‘பயணிகள் கவனிக்கவும்‘ சினிமா விமர்சனம்
சமூக வலைதள ஆர்வலர்களின் இல்லையில்லை ஆர்வக் கோளாறுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளில் ஒரு துளியை மட்டும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் அணுகாத கோணத்தில் அமைந்த கதைக்கரு…
அலட்டல் ஹீரோயிஸம், அடிதடி ஆர்ப்பாட்டம், குண்டுவெடிப்பு கலவரம், ரத்தச்சகதி களேபரம், டூயட் பாட்டு கிளுகிளுப்பு, ஓவர் ஆக்டிங் வெறுப்பேற்றல், சாதிய வன்முறை சதியாட்டம் என எந்தவித ஜானரிலும் சிக்காத திரைக்கதையோட்டம்…
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர் கருணாகரன். அவர், விதார்த்தை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிவிடுகிறார். அதனால், விதார்த்தின் வாழ்க்கையில் வீசுகிறது புயல். அந்த புயலின் தாக்கம் கருணாகரனின் நிம்மதியைக் கெடுக்கிறது.
கருணாகரன் அப்படி என்னதான் செய்தார்? விதார்த்துக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? படம் போதிக்கிற விழிப்புணர்வுக் கருத்து என்ன? சுருக்கமாக, சுவையாக, சுவாரஸ்யமாக நீள்கிறது ‘பயணிகள் கவனிக்கவும்.’ கவனிக்க வைப்பவர் இயக்குநர் எஸ்.பி. சக்திவேல்!
பேச்சுத் திறனற்ற மாற்றுத் திறனாளியாக விதார்த். வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுத்து நடிக்கிற விதார்த்தின் தேடலில் கிடைத்த மற்றுமொரு பம்பர் பரிசு இது. பதின்பருவத்துப் பிள்ளைக்கு அப்பா, ஏற்ற பாத்திரத்தின் இயல்புக்கேற்ப வார்த்தைகளை மூக்கால் பேசுகிற நேர்த்தி. சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய தவறான செய்தி பரவி பாதிக்கப்படும்போது வெளிப்படுத்துகிற பரிதாப முகபாவம் என யதார்த்த நடிப்பால் கவனம் ஈர்த்து ஏற்ற பாத்திரத்துக்கு கனம் சேர்க்கிறார் விதார்த்.
படத்தின் இரண்டாவது நாயகனான கருணாகரன். தனது லைக் – கமெண்ட் மேனியாவால் சக மனிதனொருவனின் வாழ்வாதாரம் ஆட்டம் காணும்போது மனதளவில் நொறுங்கிப் போவதாகட்டும், மன உளைச்சலால் முதலிரவைக்கூட உற்சாகமின்றி கடப்பதாகட்டும் கருணாகரனின் நடிப்பில் அர்த்தமும் இருக்கிறது ஆழமும் இருக்கிறது.
விதார்த்தின் வாழ்க்கைத்துணையாக லெஷ்மிப்ரியா. கணவனைப் போலவே மாற்றுத்திறனாளி பாத்திரம். அலட்டலின்றி செய்திருக்கிறார்.
திருமண பந்தத்துக்குள் நுழைந்து ஒரு வாரம் கடந்தும் தன்னுடன் ‘அந்த’விதமாகவும் எந்தவிதமாகவும் தொடர்பில்லாமலிருக்கும் கணவனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போது நெகிழச் செய்கிறார் மசூம் சங்கர்.
கருணாகரனின் நண்பனாக வருகிற சரித்திரன், காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிரேம், ஒரு காட்சியில் வந்தாலும் வழக்கறிஞராக கலகலக்க வைக்கிற ஆர்.எஸ். சிவாஜி, விதார்த்தின் அம்மாவாக வருகிற ஸ்டெல்லா ராஜ் படத்தின் இன்னபிற கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு கச்சிதம்; அவர்களின் பங்களிப்பு நிறைவு!
காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிரேம் சிறுகுற்றவாளிகளுக்குத் தருகிற நூதன தண்டனை ரசிக்க வைக்கிறது. விதார்த்தின் மகனாக வருகிற இளைஞனும் ஈர்க்கிறார்.
ஆரவார அமர்க்களமின்றி பூக்களின் இதழ்களுக்கு சொடுக்கு எடுப்பதுபோல் படம் நெடுக பயணிக்கிறது சுமந்த் நாக்கின் பின்னணி இசை!
இந்த படத்தைப் பார்த்தபிறகு, பொது இடங்களில் கண்ணில் படுவதையெல்லாம் போட்டோ எடுக்க ஆர்வம் உந்தும்போது 100 முறை யோசிப்பீர்கள்; எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிரும் முன் 1000 முறை சிந்திப்பீர்கள். பஸ், ரயில் பயணங்களின்போது உங்களையறியாமலே உங்கள் மீது அக்கறை கொள்வீர்கள். படத்தின் நோக்கம் அதுவே!
நிறைவாக ஒருவரி… ஆஹா 100 % தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிற பயணிகள் கவனிக்கவும்; பலரையும் சிந்திக்கத் தூண்டும்!