென்ட், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பி பிள்ளை, ரோஹித் கோகடே என இன்னபிறர் அவரவர் பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

கதையிலிருக்கிற பயம், பதற்றம், உற்சாகம் என எல்லா உணர்வுகளையும் உள்வாங்கி அதற்குப் பொருத்தமாக பயணிக்கிறது கே அமைத்திருக்கும் பின்னணி இசை.

அவய்லபிள் லைட்டிங்கில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கலாம்; ஆனால், ஒட்டுமொத்த காட்சிகளையும் அப்படியே படமாக்கியது போன்றிருக்கிறது செல்வரத்தினம் பிரதீபனின் நேர்த்தியான ஒளிப்பதிவு.

ராதா ஸ்ரீதரின் நறுக் சுறுக் எடிட்டிங்கில் படம் 102 நிமிடங்களில் நிறைவுக்கு வருகிறது.

விவாதத்திற்கு உட்படுத்தும்படியான சிலபல விஷயங்களைச் சுமந்திருக்கிற இந்த படம், இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய கதையில் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை விரும்புகிறவர்கள் தாராளமாகப் பார்க்கலாம்.

-சு.கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்