நாட்டுப் பற்றுக்கும் நட்புக்கும் இடையில் நடக்கும் உணர்வுபூர்வ போராட்டமாக ‘ராயல் சல்யூட்.’
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லைச் சண்டை தீவிரமாகி போராக உருவெடுத்திருக்கும் சூழ்நிலை. அந்த சண்டையில் குண்டடிபட்டு உயிருக்குப் போராடும் தனது உயரதிகாரியை தூக்கிச் சுமந்தபடி இந்திய ராணுவ வீரன் சக்திவேல், காட்டுவழியாக ராணுவ முகாம் நோக்கி நடக்கிறான். இடையில் அவனுடைய உயிருக்கு ஆபத்து உருவாகிறது. அந்த நேரமாகப் பார்த்து பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ருதீன், சக்திவேலை சந்திக்கிறான். அவர்களை சுற்றி வளைக்கும் இந்திய ராணுவ உயரதிகாரி, பக்ருதீனை சுட்டுக் கொல்ல சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் மறுக்கிறான்.
அதற்கு காரணம் என்ன? உயரதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படாத சக்திவேலுக்கு கிடைத்த தண்டனை என்ன? இந்த கேள்விகளுக்குப் பதில்களாக அணிவகுக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
சக்திவேலாக பிரதீப். ராணுவ வீரனுக்கான கம்பீரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் உயரதிகாரிக்கு அடிக்கும் சல்யூட்டில் கொஞ்சம் கொஞ்சம் காட்டுகிறார். மற்றபடி, தன் உயிரைக் காப்பாற்றி நண்பனாகிவிட்ட பாகிஸ்தான் பக்ருதீன் மீது காட்டும் பிரியமாகட்டும், அவனைக் கொல்ல முடியாத மனநிலையில் 140 கோடி இந்தியர்களை மனதில் வைத்து படம் பார்ப்பவர்களின் உயிரை உலுக்குகிற் முடிவெடுப்பதாகட்டும், தனது உயரதிகாரியை துப்பாக்கி முனையில் நிற்க வைத்து அவரது தவறுகளை ஆக்ரோஷமாக சுட்டிக் காட்டுவதாகட்டும் நடிப்புப் பங்களிப்பை அளவுக்கு அதிகமாகவே தந்திருக்கிறார்.
சக்திவேலாக வருகிற சுபாஷ் சிம்பு, சக்திவேலின் உயிரைக் காப்பாற்றும்போது மனிதாபிமானத்தைப் பிரதிபலிப்பது, மனிதர்களை மனிதர்கள் கொல்கிற போருக்கு எதிரான மனநிலையை பிரதிபலிப்பது என இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
இந்திய ராணுவ உயரதிகாரியாக அமரன் எம் ஜி ஆர். பெயரில் எம் ஜி ஆரை வைத்துக்கொண்டு பதவி உயர்வுக்காக தன் நாட்டு ராணுவ வீரனைக் கொல்லத் துடிக்கிற கேரக்டரை எற்றுக்கொண்டு நம்பியார் போல் வில்லத்தனம் செய்திருக்கிறார்.
கதைநாயகனின் மனைவியாக வந்து, ‘நாட்டைக் காப்பாற்றுவதற்கான போரில் உங்களுடைய உயிர் பறிபோனால் அது பெருமைதான்’ என்று சொல்லி தேசப்பற்றைக் காட்டுகிற அர்ச்சனா சிங்,
குண்டடிபட்ட வேதனையை வெறுமனே கண்களை மூடி மூடி திறப்பதன் மூலம் மட்டுமே காட்டுகிற யுவா யுவராஜ்,
தன்னுடைய உயரதிகாரியின் சுயநலத்துக்கு உடன்படாமல் எதிர்த்து நிற்கிற ஜனனி உட்பட இன்னபிற கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்களின் பங்களிப்பில் குறையில்லை.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக காண்பிக்கப்படும் மரம், செடி, கொடி அடர்ந்த நிலப்பரப்பின் நீள அகலத்தை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் முத்தையா.
பின்னணி இசையால் கதையோட்டத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க முயற்சி செய்திருக்கிறார் ஜெய் கிஷான். கவிதைகளைப் படிப்பதுபோல் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் கதை எடுத்துச் சொல்லும் கருத்துக்கு துணை நிற்கிறது.
‘போர் என்பது உலகிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியது; மனிதம் என்பது எல்லா திசைகளிலும் மலர வேண்டியது’ என்பதை வலியுறுத்தும் கதையில், உயிரோட்டமான நட்பை இணைத்துப் பிணைத்திருக்கும் இயக்குநர் ஜெய் சி சே, யானையளவு பிரமாண்டமாக எடுக்க வேண்டிய காட்சிகளை யானையின் வால் அளவுக்கான பட்ஜெட்டில் எடுத்து பள்ளிப் பிள்ளைகளின் மாறுவேடப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறார்.
படத்தின் உருவாக்கத்திலிருக்கும் குறைகளைத் தாண்டி, கதைநாயகன் எடுக்கும் முடிவுக்காக படக்குழுவுக்கு அடிக்கலாம் ராயல் சல்யூட்!
-சு.கணேஷ்குமார்


