பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் நடக்கிறது! -‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

ரெயின்போ புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே.’
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா 3. 1. 2022 அன்று மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு, இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. ன்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது
டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான். தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் . இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும். அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது.செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது என்று பல இடங்களிலும் நடக்கிறது.நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள்,நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில் இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார் களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்

சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.

அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன – எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்;நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன.

அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு , நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான்.

இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”
என்றார்.

படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ராஜ்கமல் பேசும்போது, “முதலில் கன்னட நடன இயக்குநர் சதீஷ் அவர்களுக்கு என் நன்றி. ஏனென்றால் அவர் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது .நான் இயக்குநரிடம் கதை கேட்கப் போகவில்லை. வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அப்படித்தான் இந்த படம் எனக்குக் கிடைத்தது

இந்தப் படத்தில் நடித்தபோது இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம்” என்றார்.

கதாநாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதாராவ் பேசும்போது, “என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது.

இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும்.நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும்.யாராவது படத்தை பார்த்த ஒரு பெண் யோசித்துத் திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி” என்றார்.

முன்னதாக இயக்குநர்கள் பேரரசு,போஸ் வெங்கட் டிரெய்லர் பாடல்களை வெளியிட்டார்கள். பதுங்கிப் பாயணும் தல படத்தின் தயாரிப்பாளர் அமீனா ஹூசைன் கலந்து கொண்டு வாழ்த்த்தினார். அவருக்கு தயாரிப்பாளர் வரதராஜ், பிரபஞ்சன் எழுதிய பெண் என்ற புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here