சினிமாக்களில் காட்டப்படும் ஜமீன்கள் பெரும்பாலும் கொடூரமானவர்களாக இருப்பார்கள். இந்த படத்தில் வருகிற ஜமீன் நல்லவராக இருக்கிறார். தன் பூர்வீக நிலத்தை மலை கிராம மக்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விதமாக தயார் செய்து கொடுக்க நினைக்கிறார்.
கொடுக்க நினைப்பவன் இருக்கும்போது கெடுக்க நினைப்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். இந்த கதையிலும் இருக்கிறார்கள். நல்லவனை வீழ்த்தினால் இன்னொரு நல்லவன் எங்கிருந்தாவது வரத்தானே செய்வான்? அவனும் வருகிறான்.
இது கதையின் அஸ்திவாரம். அதன் மீது பலமாக எழுந்து நிற்கிறது S/0 காலிங்கராயனின் திரைக்கதை.
அது ஒரு மலை கிராமம். துப்பாக்கியால் சுடப்பட்டு துடித்துக் கொண்டிருக்கிற ஒரு இளைஞரை, அந்த பகுதியில் வசிக்கிற ஒரு இளம்பெண் தன் ஊர் மக்களின் உதவியோடு காப்பாற்றுகிறாள். உயிர் பிழைக்கும் அவர் பழைய நினைவுகளை மறந்து, புது மனிதனாகிறார். அவள் அவருடன் காதலாகி, கணவனாக்கிக் கொள்கிறாள்.
அவர்களின் மணவாழ்க்கை உற்சாகமாக தொடங்கும் தருணத்தில், அவருக்கு ஒரு கொலைக் குற்றத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகப்படும் போலீஸ் சுற்றி வளைக்கிறது.
அவர் யாரென்பது அவனுக்கும் தெரியவில்லை; ஊர் மக்களுக்கும் தெரியவில்லை.
போலீஸார் விசாரிக்க விசாரிக்க, அவர் மலைகிராம மக்களுக்கு நிலத்தையும் கொடுத்து விவசாயம் செய்வதற்காக கால்வாய் வெட்டி தண்ணீர் வசதியும் செய்து கொடுத்த ஜமீன் காலிங்கராயனின் மகன் சேது காலிங்கராயன் என்பது தெரிகிறது.
ஏற்கனவே அந்த பகுதியில் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் கடத்தி கற்பழித்துக் கொல்கிற கும்பலை கண்டுபிடித்து அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த போலீஸ் தரப்பு, இப்போது சேதுவை சுட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாகிறது.
அவர்கள் கண்டுபிடித்தது என்ன, சேதுவை சுட்டது யார், அவருக்கு நினைவு திரும்பியதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி வேகமெடுக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
சீன சாமியார், நரபலி என திகிலூட்டும் சம்பவங்களும் படத்தில் உண்டு.
சேது ஜமீனாக வருகிற உதய கிருஷ்ணாவிடம் ஹீரோவுக்கான தோற்றமும் உடற்கட்டமைப்பும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கும் ஹீரோயிஸம் காட்டவும் தெரிந்திருக்கிறது.
சுடப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டச் சொட்ட தன் முன் வந்து விழுந்த சேது மீது ஆரம்பத்தில் கருணை காட்டுவது, போகப்போக காதலாகி அவர் மார்பில் கிறங்கிக் கிடப்பது என கதாநாயகிக்கான கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் தென்றல்.
இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி, இயக்கி, பாடல்களை எழுதி, அவற்றுக்கு இசையமைத்து என பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்திருக்கும் பாரதிமோகன், என்கவுண்டர் போலீஸாகவும் களமிறங்கியிருக்கிறார். கற்பழிப்புக் கும்பலை கண்டுபிடிப்பது, அவர்களின் நில அபகரிப்பு திட்டத்தை முறியடித்து தண்டிப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதியின் மிரட்டல்களை துணிச்சலாக சந்திப்பது, முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க எதிரிகளை சுழன்றடிப்பது என படம் முழுக்க எனர்ஜியை எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார்.
இரண்டாம் நாயகனான மருது செழியனின் நடிப்பு அவர் வைத்திருக்கும் மீசையைப் போல அடர்த்தியாக கம்பீரமாக இருக்கிறது.
சித்த மருத்துவர், மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து போராடுபவர் என அமைந்த முக்கியமான பாத்திரத்தைஆனந்தபாபு ஏற்றிருக்க, மீசை ராஜேந்திரன், தெலுங்கு தேச வில்லன் நடிகர் அனந்தகோடி சுப்ரமணியம், ஆடிட்டர் பாஸ்கர், கண்டாங்கி பட்டி ரவி ராஜன் உள்ளிட்டோர் மற்ற வேடங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
இயக்குநரே பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் பங்களித்திருப்பதால் அப்படி திரும்பினால் பாட்டு, இப்படி திரும்பினால் பாட்டு என அது பாட்டுக்கு வருவதும் போவதுமாய் இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் மனதுக்கு இதம் தருகிறது.
கதைப்பின்னல் கனமானதாக இருக்க, அதற்கேற்ப பயணித்திருக்கிறது கிருஷ் சிவாவின் பின்னணி இசை.
மலைப் பகுதிகளின் பசுமை, காடு மேடுகளின் நீள அகலம், மலை கிராம மக்களின் வாழ்வியல் சூழல் என எதையும் விடாமல் சேகரித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் சந்திரன் சாமியின் கேமரா.
மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பூர்வகுடி மக்களின் வசிப்பிடமான, வாழ்வாதாரமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு அரசியல்வாதிகளால், அரசாங்கத்தால் சமூக விரோதிகளுக்கு தாரை வார்க்கப்பட்ட கொடுமையான வரலாற்றுப் பின்னணியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த சமூக அக்கறை படைப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.
S/0 காலிங்கராயன் _ வீரத்தில் வீரியமானவன்; மனிதத்தில் மகத்தானவன்!
-சு.கணேஷ்குமார்