சட்டத்திற்கு ‘அடங்க மறு’ப்பவர்களை ராங் ரூட்டில் போய் தண்டிப்பதுதான் ‘ரைட்’ என்கிற பழகிய கதை.
முதியவர் ஒருவர் (அருண் பாண்டியன்) தன் மகனைக் காணவில்லை என புகார் கொடுக்க கோவளம் போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைகிறார். பிரதமர் வருகை, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என அதிகாரிகள் பிஸியாக இருக்க, அவரது புகாருக்கு மதிப்பளிக்காமல் கேவலமாக நடத்துகிறார்கள். அதையடுத்து அந்த ஸ்டேசனுக்குள்ளும் ஸ்டேசனை சுற்றிலும் பாம் வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் லேப்டாப் மூலம் தகவல் தர சூழ்நிலை பரபரப்பாகிறது. அந்த நபர் சொல்லி ஒருவரை போலீஸ் ஸ்டேசனுக்கு வர வைக்கிறார்கள். ஸ்டேசனுக்குள் ஒரு அறையிலிருந்து பாம் வெடித்து அவர் மரணமடைகிறார்.
போலீஸ் தரப்பு, ஸ்டேசன் மர்ம நபரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதை உணர்கிறது. புகாரை ஏற்காததால் அந்த முதியவர் பாம் வைத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
கதை இப்படி வேகமெடுக்க, பாம் வைத்தது யார்? அதற்கான காரணம் என்ன? முதியவரின் மகனுக்கு என்னவாயிற்று? என்ற கேள்விகளுக்கு பதில் தந்தபடி ஓடி முடிகிறது ‘ரைட்’டின் பயணம்.
மகனை காணாத தவிப்பு, புகாருக்கு மதிப்பளிக்காத போலீஸார் மீது ஆத்திரம், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதில் காட்டும் மனிதாபிமான ஈடுபாடு என துடிப்பாக நடித்திருக்கிறார் அருண் பாண்டியன்.
காவல்துறை உயரதிகாரியாக நட்டி நட்ராஜ். கதைநாயகன் என்றாலும் திரையில் களமாடுகிற நேரம் குறைவு. அந்த நேரத்தில் போலீஸுக்குண்டான கம்பீரத்தைக் காண்பிப்பது, மகள் மீதான பாசத்தில் நெகிழவைப்பது, அவளுக்கு நேர்ந்த பரிதாப முடிவைக் கண்டு கொதித்துக் கொந்தளிப்பது என நடிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.
கதாநாயகி என்றோ, கதையின் நாயகி என்றோ சொல்லமுடியாதபடி அமைந்திருக்கிறது அக்ஷரா ரெட்டியின் கதாபாத்திரம். சப் இன்ஸ்பெக்டராக வருகிற அவர் ஒல்லிப்பிச்சான் உடம்பில் சேலையை வரிந்துகட்டி ஸ்டேசனுக்குள் சிக்கியிருப்பவர்களை குண்டு வெடிப்பிலிருந்து காப்பாற்றி, குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி துறுவெறுவென நடமாடியிருக்கிறார்.
மர்ம நபரின் உத்தரவால் போலீஸ் ஸ்டேசன் நீதிமன்றமாக மாற, நீதிபதியாக அமர்கிற வினோதினி வைத்தியநாதனின் ஆளுமையான நடிப்பு படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிரப்பியிருக்கிறது.
அருண் பாண்டியனின் வயதை வைத்துப் பார்த்தால் மகனாக வருகிற ஆதித்யா சிவகுமார் அவருக்கு பேரன் போலிருக்கிறார். காதல் வசப்பட்டு வலம் வருகிறபோதும் சரி, பழிவாங்கும் வெறியைக் காட்டும்போதும் சரி நடிப்பு நேர்த்தி. அவருக்கு ஜோடியாக யுவினா பார்த்தவி நல்ல பொருத்தம். நடிப்பும் கச்சிதம்.
தமிழ் சினிமா பொறுத்தவரை அமைச்சரின் மகன் என்றாலே அவன் காமப்பசி அதிகரித்தவனாக இருப்பதும், குற்றச்செயல்களை குதூகலமாக செய்வதும் வழக்கம். அதன் ஜெராக்ஸாக இந்த படத்திலும் ஒரு கதாபாத்திரம் உண்டு. அதை ஏற்றிருக்கும் இளைஞர் தன் பங்குக்கு லேசாக மிரட்டியிருக்கிறார்.
பழைய ஜோக் தங்கதுரைக்கு ஏகப்பட்ட சீன்கள்; ஒன்றிரண்டில் சிரிக்க வைக்கிறார்.
குணா பாலசுப்ரமணியனின் பின்னணி இசையும், பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளை பலமாக்கியிருக்கிறது.
இடைவேளை வரை அடுத்து என்ன, அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கும் இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார், படத்தின் பின் பாதியை சுலபமாக யூகிக்க முடிகிற சம்பவங்களால் கோர்த்துக் கட்டியிருக்கிறார்.
ரைட்டில், ராங் என்று சொல்ல சிலபல விஷயங்கள் இருந்தாலும் கிரைம் திரில்லர் வரிசையில் வைத்து மதிப்பிடும்போது சில காட்சிகளின் பரபரப்பான மேக்கிங்கால் பாஸ்மார்க் கொடுக்கத்தக்க படைப்பாகிறது!
-சு.கணேஷ்குமார்


