Home விமர்சனம் ரஜினி கேங் சினிமா விமர்சனம்

ரஜினி கேங் சினிமா விமர்சனம்

குபீர் சிரிப்பும் பகீர் சம்பவங்களுமாக ராங்கான மனிதர்கள் கேங்காக சுற்றித்திரிகிற ‘ரஜினி கேங்.’

ஊரைவிட்டு வெளியேறி கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்த அந்த காதல் ஜோடி ஒரு காரில் லிஃப்ட் கேட்க, டிரைவர் ஏற்றிக் கொள்கிறார். அடுத்ததாக லிஃப்ட் கேட்ட இன்னொருவருக்கும் காரில் இடம் கிடைக்கிறது. காதல் ஜோடி சேலம் செல்ல திட்டமிட்டிருக்க, அந்த கார் போய்ச் சேருமிடம் ஏற்காடு.

அங்கு போனபின்தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் தன்னை யாரென்றே தெரியாத வெறொரு உலகத்தில் வாழ்கிறவர் என்பதும், தங்களைப் போல் லிஃப்ட் கேட்டு காரில் வந்தவன் திருடன் என்பதும், பயணித்து வந்த கார் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அதை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது.

இப்படி தங்களைச் சுற்றி வளைத்த பிரச்சனைகளை காதல் ஜோடியால் சமாளிக்க முடிந்ததா? கல்யாணம் செய்துகொள்ள முடிந்ததா என்பதே கதையோட்டம்…

கதாநாயகனாக ரஜினி கிஷன். சற்றுமுன் நடந்ததைக்கூட மறந்துவிடுகிற நபராக காதல், காமெடி, ஆட்டம் பாட்டம் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அடித்திருப்பதை ரசிக்க முடிகிறது.

அவரது காதலியாக திவிகா, அளவாக காதலிக்கிறார்; இளமையின் செழுமை வெளிப்படும்படி நடமாடுகிறார். பேயாக மாறி ரகளை செய்கிறார். அத்தனையும் அசத்துகிறது.

முனீஷ்காந்த்தின் காமெடி பங்களிப்பு பரவாயில்லை ரகம். தாலி திருடனாக கல்கி ராஜா கலகலப்பூட்டுவது குறைவென்றாலும் கதையின் ஜானரை மாற்றுகிற வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மொட்ட ராஜேந்திரன் லேடி கெட்டப்பிலெல்லாம் வந்து சிரிப்பூட்ட முயற்சிக்கிறார்.  ஹீரோயினின் தாய்மாமனாக கூல் சுரேஷ் இதுக்கு வணக்கத்த போடு; அதுக்கு வணக்கத்த போடு என திரைப்படங்களுக்கான புரமோஷனில் பேசுகிற ஸ்டைலில் டயலாக் விட்டுக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக திரிகிறார். சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. அமைச்சராக வருகிற லொள்ளுசபா மனோகரிலிருந்து இன்னபிறரின் பங்களிப்பு போதுமானதாக இருக்கிறது.

பின்னணி இசையால் காதுகளைக் கிழிக்கிற எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு குஷியாகிற அளவில் இசையமைத்திருக்கிறார். கலர்ஃபுல்லாக அமைந்திருக்கிற காட்சிகளை அதன் தன்மையோடும், ஏற்காட்டின் இயற்கை வளத்தை ஏரியல் வியூவிலும் பதிவு செய்து கண்களுக்கு இதம் தருகிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார்.

காதல் வேணுமா, இருக்கு. காமெடி வேணுமா, இருக்கு. ஹாரர் வேணுமா, இருக்கு. எளிமையான நடிகர் நடிகைகளின் ஒருங்கிணைப்பில் அப்படியொரு படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் ‘ரஜினி கேங்’கில் இணையலாம்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்