‘சத்திய சோதனை’ சினிமா விமர்சனம்

மிகச்சிறிய கதைக்கருவை எடுத்துக் கொண்டு திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப் போடுகிற மலையாளப் பட பாணியில் ஒரு தமிழ்ப் படம்!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படைப்பு.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான ‘சத்திய சோதனை.’

கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சுற்றித்திரிகிற ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்த பக்கமாக வந்த இளைஞன் ஒருவன் சடலத்திலிருந்த கடிகாரத்தை, அருகில் கிடந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு அவற்றை ஒப்படைக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறான்.

கொலை செய்யப்பட்டவர் 30 சவரன் வரை நகைகள் அணிந்திருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைக்கிறது. நகைகளை அந்த இளைஞன் தான் திருடியிருப்பான் என்ற கோணத்தில் விசாரணையை துவங்குகிறார்கள்; அவனை அடித்து துவைக்கிறார்கள். வேலியில் போன ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போலாகிறது அவனது நிலைமை.

போலீஸாரின் அடியிலிருந்தும் தன் மீதான வீண் பழியிலிருந்தும் தப்பிக்க அவன் என்னென்ன செய்கிறான் என்பதும், உண்மையில் நகைகளை அபகரித்தது யார் என்பதுமே திரைக்கதை…

இதுவரை ‘கெக்கேபிக்கே’த்தனமாக நடித்துக் கொண்டிருந்த பிரேம்ஜி, இந்த படத்திலும் பிரேமுக்கு பிரேம் அதையே செய்கிறார். ஆனாலும், அவர் ஏற்றிருக்கும் அப்பாவி இளைஞன் வேடத்துக்கு அப்படியான கிறுக்குத் தனங்கள்தான் தேவை என்பதால் அவர் செய்கிற எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது; மனம் திறந்து சிரிக்க முடிகிறது.

போலீஸார், கிலோ கணக்கில் காணாமல் போன நகைகள் கிடைத்தபின் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள காய் நகர்த்தும் காட்சிகள் அத்தனை கலகலப்பு. போலீஸாரில் ஒருவராக வருகிற சித்தன் மோகனின் நடிப்பில் காமெடி டெலிவரி எக்கச்சக்கம்!

நீதிபதியாக வருகிற பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் வழக்குகளை விசாரிக்கும் முறை கிச்சுக்கிச்சு மூட்டுகிறது!

கதாநாயகியாக ஸ்வயம் சித்தா, கதாநாயகனின் சகோதரியாக ரேஷ்மா பசுபுலேட்டி என மற்ற வேடங்களில் வருகிறவர்கள் கதைக்குத் தேவையானதை செய்திருக்கிறார்கள்!

அடிச்சா செத்துடுவா, அவ பேசினா நமக்கு பிபி வந்துடும், என்ற பண்றது?’ என போலீஸ் தரப்பு பயப்படுகிற அளவுக்கு வாயாடித்தனத்தால் தொல்லை தருகிறவராக அசத்தியிருக்கிறார் அந்த வெள்ளைநிற உடையணிந்த பாட்டியம்மா!

பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் கதையோட்டத்தை பலப்படுத்தியிருக்கின்றன.

காவல்துறை எந்தவொரு விஷயத்திலும் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தும் என்கிற உண்மையை நகைச்சுவை முலாம் பூசி காட்சிப் படுத்தியிருக்கிறது திரைக்கதை! கிளைமாக்ஸ் சுவாரஸ்யம்தான் என்றாலும் கொஞ்சம் வேறுவிதமாக மாற்றியிருக்கலாம் என்ற உணர்வு வருவதை தவிர்க்க இயலவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here