‘புத்தம்புது காலை விடியாதா’ சினிமா விமர்சனம்
கடந்த வருடம் வெளியான ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜியின் தொடர்ச்சியாக ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக ‘புத்தம் புது காலை விடியாதா.’ அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காவல்துறையின் கடைநிலைப் பணியாளர்கள் இருவருக்கிடையே மலரும் காதலையும் அதை சார்ந்தும் சுற்றிச் சுழலும் படம் முகக்கவச முத்தம்’. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படம், கொரோனா காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், காவல்துறை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை அலசுகிறது. முருகன் – குயிலி காதாபாத்திரங்கள் கவர்கின்றன. கதையின் போக்கு விளம்பரப் படம் போலிருந்தாலும் எடுத்தாண்ட விஷயங்களைப் பாராட்டலாம்!
லாக்டெளன் காலகட்டத்தின் தனிமை, மாறிப்போன கலை கலாச்சார விழாக்கள், துக்க நிகழ்வுகளில் மக்களின் அந்நியப் பட்டிருக்கும் மக்களின் மனது என உண்ரவுபூர்வமான அத்தியாயங்களின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது லோனர்ஸ்.’ அர்ஜூன் தாஸ் – லிஜோ மோல் ஜோஸ் என இரண்டு கதாபாத்திரங்களின் வழியாக ஊரடங்கு கால தனிமை தரும் மன உளைச்சலுக்கு தீர்வு என்ன என்பதை எடுத்துச் சொல்லியிருப்பது நேர்த்தி. உயிரோட்டமான படங்களை இயக்கிவருகிற ஹலிதா ஷமீமின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படம்.
‘மௌனமே பார்வையாய்’ வித்தியாசமான கதைக்களம். யஷோதா – முரளி தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் பேசிக் கொள்வதை தவிர்த்தவர்கள். இருமுதல், எழுதிக் காட்டுதல் என தொடர்பிலிருப்பவர்கள். இந்த நிலையில் யஷோதாவை கொரோனா தொற்றுகிறது. கோவிட் தொற்று ஏற்படுகிறது. இனியாவது இருவரும் பேசுவார்களா என எதிர்பார்ப்பை எகிறச் செய்து நகரும் காட்சிகளின் நிறைவில் அந்த வயதான தம்பதியின் மெளனம் உடைபடும் இடம் உயிர்ப்பு! இயக்கம் மதுமிதா
ஓரின ஈர்ப்பை மையப்படுத்திய படம் `தி மாஸ்க்’ சூர்யா கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் அர்ஜூன் தனது அந்த விதமான உறவு பற்றி தன் வீட்டுக்குத் தெரியப்படுத்த தயங்குகிறான். அவனது இந்த போக்கு அர்ஜுனின் இணைக்கு வெறுப்புணர்ச்சியை உருவாக்குகிறது. இந்த சூழலில் தனது பால்ய கால நண்பனைச் சந்திக்கிறான் அர்ஜூன். அதன்பிறகு என்னவானது என்பதே மிச்சசொச்சம். திரைக்கதையின் போக்கு அப்படி இப்படி இருந்தாலும் கிளைமாக்ஸ் ஈர்க்கிறது. வில்லங்கமான கதையை இந்த ஆந்தாலஜியில் இணைத்திருப்பது தனித்துவம்!
தூங்கிக்கொண்டே இருக்கிற கதாபாத்திரத்தை பிரதானமாக கொண்டு, ரிச்சார்ட் ஆண்டனி இயக்கியிருக்கும் படம் ‘நிழல் தரும் இதம்.’ தான் தூக்கத்தில் இருப்பதை கற்பனையில் தோன்றும் மாஸ்க் அணிந்த மனிதர்கள் மூலமே படம் பார்ப்போர் தெரிந்துகொள்வது திரைக்கதையின் தனித்துவம். அதுவே கிளைமாக்ஸ் காட்சியை இயந்திரத்தனமாக மாற்றிவிடுவது துரதிஷ்டம். வித்தியாசமான கோணத்தில் அமைந்த விதத்தில் இந்த ஆந்தாலஜி தொகுப்பில் கணிசமாக கவனம் ஈர்ப்பது உறுதி!
பின்னணி இசை, எடிட்டிங் என தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு நேர்த்தி.
அலட்டல் அதிரடி மசாலா சங்கதிகள் தவிர்த்த சுவாரஸ்யமான அனுபவங்களை விரும்புவோருக்கு ‘புத்தம்புது காலை விடியாதா’ நல்ல தேர்வு!