தமிழ் சினிமாவில் புதுப்புது முயற்சிகளுக்குப் பஞ்சமில்லை. அதுவும் கடந்த சில வருடங்களில் வித்தியாசமான படங்களின் அணிவகுப்பு அதிகரித்திருக்கிறது. அந்த வரிசையில் ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே பங்குபெறுகிற விதத்தில் உருவாகியுள்ள ‘ஓங்கி அடிச்சா ஓன்ற டன்னு வெய்ட்டுடா‘ புதுவரவு; நல்வரவு.
வெற்றிப் படங்களுக்கான ஃபார்முலாவை தெரிந்து புரிந்து அனுபவித்து கதைக்களமாக்கி இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் ஜி சிவா.
கதையைச் சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும். சமூகத்துக்குத் தேவைப்படும் முக்கியமான கருத்தை எந்த வித சமரமும் இல்லாமல் துணிச்சலோடு திரைக்கதையாக்கியிருப்பது படத்தின் தனித்துவம்.
நாயகன் சிவாவுக்கு இரட்டை வேடம். லட்சணமான தோற்றம், ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களுக்கான பொருத்தமான வயது, கதைக்குத் தேவையான அளவான நடிப்பு என கவர்கிறார். அவரது வலுவான உடற்கட்டு சண்டைக் காட்சிகளில் கம்பீரமாக வெளிப்பட உதவியிருக்கிறது.
படத்திற்கு பலமாக இருக்கும் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கச் செய்திருக்கிறார் வயலண்ட்’ வேலு. பாழடைந்த கட்டடமொன்றில் நடக்கும் சண்டைக் காட்சி இதுவரை தமிழ் சினிமாவுக்கு மிகமிக புதிது!
ஓளிப்பதிவாளர்கள் ஓகிரெட்டி சிவக்குமார், அருண் சுசில் இருவரும் பெங்களுரின் அழகை தங்களது கேமரா கண்களால் அழகுக்கு அழகு சேர்த்ததுபோல் வளைத்துச் சுருட்டியிருக்கிறார்கள்.
பரபரப்பும் விறுவிறுப்பும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் கமர்ஷியல் கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை சரியான விகிதத்தில் தந்திருக்கிறார் மணிசேகரன் செல்வா.
தினேஷின் பாடல்களுக்கு ராஜ் தேவ் அமைத்திருக்கும் நடனம் உற்சாக துள்ளாட்டம் போடவைக்கும்.
உண்மையிலேயே படு வித்தியாசமான முயற்சி; எளிமையான பொருட்செலவு; ரோலர் கோஸ்டர் வேகத்தில் சீறும் திரைக்கதை என பாராட்ட பல அம்சங்கள் இந்த படத்தில் வரிசை கட்டி நிற்கிறது.
இயக்குநர் சிவா தனி மனிதனாக களம் கண்டு கருவாக்கி உருவாக்கியிருக்கும் இந்த படத்தின் கனம் பல டன் வெய்ட்டு. அவருக்கு தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது ஹைட்டு!