‘பரம்பொருள்’ சினிமா விமர்சனம்

இது பரபரப்பான திருடன் போலீஸ் கதை. போலீஸே திருடனாக மாறி, திட்டம்போட்டு தில்லுமுல்லு செய்வது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.

இது விறுவிறுப்பான திருடன் போலீஸ் கதை. ஏற்கனவே சாதா திருடனாக இருக்கிற ஒரு போலீஸ், தன்னுடன் தொழில்முறை திருடனை கூட்டு சேர்த்துக் கொண்டு ஸ்பெஷல் சாதா திருடனாக அவதாரமெடுப்பது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.

இது சூடான சுவையான திருடன் போலீஸ் கதை. பாய்வதற்காக மட்டுமே பதுங்க வேண்டிய போலீஸ் இந்த கதையில் திருடனாக இருப்பதால், பாய்வதற்கு வழியின்றி பதுங்குவதை மட்டுமே விதவிதமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.

இது திருப்பங்கள் நிறைந்த திருடன் போலீஸ் கதை. நேர்மையாக கடமையாற்ற வேண்டிய போலீஸ் அதற்கு மாறாக செயலாற்றுவது, நிஜத் திருடனுக்குள்ளிருந்து நேர்மையானவன் எட்டிப் பார்ப்பது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.

பில்டப்பை பார்த்தால் கொஞ்சம் ஓவராக தோன்றலாம். ஆனால், படம் அதற்கு குறை வைக்காத அனுபவத்தை தருமென்பது கேரண்டி.

சிறியளவிலான சிலை திருட்டுகளில் ஈடுபடுகிற இளைஞன் ஆதி, ‘நேர்மைன்னா என்ன விலை?’ என கேட்கிற போலீஸ் அதிகாரி மைத்ரேயனிடம் வசமாக சிக்குகிறான். அந்த இருவர் கையில் பழங்கால சிலையொன்று சிக்குகிறது. அதை பெரிய தொகைக்கு விற்க திட்டமிடுகிற மைத்ரேயனுக்கு ரூட் போட்டுக் கொடுக்கிறான் ஆதி. மைத்ரேயனின் சூதுவாது நிரம்பிய போலீஸ் மூளை, ஆதியின் தேர்ந்த திருட்டுத் தனம் இரண்டும் சேர்ந்து சாதித்தது என்ன என்பதே ‘பரம்பொருள்.’ இயக்கம் சி.அரவிந்த்ராஜ்

‘போர் தொழில்’ பட வெற்றிக்குப் பிறகு சுடச்சுட இன்னொரு வெற்றியை சுவைக்கிற வாய்ப்பு சரத்குமாருக்கு. பணத்துக்காக எதையும் செய்யத்துணிகிற போலீஸ் அதிகாரி வேடத்தில், தனக்கிருக்கும் அதிகார பலத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஆபத்து எனும் சுழலில் பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்குவதும், பணிய வேண்டிய தருணத்தில் பணிவதுமாக ரசிக்க வைக்கிறார்.

கதாநாயகனாக அமிதாஷ். தன் தயவு தேவைப்படுகிற பட்சத்திலும் தன்னை அதட்டி மிரட்டுகிற போலீஸை சமாளிக்கும் காட்சிகளில் அலட்டலற்ற நடிப்பால் கவர்கிறார்.

சிலைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதோடு அவற்றை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவராகவும் வருகிறார் கஷ்மீரா பர்தேசி. அவரது அழகை ‘ஒரு சிலையே சிலை செய்கிறதே’ என சிம்பிளாக வர்ணித்து விடலாம்.

போகிறபோக்கில் அமிதாஷுக்கும் கஷ்மீராவுக்கும் இடையில் எட்டிப் பார்க்கும் மெல்லிய காதல் எபிசோடில் இருக்கிறது தென்றலின் குளிர்ச்சி!

ஆரம்பத்தில் பரிதாப முகம் காட்டும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் எதிராளியின் பலவீனமறிந்து வேறொரு பரிமாணத்துக்கு தாவும்போது அட போட வைக்கிறார்.

சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச ஏஜென்ட்களாக வருகிற வின்சென்ட் அசோகனும், பாலகிருஷ்ணனும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம் கச்சிதம். அவர்கள் 50 கோடி ரூபாய் மதிப்புமிக்க சிலைக்கு ஆரம்ப விலையாக 5 லட்சம் நிர்ணயம் செய்து பேரத்தை துவங்குவது கவனம் ஈர்க்கும் காட்சி.

அமிதாஷின் தங்கையாக வருகிற சுவாதிகா, இன்னபிற பாத்திரங்களில் கஜராஜ், சார்லஸ் வினோத், டி.சிவா, ரவி வெங்கட்… நடிப்புப் பங்களிப்பு நிறைவு.

யுவன் சங்கர் ராஜாவின் இசை காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டியிருக்கிறது. எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு இருளிலும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது.

சிலைகளின் தன்மை, அதன் காலகட்டம், வரலாற்றுச் சிறப்பு, அதற்கேற்ப கூடுகிற சர்வதேச சந்தை மதிப்பு, சிலைகளை கடத்துகிறவர்களின் வலைப்பின்னல் என பலவற்றை விலாவாரியாக அலசி ஆராய்ந்திருப்பது திரைக்கதையின் பலம்.

கதை எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் நிறைவடையும்போது வைத்திருக்கிற ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

பரம்பொருள் – திருப்திக்கு பஞ்சமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here