பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சைக்கோ திரில்லர்!
புதிதாய் கல்யாணமான அந்த தம்பதி, புதிதாய் வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் போகிறார்கள். மணவாழ்க்கையை உடலளவில் உற்சாகமாக தொடங்கலாம் என்று பார்த்தால் மனைவியின் காதுக்குள் பக்கத்து வீட்டிலிருந்து ஏதேதோ சத்தம் கேட்க, அந்த சத்தத்திலிருந்து ஒரு பெண்ணை யாரோ துன்புறுத்துவது போல் உணர மனதளவில் பாதிக்கப்படுகிறாள்.
பக்கத்து வீட்டில் கேட்கும் சத்தத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என விசாரிக்கிறாள். ஆட்கள் யாருமில்லாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறது என ஊரில் பேசிக் கொள்கிறார்கள். ஆனாலும், தன் காதில் கேட்கும் சத்தத்தில் அமானுஷ்யம் என்பதை தாண்டி ஏதோவொரு மர்மம் இருக்கிறது என உள்மனம் சொல்வதால் அவளால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட முடியவில்லை. கணவனுக்கு தெரியாமல் களமிறங்கி துப்பறிகிறாள். அதற்கான பலன் என்ன? பக்கத்து வீட்டில் ரியலாக நடந்தது என்ன, நடப்பது என்ன என்பதே ‘ரீ‘யின் கதையோட்டம்…
பேய்ப்படம் போல் துவங்கி வேறொரு திசையில் நகரும் திரைக்கதை பரபரப்பு விறுவிறுப்பு. கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் பெரிதாய் ஏமாற்றவில்லை. இயக்கம்: சுந்தரவடிவேல்
காதுக்குள் சத்தம் கேட்டதும் பயப்படுவது, பதற்றமாவது, துணிச்சலாக பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து துப்பறிவது என படம் முழுக்க சுறுசுறுப்பாக சுழன்றிருக்கிறார் காயத்ரி ரமா. கண்களில் காட்டும் மிரட்சி கதைக்கு பலம்!
கதைநாயகனாக பிரசாந்த் சீனிவாசன். தோற்றத்திலிருக்கிற லட்சணம் புதுமாப்பிள்ளை பாத்திரத்துக்கும், முகத்திலிருக்கிற அமைதி மனநல மருத்துவர் பாத்திரத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது. மனைவியோடு சில்மிஷமாய் பொழுதைக் கழிக்க நினைத்து அது முடியாமல் போகிறபோது மனதுக்குள் தவிப்பது, பக்கத்து வீட்டு மர்மத்தை மனைவியோடு சேர்ந்து கண்டுபிடிப்பது, அதற்கான தீர்வு நோக்கி சாமர்த்தியமாய் காய் நகர்த்துவது என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
அவற்றில் பக்கத்து வீட்டுக்காரராக, வருகிற பிரசாத் சாகுல், அவருக்கு மனைவியாக சங்கீதா பால், முக்கிய கதாபாத்திரம் சுமந்து ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோகிற இயக்குநர் சுந்தர வடிவேல் என படத்தில் கதாநாயகன், கதாநாயகி தவிர மிகச்சில கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களது நடிப்பில் குறையில்லை.
ஹரிஜி இசையில் பாடல்கள் (ஓருசில பழைய பாடல்களின் சாயல் தெரிந்தாலும்) மனதுக்கு இதம். கதையின் பரபரப்புக்கு முடிந்தவரை பின்னணி இசையால் விறுவிறுப்பூட்டியிருக்கிறார் ஸ்பர்ஜன் பால்.
தினேஷ் ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.
திரைக்கதையில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ரீ’யின் ரீச் பெரிதாக இருந்திருக்கும்.