‘பொன்னியின் செல்வன்’ சினிமா விமர்சனம்

தமிழகத்தில் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, அந்த நாவலின் தரத்துக்கும் தகுதிக்கும் பெருமைக்கும் குந்தகம் ஏற்படாமல் திரைவடிவம் தந்திருக்கிறார் மணிரத்னம்!

தங்களது சாம்ராஜ்யத்துகெதிரான சதித் திட்டங்கள் சோழ தேசத்தின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் கவனத்துக்கு வருகிறது. அந்த திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள தனது நெருங்கிய நண்பன் வந்தியத் தேவனை சதிகாரர்களின் இருப்பிடத்துக்கு அனுப்புகிறான்.

அப்படி அனுப்பப்படும் வந்தியத் தேவன் சந்திக்கும் நபர்கள், சவால்கள், அறிகிற விஷயங்களைச் சுற்றிச் சுழலும் கதையோட்டம், சோழ தேச சாம்ராஜ்யத்தைக் கட்டியாள்கிறவர்களில் ஆபத்தில் சிக்குபவர்கள் யார் யார், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்வதே பொன்னியின் செல்வன் முதல் பாகம் தருகிற அனுபவம்!

ஆதித்த கரிகாலனாக விக்ரம். உடலின் அத்தனை செல்களிலும் அதீத பரபரப்பு, கண்களில் போர் வெறி, போர்க்களத்தில் அசுரப் பாய்ச்சல் என கட்டமைக்கப்பட்ட அந்த பாத்திரத்தில் விக்ரம் தந்திருக்கும் நடிப்புப் பங்களிப்பு 100% அர்ப்பணிப்பு!

கதையின் முக்கிய திருப்பங்களைத் தருகிற நயவஞ்சக நந்தினியாக ஐஸ்வர்யா ராய். தனது அப்படியும் இப்படியுமாய் மெல்ல அசையும் விழிகளின் வழி வில்லித்தனம் காட்டும்போது தேர்ந்த நடிப்பு!

கடைந்தெடுத்த அழகு, கவர்ந்திழுக்கும் கண்கள், மிடுக்கான நடை, மிதப்பான பேச்சு சரிவிகித கலப்பில் குந்தவையாக திரிஷா!

வந்தியத் தேவன் பாத்திரத்தில் கார்த்தி. கனிவுப் பேச்சு, காதல் பார்வை வீச்சு என கவனம் ஈர்க்கிறது அவரது உடல்மொழி. எதிராளிகளின் முகாமில் பணிந்துப் பாய்கிற காட்சிகளில் கார்த்’தீ.’

நடையில் வாட்டசாட்டம், மீசையில் வாளின் கூர்மை, வந்துவிழும் வார்த்தைகளில் தெளிவு, செறிவு… பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் பொருத்தமான தேர்வு.

சிறிய பழுவேட்டரையர் பார்த்திபனின் பங்களிப்பும் நிறைவு.

கதையோட்டத்தின் நகைச்சுவைக்கு உதவுவதோடு புத்தரை பெருமாள் என்று சொல்லி அறிவுக் கண்களைத் திறக்க முயற்சிக்கிற ஆழ்வார்க்கடியானாக ஜெயராம். தொப்பை பெருத்த உடம்பை தூக்கமுடியாமல் தூக்கி நடக்கும் விதமும், வசன உச்சரிப்பும் தனித்துவம்!

கதை நாயகனாக, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி. அவரது வசீகரத் தோற்றத்தில் வெளிப்படும் வாலிப முறுக்கும், மென் புன்னகையும் அத்தனை அழகு. அந்த வாள் சண்டைக் காட்சியின் சீற்றம் ஏற்றம்!

கதையில் சிறியதும் பெரியதுமாய் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்… அவற்றை சரியாக நிரப்ப பிரபு, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, கிஷோர், சோபியா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, லால், மோகன் ராம், வினோதினி, நிழல்கள் ரவி, அஸ்வின், ரகுமான் என ஏராளம் பேர்…

மண்வரை பணிபவனே வான் வரை எழுவான்! புண்பட்ட யானைதான் புலிக்கு மிகப்பிபெரிய எதிரி! வசனங்களில் கருத்தாழம்!

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பெருத்த வரவேற்பைச் சம்பாதித்த பாடல்கள், படத்தில் காட்சியாக்கப்பட்ட விதம் மனதில் நிறைகிறது. பின்னணி இசையிலும் கம்பீரம் காட்டியிருக்கிறார் ரஹ்மான்!

காட்சிகளின் பிரமாண்டம், நேர்த்தியான சிஜி, கச்சிதமான எடிட்டிங் படத்தின் பலம். ஒளிப்பதிவுக்கும் தனி பாராட்டு!

கிட்டத்தட்ட போர்க்களக் காட்சிகள் இதற்கு முன் வந்த வரலாற்றுப் படங்களில் எப்படியெல்லாம் இருந்ததோ அப்படியே இருப்பது சற்றே சலிப்பு தரலாம்.

இதே மாதிரியான கதையம்சத்தோடு இதற்கு முன் வந்த எந்தவொரு படத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்காமலிருப்பது நல்லது.

இரண்டாம் பாகத்தில் காத்திருக்கின்றன ஆச்சரியங்கள்!

சோழம் – ஆழம்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here