வித்தியாசமான ஹாரர் காமெடி சப்ஜெக்டில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிப்பப்பரி.’
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக கலக்கிய மகேந்திரன் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் நா. அருண் கார்த்திக் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார்.மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டதிலிருந்தே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இசை ரசிகர்களின் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது.
கிராம பின்னணியில் யூடுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் ரசிகர்களை அசத்த வருகிறது “ரிப்பப்பரி” திரைப்படம். தற்போது வெளியாகியுள்ள டீசர் இதை உறுதி செய்வதாக உள்ளது. அதிலும் குரங்கு பொம்மை டீசரிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதோடு, படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது.
திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகமெங்கும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.