‘நிலை மறந்தவன்’ சினிமா விமர்சனம்

நிலை மறந்தவன்‘ சினிமா விமர்சனம்

டிரான்ஸ்‘ என்ற பெயரில் வெளியான மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன்.

கிறிஸ்தவக் கடவுளின் பெயரால், ‘அற்புத வாழ்வளிக்கும் கூட்டங்கள்’ நடத்தும், போலி மதவாதிகளின் பின்னணியை, காரி உமிழத்தக்க செயல்பாடுகளை துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்!

தன்னம்பிக்கைப் பேச்சாளரான பகத் பாசில், வாழ்க்கைப் பாதையில் கிடைத்த சிலபல வலிகளால் மனம் நொறுங்கிப் போயிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில், இந்து மதத்தைச் சேர்ந்தவரான அவருக்கு கிறிஸ்தவ மதப் பெயரைச் சூட்டி, பயிற்சி கொடுத்து போலி பாதிரியாராக்கி, அவர் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர் என அப்பாவி மக்களை நம்பவைத்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறது கழிசடை கார்ப்பரேட் கூட்டமொன்று!

அந்த பணத்தில் பகத் பாசிலும் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். ஒரு கட்டத்தில் தான் செய்வது மக்களுக்கெதிரான துரோகம் என்பதையறிந்து மனம் திருந்துகிறார்.

தங்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துவைத்துள்ளவர் என்பதால், கழிசடைக் கூட்டம் அவரை காவு வாங்கப் பார்க்கிறது.

அதிலிருந்து அவர் தப்பித்தாரா, போலி மதவாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டினாரா என்பதெல்லாம் திரையில் விரியும் அட்டகாசக் காட்சிகள்!

வின்சென்ட் வடக்கன் என்ற கிறிஸ்தவர் எழுதிய கதையை, அதன் தன்மை கெடாமல், படு துணிச்சலாக படமாக்கியிருப்பவர் இயக்குநர் அன்வர் ரஷீத்.

முழுநீள திரைப்படமாக தமிழில் இப்படியொரு படத்தை எப்போதோ யாரேனும் ஒருவர் எடுத்திருக்க வேண்டும். அதற்கான துணிச்சல் இதுவரை ஒருவருக்கும் வரவில்லை; இனி வருமா என்பது கேள்விக்குறி. அந்த வகையில் இயக்குநர் அன்வர் ரஷீத் துக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர்.

தான் ஏற்றிருப்பது சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட, மிகமிக கனமான, எந்த நடிகரும் பாத்திரம் என்பதை உணர்ந்து, அதை தன் நடிப்பின் வழி அத்தனை நேர்த்தியாய் பரிமாறியிருக்கிற பகத் பாசிலுக்கு ‘நடிப்பு அசுரன்’ என்கிற பட்டத்தை தாராளமாய் கொடுத்துக் கெளரவிக்கலாம். அதற்கு அத்தனை தகுதிகளும் அவரது நடிப்பில் இருக்கிறது!

போலி மதவாதிகள் மதத்தை வைத்து, மக்களின் அப்பாவித்தனத்தை, அவர்களின் இறை நம்பிக்கையை முதலீடாக்கி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை துல்லியமாக தங்கள் நடிப்பின் மூலம் பிரதிபலித்திருக்கிறார்கள் இயக்குநர் கெளதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ் கூட்டணி.

பகத் பாசிலின் சொந்த மனைவியான நஸ்ரியா இந்த படத்தில் பகத்துக்கு ஜோடியாக இல்லாமல் கேடியாக வருகிறார். நடிப்பில் நிறைவான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

‘அற்புதம்’ என்ற பெயரில் போலிப் பாதிரியார்கள் செய்யும் திருட்டுத்தன சித்து வேலை மோசடிகளை, கவர் கொடுத்து பணம் வசூலிக்கிற தந்திரங்களை கழுகுப் பார்வையில் அலசி ஆராய்ந்து உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தியிருப்பதிலிருந்து ‘இறை நம்பிக்கை தவறில்லை; அதே நேரம் உடல்நிலை சரியில்லாது போனால் கடவுளை மட்டுமே நம்பாமல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியம்’ என வலியுறுத்துவது வரை படம் முழுக்க விழிப்புணர்வில்லாத நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகள்!

நிறைவாக ஒரு வரி… இந்தபடம் இந்துக்கள் மட்டுமல்ல; அனைத்து மதத்தினரும் பார்க்க வேண்டிய படைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here