Home விமர்சனம் பரமசிவன் பாத்திமா சினிமா விமர்சனம்

பரமசிவன் பாத்திமா சினிமா விமர்சனம்

‘மதம்’ பிடித்த மனிதர்களால் மனம் ஒத்துப்போனவர்கள் சந்திக்கும் அநியாய அக்கிரமங்களும், அதனால் உருவாகும் விளைவுகளுமாய் ‘பரமசிவன் பாத்திமா.’

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமம்; சுப்ரமணியபுரம், யாக்கோபுரம் என இரு பகுதிகளாக பிரிந்து வசிக்கும் மனிதர்கள். யாக்கோபுரத்தில் ஒரு கல்யாண ரிசப்சன் நடக்கிறது; நடந்து முடிந்ததும் மாப்பிள்ளை மர்மமான முறையில் மரணமடைகிறார். சுப்ரமணியபுரத்தில் ஒரு கல்யாண ரிசப்சன்; அது முடிந்ததும் அங்கேயும் மாப்பிள்ளை மர்மமான முறையில் மரணமடைகிறார்.

இப்படி ஒரே மாதிரியான மரணங்கள் தொடர்வதைக் கண்டு, ‘நடப்பது என்ன?’ என்பதை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்க காவல்துறை தயாராகிறது.

அவர்கள் கண்டுபிடிப்பதெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிற சமாச்சாரங்கள்…

பரமசிவனாக விமல்; இந்து மதத்தின் மீது பற்று கொண்டவராக, மத வெறியர்களிடம் சிக்கிச் சீரழிபவராக, எந்தவித ஹீரோயிஸமும் காட்டாமல் சராசரி மனிதனாக தன் பங்களிப்பை தெளிவாக தந்திருக்கிறார்.

கதைநாயகனின் காதலி, குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் தமிழ்ச் செல்வியாக இருந்து பாத்திமாவாக மாறியவர், பெயர் மாறினாலும் மனதளவில் மதம் மாறாதவர், காதலை எதிர்க்கும் அண்ணனுடன் ஆக்ரோஷமாக மோதுபவர், தங்களைச் சீரழித்தவர்களை பழிவாங்கும் வெறியை கண்களில் காட்டுபவர் என உணர்வுகளின் கலவையாய், உணர்ச்சி ததும்ப களமாடியிருக்கிறார் சாயாதேவி.

இந்துக்களை கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் தங்கள் மதத்துக்குள் இழுக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, ‘இவரு நல்லவரா கெட்டவரா?’ என குழப்பும்படியான கதாபாத்திரத்தில் கிறிஸ்தவ பாதிரியாராக எம் எஸ் பாஸ்கர். சுயநலமிக்க மதப் பற்றாளர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அதுபோலவே மாறியிருக்கிற அவரது குரலில் வந்து விழும் வசனங்களில் கலந்துபுழங்கும் நெல்லை வட்டாரத் தமிழ் அத்தனை இனிமை.

கதாநாயகியின் அண்ணனாக வருகிற (ஒளிப்பதிவாளர்) சுகுமார் மதவெறியராக கணிசமாக மிரட்டியிருக்கிறார்.

கூல் சுரேஷ் ஒருசில நிமிடங்கள் மட்டும் வழக்கமான அச்சுப்பிச்சு காமெடி செய்கிறார்; பின்னர் மதவெறி பிடித்தவராக செய்யும் அராஜகத்தில் தனித்து தெரிகிறார். அவருக்கென பாடல் காட்சியும் அவர் போடும் ஜாலியான ஆட்டமும் படத்தில் உண்டு.

கதாநாயகிக்கு தோழியாக வருகிற ஜேஷ்விதாவுக்கு கதாநாயகிக்கு சமமான கதாபாத்திரம். படத்தை உடலின் வளைவு நெளிவுகளைக் காட்டி ஆடி கிறங்கடித்து, ஏற்ற பாத்திரத்துக்கு தேவையான துடிப்பான நடிப்பைத் தந்து,  கிளைமாக்ஸில் பக்திப் பரவசத்துடன் ஆடி நிறைவு செய்கிறார்.

துணிச்சலான பல காட்சிகளை நிரப்பி படத்தை இயக்கியிருக்கிற இசக்கி கார்வண்ணன், காவல்துறை உயரதிகாரியாக கம்பீரமான தோரணையோடு நடமாடுகிறார்.

அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, காதல் சுகுமார், வீரசமர், ஆறு பாலா, வி ஆர் விமல்ராஜ், மகேந்திரன், களவாணி கலை என பலரின் கச்சிதமான நடிப்பும் கதையோட்டத்தில் கலந்திருக்கிறது.

தீபன் சக்கரவர்த்தியின் துள்ளலிசையில் ‘நா மல்லி யார்றா கில்லி’, மயக்கும் விதத்தில் ‘என் விரதங்கள் முடிந்திடுமா?’, கலகலப்புக்கு ‘காடு எங்க வீடு’ என பாடல்களை அடுக்கியிருப்பவர், நிறைவுக் காட்சியின் சிவபெருமானைப் போற்றும் பாடலில் சிலிர்ப்பூட்டுகிறார். ஒன்றிரண்டு பாடல்கள் எங்கோ எப்போதோ கேட்ட பாடல்களை நினைவூட்டுகின்றன. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டத்தை தேவைக்கேற்ப கையாண்டிருக்கிறார்.

எம் சுகுமாரின் கேமரா கதை நிகழ்விடங்களில் கழுகுப் பார்வையில் பரவிப் பாய்ந்து படத்தை பிரமாண்டமான படைப்பாக்கியிருக்கிறது.

மதவெறிச் சண்டைகள், கொலைவெறித் தாக்குதல்கள், உயிர் பறித்தல்கள், பழி வாங்குதல்கள் என பரபரப்பாக பயணிக்கும் இந்த கதையில் ஹாரர் அனுபவமும் கிடைத்து விடுகிறது.

கொலை யாரால் நடக்கிறது என்பதை முன்னதாக ஆடியன்ஸுக்கு தெரிவித்துவிட்டு, நடக்கும் கொலைகளுக்கான நம்மால் சுலபமாக யூகிக்க முடிந்த காரணத்தை படத்தின் பின்பாதியில் காண்பித்து கதையை நகர்த்தியிருப்பது படத்தின் பலவீனம்.

படத்தின் உருவாக்கத்தில் உள்நோக்கம் அதுஇதுவென சிலபல சங்கதிகள் தென்பட்டாலும், இயல்புக்கு பொருந்தாத ‘இதெல்லாம் அதிகப்படி’ என சொல்லவைக்கும் காட்சிகள் கலந்திருந்தாலும்,

அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் கடந்து வந்தால் ‘மதங்களைக் கடந்த மனிதர்களே பூமிக்கு தேவை’ என்ற, படத்தின் மூலம் சொல்லவரும் கருத்தை வரவேற்கலாம்!

பரமசிவன் பாத்திமா _ மதம் ஒழிக; மனிதம் வாழ்க!

-சு.கணேஷ்குமார் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்