நம் முழு நாடும் இந்திய இராணுவத்திற்கு நிறைய கடன்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து மகிழ்ச்சியுடன் நாட்டின் பாதுகாவலர்களாக இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள்.
கடந்த 18 ஆண்டுகளாக ‘காதல்’, ‘ஈரம்’, ‘கோ’, ‘கற்றது தமிழ்’, ‘100’, ‘144’, ‘தும்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தேர்ந்த நடிப்பால் அறியப்பட்ட நடிகர் காதல் கண்ணன், தற்போது ‘ராணுவன்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார். விமல், பிரவீன், சிவா தயாரித்துள்ளனர்.
பாடல் பற்றி பேசிய காதல் கண்ணன், “எனக்கு எப்போதுமே சமூக ஆர்வலராக பணி செய்ய விருப்பமுண்டு. அந்த அர்ப்பணிப்புடன் சரியான பாதையில் பயணித்து வருகிறேன். இது தொடர்பாக ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் ‘கௌரவ டாக்டர்’ பட்டத்தையும், தொடர்ந்து ‘சிறந்த சமூக ஆர்வலர்’ மற்றும் ஹெச் ஆர் ஓ இன்டர்நேஷனல் வழங்கிய ‘சிறந்த நடிகருக்கான விருது’ உள்ளிட்ட மதிப்புமிக்க அங்கீகாரங்களையும் பெற்றுள்ளேன்.
நம் நாட்டைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்திய ராணுவப் படையை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை சரியான முறையில் செலுத்த விரும்பினேன். அப்போதுதான் நான் இந்தத் திட்டத்தில் இணைந்தேன்.
விமல் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிரவீன் வரிகள் எழுதியுள்ளார். அதை ஒருங்கிணைத்து இயக்கும் மகிழ்ச்சியான பணி எனக்கு வழங்கப்பட்டது. நான் மகிழ்ச்சியடைய முதல் காரணம் இந்திய இராணுவப் படைக்கு நன்றி செலுத்துவது. மற்றொன்று, இந்தப் பாடலின் மூலம் நான் இயக்குநராகப் பயணத்தைத் தொடங்குகிறேன். இந்த பாடல் முழுக்க முழுக்க அர்ப்பணிப்புக்காக மட்டுமே. இதன் பின்னால் எந்தவொரு வணிக நோக்கமும் இல்லை.பாடலை ஆகஸ்ட் 15, 2023 அன்று சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறோம். அனைத்து திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன் பாடல் திரையிடப்பட்டால் அது இந்திய இராணுவத்தினருக்கு கொடுக்கும் அற்புதமான மரியாதையாக இருக்கும்” என்றார்.
இந்தப் பாடலில் காதல் கண்ணனுடன் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். சபீர் அலிகான் ஒளிப்பதிவு செய்துள்ளார். மொத்த படப்பிடிப்பும் 3 நாட்களில் முடிந்துவிட்டது. பாடலின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் வெளியிட்டார் என்பது பெருமிதமான செய்தி.