காமெடி தவிர்த்த சீரியஸான பேய்ப் படங்களின் வரிசையில் மற்றுமொரு வரவாக ‘பீட்ஸா 3 – தி மம்மி.’
அஸ்வின் காகுமானு ரெஸ்டாரென்ட் நடத்துகிறார். அந்த ரெஸ்டாரென்டில் திடுதிப்பென எல்லோர் பார்வையிலும் ஒரு ஸ்வீட் தென்படுகிறது. சாப்பிட்டுப் பார்த்தால் சுவை அசத்துகிறது. அதை செய்தது அஸ்வினாகத்தான் இருக்கும் என பணியாளர்கள் நினைக்க, அவர் செய்யவில்லை என்பதும் அது ஏதோவொரு அமானுஷ்ய சக்தியால் செய்யப்படுவதும் தெரியவருகிறது.
அந்த சக்தியால் அஸ்வினுக்கு மன உளைச்சல் தருகிற சில சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கொலைப்பழிக்கு ஆளாகி நிம்மதி கெடுகிறது.
அந்த சக்திக்கு அங்கு என்ன வேலை? ஸ்வீட் செய்து வைப்பதன் நோக்கம் என்ன? நடக்கும் கொலைகளுக்கும், அந்த பழி அஸ்வின் மேல் விழுவதற்கும் காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்த காட்சிகளில் தெரியவர அதிர்ச்சிகள் அணிவகுக்கின்றன… ரெஸ்டாரென்டுக்கு மம்மி பொம்மையொன்று வந்தபின் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்வதால் படத்தின் தலைப்பில் ‘தி மம்மி’ தொற்றிக் கொண்டிருக்கிறது. இயக்கம் மோகன் கோவிந்த்
காதலி இருந்தும் ரொமான்ஸ் அது இது என எதையும் அனுபவிக்க முடியாமல் படம் முழுக்க பயமும் பதட்டமுமாக வலம் வருகிற பாத்திரத்தில் அஸ்வின். கொலைகளுக்கான காரணங்களை சாமர்த்தியமாக காய் நகர்த்தி கண்டுபிடிப்பது, காதலியின் அண்ணன் தரும் நெருக்கடியைச் சமாளிப்பது என நீளும் காட்சிகளில் அஸ்வின் தந்திருப்பது அலட்டலில்லாத நடிப்பு!
ஏற்கும் பாத்திரமாகவே மாறிவிடுகிற காளி வெங்கட், இந்த படத்தில் பேரன்பு கொண்ட அக்கறையான நண்பனாக மாறியிருக்கிறார்!
பேய்களிடம் பேசுவதற்காக மொபைல் ஆப் உருவாக்கி பரிசோதிப்பதை வேலையாக கொண்டிருக்கும் பவித்ரா மாரிமுத்து கதையில் பெரிதாக எதோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவும் நடக்காதது ஏமாற்றம்!
தன் தங்கை தான் பார்த்த மாப்பிள்ளையை தவிர்த்து அஸ்வினை காதலிப்பதால் அவர் மீது கொலைப்பழி சுமத்தி அலைக்கழிக்கும் காவல்துறை அதிகாரியாக கெளரவ் நாராயணன். அணிந்திருக்கும் உடையைப் போலவே நடிப்பிலும் விரைப்பு காட்ட முயற்சித்திருக்கிறார். அதற்கு அந்த கரகர குரல் கொஞ்சமே கொஞ்சம் உதவியிருக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு வருகிற அனுபமா குமார் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கெதிராக கொந்தளிக்கும்போது பாசமான அம்மாவாக மனதில் நிறைகிறார். மகளாக வருகிற அபி நட்சத்ராவின் வெகுளித்தனமான நடிப்பும் ஈர்க்கிறது!
கவிதா பாரதியின் வில்லத்தனம் பரவாயில்லை!
இருளில் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது பிரபு ராகவின் ஒளிப்பதிவு. உருட்டல் மிரட்டல் அதிரடி அட்டகாசம் என களமிறங்காமல் காட்சிகளின் விறுவிறுப்புக்குப் போதுமான பின்னணி இசையை அளவாக தந்திருக்கிறார் அருண் ராஜ்!
வழக்கமான பழி வாங்கல் என்ற கதைக்களத்தில் ரசிகர்களுக்கு மிரட்சியான அனுபவத்தை தர நினைத்த இயக்குநர், அதற்காக 25% உழைத்தால் மட்டும் போதுமென்ற முடிவுக்கு வந்திருப்பாரோ என்னவோ என கருத வைக்கிறது படம் தருகிற அனுபவம்!