‘போத்தனூர் தபால் நிலையம்‘ சினிமா விமர்சனம்
வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. அப்படியான சம்பவம் தபால் நிலையத்தில் அதுவும் செல்போன், சிசிடிவி என எதுவும் நவீன வசதிகள் எதுவுமில்லாத காலத்தில் நடந்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தை பொதிந்து தருகிறது ‘போத்தனூர் தபால் நிலையம்’
அது கோவை மாவட்டம் போத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள பத்துப் பதினைந்து பேர் பணிபுரியும் தபால் நிலையம். அதன் லாக்கரில் இருந்த லட்சக்கணக்கான பணம் ஒருநாள் மர்மமான முறையில் காணாது போகிறது. இந்த பிரச்னையில், ஹீரோவின் அப்பா குற்றவாளியாகி ஜெயிலுக்குப் போகவேண்டிய சூழ்நிலை. ஆனால், அவர் மீது தவறில்லை என்பதை அறிகிற ஹீரோ, பணம் கொள்ளை போனது எப்படி என தனது வாழ்க்கைத் துணையுடனும் நண்பனுடமும் சேர்ந்து துப்பு துலக்குகிறார். அதில் தபால் நிலையத்தின் கேஷியர் அந்த பணத்தை திருட திட்டமிட்டதும், திட்டமிட்டமிட்டபடி அவர் அந்த பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் தெரியவருகிறது.
அதே தபால் நிலையத்தில் பணிபுரியும் இன்னொரு ஆசாமி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர். அவர் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தால் அவர் தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்கிறார்.
கள்ள நோட்டை புழக்கத்தில் விடுகிற மற்றொரு நபரும் சந்தேக வட்டத்துக்குள் வருகிறார். காணாது போன பணத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறது விசாரணையின் முடிவு.
தேடல் தொடர, துப்பாக்கிச் சூடுவரை ஏதேதோ நடக்க, ஒருவழியாக காணாமல் போன பணம் கிடைக்கிறது. யாரிடமிருந்து கிடைக்கிறது?
கிடைத்த அந்த பணம் மீண்டும் தபால் நிலையத்துக்கு போகவில்லை. ஏன்?
சந்தேக வட்டத்திலிருந்து ஹீரோவின் அப்பா வெளிவருகிறார். அதற்காக ஹீரோ சம்பவமொன்றை அரங்கேற்றுகிறார். அது என்ன?
கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணம் கடைசியில் யார் கைக்கு போகிறது? அது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.
இள வயதுக்காரர், ஒல்லியான தேகம், மீசை மழித்த முகம் என அம்மாஞ்சித் தோற்றத்திலிருக்கிறார் கதைநாயகன் பிரவீன். குற்ற வளையத்தில் சிக்கிக் கொண்ட அப்பாவை மீட்பதற்கான வழிகளை யோசிப்பது, குற்றவாளியைக் கண்டறிய சாதுர்யமாக திட்டமிடுவது என நீளும் அத்தியாயங்களில் அலட்டலற்ற அளவான நடிப்பால் கவர்பவர் கிளைமாக்ஸில் அடப்பாவி’யாய் மாறுவது டிவிஸ்ட். படத்தை இயக்கியிருப்பதும் இவரே!
(இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.
இவருடைய தந்தை தபால் நிலையத்தில் கேஷியராக பணிபுரிந்தவர். அவர் தன் பணிக்காலத்தில் சந்தித்த சம்பவங்களை அவ்வப்போது பிரவீனிடம் பகிர்ந்துகொள்ள, அவற்றைக் கேட்டுக் கேட்டு அதன் பாதிப்பில் உருவான கதைக்களம் இது.)
எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் லட்சணமாக இருக்கிறார் அஞ்சலி ராவ். ஒரு காட்சியில் அவர் கராத்தே பலம் காட்டுவது கெத்து.
வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து, சம்பத் குமார் என படத்தின் ஏனைய கதாபாத்திரங்களின் நடிப்புப் பங்களிப்பு நேர்த்தி.
கதையின் முன்பாதியில் ஹீரோ சுயதொழில் தொடங்குவதற்காக பேங்க்கில் லோன் கேட்டு, அதற்கு தகுதியிருந்தும் அலைக்கழிப்படுகிறார். அதன் பின்னணியில் இருக்கிற காரணம் அக்குறும்பு அநியாயம்; கலகலப்பு களேபரம்!
1990 காலகட்டத்தை காட்சிகளில் கொண்டுவருவதற்காக உழைத்திருக்கிற கலை இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
இரண்டாம் பாகத்துக்கான லீடும் படத்தில் உண்டு. அது எதிர்பார்ப்பைத் தூண்டுகிற விதமாக இருப்பது சிறப்பு!
தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்படம் இது. மே 27-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிற இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். சுவாரஸ்யமான அனுபவம் கேரண்டி!