சசிகுமார் நடிப்பில், இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி பரவலான வரவேற்பையும் விமர்சனங்களில் பெரியளவில் பாராட்டுக்களையும் பெற்ற பாராட்டுக்கள் அயோத்தி’ திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீட்டினை பெற்றுள்ள அயோத்தி படத்தில் சசிகுமாருடன் ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, தேசபக்தர் பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது. மீதிக் கதையானது, இரண்டு குழந்தைகள் தங்கள் அதீத மதவெறி பிடித்த தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.
மதம், மூடநம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சினைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாக பேசுகிறது அயோத்தி திரைப்படம். மேலும், மொழி, புவியியல் மற்றும் மத அரசியல் ஆகியவை படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நடிகர் சசிகுமார் பேசும்போது, “மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான ‘அயோத்தி’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு ‘வாழ்க்கை’ என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190+ நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ZEE5 தளத்தில் இந்த படம் வெளியிடப்படுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள்” என்றார்.
நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, “படத்தில் எனது ஷிவானி கதாபாத்திரத்திற்கு நடப்பது உண்மையிலேயே ஒரு சர்ரியல் அனுபவம். அயோத்தியின் கதை மிக அற்புதமானது. ஓடிடி வெளியீட்டின் மூலம் எங்கள் படம் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக்கதை உங்கள் மனதில் மாற்றம் தரும். இது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பார்க்கக்கூடிய அற்புதமான திரைப்படமாக இருக்கும்” என்றார்.
இந்த படத்தின் உணர்ச்சிமயமான காட்சிகளை என்.ஆர். ரகுநந்தனின் பின்னணி இசை வேறொரு உயரத்துக்கு உயர்த்துகிறது, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.