எம்ஜிஆர் போல் எல்லோருக்கும் பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன்! -‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் பேச்சு

தீபாவளி வெளியீடாக தியேட்டர்களுக்கு வரவிருக்கிறது சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம்.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘ஃபைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிவகார்த்திகேயன், “’ப்ரின்ஸ்’ படத்தைப் பொறுத்தவரை இது ஒரு எளிமையான ‘இந்திய பையன் ஒருவன் பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான்’ என்ற ஒரு வரி கதைதான். இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொறுத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுண்ட்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாத வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. இயக்குநர் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள்.
அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லக், பிரச்சனைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது. தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான எண்டர்டெயின்மெண்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் ‘சர்தார்’ படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள். தீபாவளியன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் சுப்பு பஞ்சு, “சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாமே ஜாலியாகதான் இருக்கும் ஆனால், ’ப்ரின்ஸ்’ நாம் எதிர்பார்க்காத வேறு விதமாக அருமையாக வந்திருக்கிறது. சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காமெடி படம் டிரெண்ட் செட்டிங் படமாக இருந்திருக்கிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வரிசையில் ’ப்ரின்ஸ்’ படமும் ட்ரெண்ட் செட்டிங் காமெடிப் படமாக இருக்கும். இயக்குநர் எதிர்பார்க்காத பல இடங்களில் நகைச்சுவையை வேறு விதமாக வைத்திருந்தார். அதை நாங்கள் அனைவரும் ரசித்தது போல பார்வையாளர்களும் நிச்சயம் படத்தை பார்க்கும் போது ரசிப்பீர்கள்” என்றார்.
‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் பேசியதாவது, “‘பிரின்ஸ்’ ஏறக்குறைய 650 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாக இருக்கிறது. சிவாவின் மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெற்றுவிடும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். மறைந்த எம்ஜிஆர் ஐயா அவர்கள், பின்பு ரஜினி சார், விஜய் சார் அந்த வரிசையில் இன்று சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல நிறைய வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துக்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here