‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ சினிமா விமர்சனம்

திறமைக்குத் தடை போடுகிற அதிகார வர்க்கத்தின் மீது இளைய தலைமுறை காட்டும் ஆத்திரத்தின் நீள அகலமே கதைக்களம்.

அந்த கிராமத்தில் அந்த பயிற்சியாளர் கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முறையான பயிற்சியளித்து போட்டிகளில் பங்கேற்க தயார்படுத்துகிறார். தான் பயிற்சியளித்த இளைஞர்கள் மாநில அளவில், தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொண்டபோதும் அப்படியான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. காரணம், ‘நாங்கள்தான் எதிலும் கலந்து கொள்வோம்; ஜெயிப்போம்; புகழ் பெறுவோம். சாதியாலும் பொருளாதாரத்தாலும் தாழ்ந்தோர் நாங்கள் எட்டிய, எட்டிக் கொண்டிருக்கிற உயரத்தை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது’ என நினைக்கிற அதிகார வர்க்கம். அந்த வர்க்கத்துக்கெதிராக நாம் என்ன செய்ய முடியும் என யோசிக்கும் திறமையாளர்கள் எடுக்கும் முடிவும் அது தரும் பலனுமே திரைக்கதை. இயக்கம் ஹரி உத்ரா

ஹீரோவுக்கான எந்தவித பந்தாவும் காட்டாத, காட்ட முடியாத எளிமையான பாவப்பட்ட இளைஞன் வேடத்தில் சரத். மனதுக்குள் கொந்தளிக்கும் கோபத்தை மூக்குக் கண்ணாடி ஆக்கிரமித்திருக்கும் முகத்தின்வழி பிரதிபலிப்பது கவனிக்க வைக்கிறது.

நாயகி ஐராவிடம் இளமை, அழகு சரிவிகிதத்தில் கலந்திருக்க, அவரிடமிருந்து கதையோட்டத்துக்கு தேவையான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. ‘தாக்கு தாக்கு தாக்குறா’ பாடலுக்கு அவர் போட்டிருக்கும் துள்ளாட்டத்தில் உற்சாகம் தெறிக்கிறது.

கால்பந்தாட்ட பயிற்சியாளராக ‘அருவி’ மதன். காலில் ஊனம், பேச்சில் திக்கல் திணறல் என உடலளவில் குறைபாடுகள் இருந்தாலும், அவர் தன்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக நீளும் காட்சிகளில் தேர்வு கமிட்டி பிஏ விடம் வேண்டுகோள் வைக்கும்போது தளுதளுக்கும் அவரது குரல் நெகிழ வைக்கிறது. மதன் போன்ற நேர்த்தியான நடிகர்களுக்கு பெரிய பெரிய படங்களிலும் வாய்ப்பளிக்க வேண்டும்; விருதுகள் தந்து திறமையை அங்கீகரிக்க கெளரவிக்க வேண்டும்.

சோனாவின் நடிப்பில் அலட்டல் தெரிந்தாலும் அவர் வருகிற அந்த ஒற்றைக் காட்சிக்கு அது நல்ல பொருத்தம்.

அந்த கிராமத்தின் அதிகார வர்க்க அத்தாரிட்டியாக, ரத்தினம் என்ற பாத்திரத்தில் நரேன். ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தைப் போலவே அவரும் வெயிட். அந்த கனமான சரீரத்தை வைத்துக் கொண்டு தன்னால் முடிந்த வில்லத்தனத்தை செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக, வில்லனின் அடியாளாக வருகிற முத்துவின் நடிப்பு கொஞ்சமே கொஞ்சம் கெத்து.

வழக்கமாக அச்சுப்பிச்சு காமெடி செய்யும் கஞ்சா கருப்புக்கு உணர்வுபூர்வமாக நடிப்பதற்கான வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கால்பந்தாட்ட வீரர்களாக வருகிற இளையா உள்ளிட்ட இளைஞர்கள், தேர்வுக் குழுவின் உயர்மட்ட பொறுப்பாளராக கஜராஜ், அவரது உதவியாளராக இயக்குநர் ராசி அழகப்பன் என அத்தனைப் பேரின் நடிப்புப் பங்களிப்பும் படத்தின் பலம்.

வில்லனின் தளபதியாக ‘எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்’ என சொல்லி களமிறங்கும் ஆதேஷ் பாலாவின் வெறித்தனமான நடிப்பு தனித்து தெரிகிறது.

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் உணர்வோட்டம் உயிரோட்டம் இருந்திருக்கலாம்.

இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளின் நகர்வுகளுக்கு வேகமூட்ட முயற்சித்திருக்கின்றன.

உருவாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாவிட்டாலும், விளையாட்டு வீரர்கள் அவரவர் திறமைக்கேற்ற புகழ் வெளிச்சத்தை அடைவதற்கு தடையாக இருக்கும் இழிபிறவிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக இயக்குநர் ஹரி உத்ராவை பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here