‘படவெட்டு’ (மலையாளம்) சினிமா விமர்சனம்

மக்களை பாதிக்கிற சமகால அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாக படவெட்டு!

படத்தின் ஹீரோ ஓட்டப் பந்தய வீரர். பந்தயக் களத்தில் சிறுத்தையாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தவர், காலில் அடிபட்ட காரணத்தால் களம்காணாமல் வலிகளை, இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர். , உடல்பெருத்து, உற்சாகம் சுருங்கி மந்தகதியில் வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருப்பவர். அந்த சூழலில் அவர் வசிக்கும் கிராமத்தில் அரசியல் கட்சியொன்று நுழைந்து அங்குள்ள மக்களின் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கும்போது அதுவரை முடங்கிக் கிடந்த ஹீரோ சிலிர்த்தெழுகிறார். அதன்பிறகான சம்பவ சம்ஹாரங்களின் நீள அகலங்களே திரைக்கதை!

ஹீரோவுக்காக கதையை கண்டபடி வளைக்காமல், கதைக்கேற்ப ஹீரோவை பயணிக்க வைக்கிற மலையாள சினிமாவுக்கேயுரிய திரைக்கதையோட்டத்துக்கு மிகமிக சரியாகப் பொருந்திப் போகிறார் நிவின்பாலி!

நாயகன் நிவின்பாலிக்கும் நாயகி அதிதி பாலனுக்குமான ஆழமான புரிதல் கதையோட்டத்தின் கவித்துவமான அத்தியாயங்கள்!
இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்புப் பங்களிப்பும் நேர்த்தி!

வலுவாக இருக்கும் கம்யூனிஸ்ட்கள் அவர்களைவிட விட வலுவானவர்கள் அல்லது அப்படி கருதுகிறவர்களை எதிர்க்கும்போது எப்படி கொந்தளிப்பார்கள் என்பதை காண்பித்திருக்கும் காட்சிகளாகட்டும், அரசியல் வாதிகள் ஏழை எளிய மக்களை எப்படியெல்லாம் தன் வயப்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருப்பதாகட்டும், இப்போதைய ஆளும்கட்சியை நேரடியாகவே இழுத்துப் போட்டு வெளுத்திருப்பதாகட்டும் அக்கட தேசத்து திரைமொழியில் ஏகத்துக்கும் துணிச்சல்! இயக்கம்:- விஜூ கிருஷ்ணா

திரும்பிய திசையெல்லாம் செழித்திருக்கும் கேரளத்தின் அழகுக்கு அழகூட்டியிருக்கிறது தீபக் மேனனின் ஒளிப்பதிவு.

அடுக்கடுக்காய் விரியும் அதிரடிக் காட்சிகளின் வீரியத்துக்கு பின்னணி இசையால் பலம் சேர்த்திருக்கிறார் கோவிந்த வசந்தா. மனம் உருக்கும் பாடல்களும் உண்டு!

படத்தின் நீளம் சற்றே அயர்ச்சி தந்தாலும், நமக்கான மண் நமக்கானது, நமக்கான நீர் நமக்கானது, நமக்கான உரிமையை தட்டிப் பறிக்க நினைக்க எட்டிப் பாய்வதில் தவறில்லை என்பதை கெத்தாக எடுத்துச் சொன்னவிதத்தில் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என்ற பட்டியலில் சேர்கிறது படவெட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here