‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.’
பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பட வெளியீட்டுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என்., ”2016-ம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது” என்றார்.
மிர்ச்சி சிவா , ”கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன? என திரைக்கதை இருக்கிறது. இது புதிதாக இருந்தது.இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார், நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரை மட்டுமல்ல. இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.
படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில், ‘சோறு முக்கியம்..’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படமாக்கும் போது பார்வையாளர்களாக ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். ஏனெனில் நான் முதன்முதலாக இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக நடன இயக்குநர் சாண்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், ”இது முழுக்க முழுக்க லாஜிக் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம். திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்றார்.
”கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ உருவாகி இருக்கிறது” என்று தெரிவித்தார் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக்.