Home விமர்சனம் தக் லைஃப் சினிமா விமர்சனம்

தக் லைஃப் சினிமா விமர்சனம்

கமல்ஹாசன் நடிப்பில் மீண்டுமொரு தாதாயிஸப் படம். எனர்ஜிடிக் யங்ஸ்டார் சிலம்பரசன் டி ஆரை இழுத்துப் போட்டு மணிரத்னம் ஆடியிருக்கும் தாறுமாறு தாண்டவமாய் ‘தக் லைஃப்.’

கேங்ஸ்டர் சக்திவேல் (கமல்ஹாசன்), தந்தையை இழந்த சிறுவன் அமரனை (சிலம்பரசன் டி ஆர்) வளர்த்து தன்னைப் போலவே கேங்ஸ்டராக்குகிறார். ஒரு கட்டத்தில் அவர் மீது கொலை முயற்சி நடக்க, அதற்கு அமரன் காரணமாக இருக்கலாம் என அவர் சந்தேகப்படுகிறார். அந்த சந்தேகத்தால் மனதளவில் காயப்படுகிறார் அமரன். அப்படியே கொஞ்சநாள் கடந்துபோக, நிஜமாகவே சக்திவேலை போட்டுத்தள்ளி அவரது இடத்தைப் பிடிக்கும் முடிவுக்கு வருகிறார் அமரன்.

சக்திவேல் சிங்கம் என்றால், அவர் வளர்த்த சிங்கம் அமரன். இரு சிங்கங்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானபின் நடப்பதெல்லாம் ரணகளம்தான்; ரத்தம் தெறிக்கும் சம்பவங்கள்தான்…

அந்த மோதலில் தப்பிப் பிழைத்தது யார் என்பதுதான் பல கொலைகளைக் கடந்தபின் வருகிற கிளைமாக்ஸ்…

உலகநாயகன், இல்லையில்லை ‘விண்வெளி நாயகன்’ கமல்ஹாசன் ஏற்கனவே சிலபல படங்களில் பார்த்த கெட்டப்பில் வருகிறார்; பாசம், நேசம், காதல், முத்தம், ஆதங்கம், ஏமாற்றம் என ஏற்கனவே பார்த்துப் பழகிய நடிப்புப் பங்களிப்பைத் தருகிறார்; ஆக்சன் அதிரடியையும், தான் எதிராளி என கருதுபவர்களை விதவிதமாக கொல்வதையும் முன்பே ஒன்றிரண்டு படங்களில் செய்ததைப் போலவே ரசித்துச் செய்திருக்கிறார்.

‘கேங்ஸ்டர் பொழப்புன்னா இப்படித்தான்; இதுல நிரந்தர எதிரி நிரந்தர நண்பன்னு யாரும் கிடையாது; நாம பவர்ஃபுல்லா இருக்கணும்னா யாருடன் வேண்டுமானாலும் கை குலுக்கலாம்; யாரையும் பலி கொடுக்கலாம்’ என்ற கொள்கைகளை மனதில் வைத்துக்கொண்டு களமாடுபவராக சிலம்பரசன் டி ஆர். படு ஸ்மார்ட்டான ஸ்டைலிஷ் லுக்கில் வருபவர் கமல்ஹாசனுடன் மோதும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். காதல், சென்டிமென்ஃப்ட் என மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

கல்யாணக் கொண்டாட்ட பாடலில் கமலும் சிம்புவும் ஜிங்கு ஜிங்குச்சா என ஆடும் ஆட்டம் உற்சாகத்துக்கு கேரண்டி.

த்ரிஷா கமல்ஹாசனின் ஆசை நாயகியாக, சிலம்பரசன் ஆசைப்படும் நாயகியாக எப்போதும்போல் மென் புன்னகை சிந்தியபடி வந்துபோகிறார். பெரிய பொறுப்போ கடமையோ எதுவும் அவருக்கில்லை.

கதையின் மையப்புள்ளிகளான இரு தாதாக்களையும் சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து விடலாம் என்ற நினைப்போடு அப்படியும் இப்படியுமாய் தலை காட்டுவதோடு முடிந்துபோகிறது அசோக் செல்வனுக்கு கொடுக்கப்பட்ட வேலை.

சிலம்பரசனுக்கு தங்கை என்றாலும் இரண்டொரு காட்சிகளில் ஜஸ்ட் தலைகாட்டுவதும், ஒரேயொரு காட்சியில் விழிகளில் சில துளிகள் கண்ணீர் ததும்புவதுமாய் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழலும்படி அமைந்திருக்கிறது ஐஸ்வர்யா லெஷ்மியின் கதாபாத்திரம்.

கமல்ஹாசனின் மனைவியாக அபிராமி. யாரோ ஒரு பெண்ணுடன் நாள்கணக்கில் பொழுதைக் கழித்துவிட்டு வரும் புருசனிடம் லேசாக கோபப்படுவதைத் தாண்டி வேறெதுவும் செய்ய முடியாமல் சகித்துக்கொண்டு வாழ்கிற மனநிலையை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.

ஆளுமை மிகுந்த நபராக மாறுவதற்காக சொந்த தம்பியை கொல்லத்துடிக்கும் நாசரின் வில்லத்தனம் கம்பீரம்.

ஜோஜு ஜார்ஜ், பக்ஸ், மகேஷ் மஞ்ச்ரேக்கர் என மற்றவர்கள் கதையோட்டத்திற்கு நல்ல பொருத்தம்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘ஜிங்கு ஜிங்குச்சா’ பாடல் புத்துணர்ச்சி தருகிறது.  ‘அஞ்சு வண்ண பூவே’ உட்பட மற்ற ஒன்றிரண்டு பாடல்கள் ஏனோதானோவென்று எட்டிப் பார்த்தாலும் மனதுக்கு இதம் தர தவறவில்லை. முத்தமழை பாடலுக்கு படத்தில் இடம் தராமல் விட்டது ரசிகர்கள் கொதிப்படைய உதவியிருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை அன்பறிவின் ஆக்சன் கோரியோகிராபி நிரப்பியிருக்கிறது. அப்படி நிரப்பியதை அசத்தல் ரகம், மிரட்டல் ரகம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லி பாராட்டலாம்.

புதுடெல்லி, கோவா, காத்மாண்டு என கதை நிகழ்விடம் பலதிசைகளை நோக்கிப் பாய அந்த இடங்களை ரவி கே சந்திரனின் கேமரா பிரமாண்டமாக்கியிருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் உயரம்தான்; தரம்தான். கமல், சிம்பு ரசிகர்களுக்கு அது மட்டுமே போதாதே மணி சார்.

விண்வெளி நாயகனிடம் ஒரு வேண்டுகோள்… ‘தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா மாதிரி ஒரு படம் பண்ணுங்க சார்.’

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்