ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘விக்ரம்’.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என பலரும் நடித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதிய ‘பத்தல பத்தல’ பாடல்காட்சி சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. பாடலின் கமலின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படம் வரும் ஜூன் 3-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “கமல் சாரை பார்த்துதான் சினிமாவை கற்றுக் கொண்டேன். ‘விக்ரம்’ படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்” என்றார்.
கமல்ஹாசன் பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதை செய்திருக்கிறோம்.
அகண்ட திரையில் இந்தப் படத்தை பாருங்கள். நான் ஒரு ரூபாய் செல்வு செய்தால் என்னுடைய ரசிகர்கள் 20 ரூபாய் செலவு செய்வார்கள். என்னிடம் பெரிய அளவில் பணம் இல்லை. என்னுடைய வருமானத்தை நான் இந்த மக்களுக்காகவேதான் பயன்படுத்துவேன்.
இந்தப் படத்தில் அந்த அளவுக்கு கடின உழைப்பை போட்டுள்ளனர். நல்ல படங்கள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
படத்தில் கடைசி நிமிடங்களில் சூர்யா வருவார். அவரது கேரக்டர், படத்தின் கதையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அது ‘விக்ரம்-3’-வது பாகமாகக்கூட இருக்கலாம்.
லோகேஷ் கனகராஜூக்கு நன்றி சொன்னால் அன்னியப்பட்டு போவார் என்பதால் சொல்லவில்லை. ‘விக்ரம்-3’ படத்திற்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குநர். ஏற்கெனவே நான் முடிவு செய்துவிட்டேன். நிச்சயம் இந்த ‘விக்ரம்’ வெற்றி படமாக அமையும்…” என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது “இந்தியன்-2’ படத்தை மீண்டும் தொடர்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கிறது” எனவும் தெரிவித்தார்.