கவினோடு ஜோடி சேரும் பாலிவுட், கோலிவுட் நடிகைகள்; யுவன் பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ வெளியீடு! ‘ஸ்டார்’ படத்தின் விறுவிறு அப்டேட்

‘டாடா’ படத்தின் பெரியளவிலான வெற்றிக்குப் பிறகு கவின் நடித்துவரும் படம் ‘ஸ்டார்.’

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப் படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். கதையின் நாயகனாக கவின் நடிக்க, அவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ‘இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரமாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31-ம் தேதியன்று இந்த படத்திலிருந்து பிரத்யேக காணொளி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது. முன்னணி நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருக்கிறார்.

இளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற படைப்பை இன்னிசையுடன் வழங்கிய இயக்குநர் இளன் – யுவன் ஆகியோருடன் முதன்முறையாக நடிகர் கவினும் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால், படத்திற்கு பார்வையாளர்களிடையே மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்’ பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். பி.ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – எழில் அரசு
படத்தொகுப்பு – பிரதீப் ஈ. ராகவ்
கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார்
ஆடை வடிவமைப்பாளர் – தேசிய விருது வென்ற சுஜித் சுதாகரன்
நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here