ராஜபீமா சினிமா விமர்சனம்

‘பிக் பாஸ்’ ஆரவ், உடலாலும் பலத்தாலும் விலங்குகளில் பிக்பாஸாக இருக்கிற யானையோடு இணைந்து நடித்துள்ள படம். ‘ஓவியா ஆர்மி’ பவர்ஃபுல்லாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட ‘ராஜபீமா.’

சிறுவன் ராஜா அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கிறான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒரு யானையுடன் தொடர்பு உருவாகிறது. ராஜாவுக்கு யானையையும், யானைக்கு ராஜாவையும் பிடித்துப் போக, ராஜாவின் அப்பா யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுக்கிறார். அதற்கான முறையான அனுமதியும் பெறுகிறார். யானைக்கு பீமா என பெயர் வைக்கப்படுகிறது. ராஜாவும் பீமாவும் உயிருக்கு உயிராக பழகுகிறார்கள். ராஜா வளர்ந்து வாலிபனாகிறான்.

ஒரு கட்டத்தில் ராஜா, யானைகளைக் கொன்று தந்தம் கடத்துபவர்களை காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான். கொஞ்ச நாட்கள் கடந்தபின், மதம் பிடித்துள்ளது என்று சொல்லி அரசு அதிகாரிகள் பீமாவை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்துப் போகிறார்கள். ராஜா பதறியடித்துக் கொண்டு முகாமுக்கு ஓடினால், பீமா அங்கு இல்லையென்பது தெரியவருகிறது.

கதை இப்படி நகர, பீமா காணாமல் போனதற்கு தந்தம் கடத்துபவர்களின் சதிதான் காரணமாக இருக்கும் என்று யூகித்தால், அப்படியான வழக்கமான கதை இதுவல்ல என்று சொல்லி வேறொரு ரூட்டில் வேகமெடுக்கிறது திரைக்கதை.

பீமா காணாமல் போனதற்கு யார் காரணம்? காணாமல் போன பீமாவுக்கு என்னவானது? என்பதெல்லாம் கிளைமாக்ஸில்… இயக்கம் நரேஷ் சம்பத்

ராஜாவாக ஆரவ். மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அவர் யானை மீது பாசம் காட்டும்போது நெகிழ வைத்து, வில்லன்களுடன் மோதுகிற ஆக்சன் காட்சிகளில் உடல்பலம் காட்டி, காதல் காட்சிகளில் பொருத்தமாக நடித்து கவனம் பெறுகிறார்.

ஓவியா, ஆரவுக்கு ஜோடியாக வருவார் என்று பார்த்தால் கதையோடு பின்னிப்பிணைந்த ஒரு பாடலுக்கு கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி ததும்ப  ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார்.

ஆஷிகா நெர்வாலுக்கு சினிமா வழக்கப்படி ஹீரோவை காதலிக்கிற பழகிப்போன வேலைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக செய்திருப்பதை பார்க்க முடிகிறது.

ஜோதிடத்தை நம்பி எதையும் செய்யத் தயாராக இருப்பவராக, அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஸ்கெட்ச் போடுபவராக பல வில்லங்கமான பொறுப்புகள் கே எஸ் ரவிக்குமாருக்கு. தினமும் ஒரு நிறத்தில் துண்டு போட்டுக் கொண்டு வலம் வருகிற அவர் தன் பாத்திரத்துக்கு தேவையான வில்லத்தனத்தை பாஸ்மார்க் போடுகிற அளவுக்கு பரிமாறியிருக்கிறார்.

அமைச்சரின் வளர்ப்பு மகனாக வருகிற யோகிபாபு ‘பொள்ளாச்சியின் பிரதமர்’ என அல்லக்கைகளால் கொண்டாடப்படுகிற அளவுக்கு காட்டுகிற பந்தா கலகலப்புக்கு உதவுகிறது.

இளமையின் செழுமையை பந்தி வைப்பதற்காக மட்டுமல்லாது கதையின் முக்கியமான தருணங்களிலும் பங்களித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நாயகனின் தந்தையாக நாசர், மாமாவாக  அருவி மதன், அரசியல்வாதியாக சயாஜி ஷின்டே ஆகியோருடன் ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் என இன்னபிற நடிகர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

பீமாவாக வருகிற யானையின் ஒவ்வொரு அசைவும் கண்களை உற்சாகமாக்கி மனதில் இடம்பிடிக்கிறது.

யானையைப் போற்றுகிற ‘தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே’ பாடல் பிரபல நாட்டுப்புறப் பாடலின் நகலாக அமைந்து உற்சாகமூட்ட, ‘மஞ்சனத்தி வாசத்துல’ பாடலை இதமூட்டும் மெட்டில் தவழ விட்டிருக்கிறார் சைமன் கே கிங். பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு கதையோட்டத்திற்கு பரபரப்பு கூட்டுகிறது.

ஒளிப்பதிவு தரம்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்திய கதைக்களம் பழையதுதான் என்றாலும், அதில் மூடநம்பிக்கை அதுஇதுவென விறுவிறுப்பு சங்கதிகளைக் கலந்திருப்பதால் ராஜபீமாவுக்கு ‘யானை’ பலம் கிடைத்திருக்கிறது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here