செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸ் விமர்சனம்

செருப்பு மூலமாக சிரிப்புப் பட்டாசு கொளுத்தியிருக்கும் வெப் சீரிஸ்.

ZEE 5 தளம் இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஓடுகிற சினிமா வடிவிலான படைப்பை ஐந்து, ஆறு என சிறுசிறு எபிசோடுகளாக பிரித்து தருவதை நோக்கமாக கொண்டு, முதல் சீரிஸை சிரிப்புடன் தொடங்கியிருக்கிறது.

சிங்கம்புலி பீச்சில் ரத்னம் என்பவரை சந்திக்கிறார்; அவர் அணிந்திருந்த செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டுக்கு திரும்புகிறார். போலீஸ், ரத்னம் யாரையெல்லாம் சந்தித்துப் பேசுகிறாரோ அவர்களை பின் தொடர்கிறது. அந்த வகையில் சிங்கம் புலியின் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. அவர்கள் எதை எதிர்பார்த்து வந்தார்களோ அது கிடைக்காமல் போலீஸ் திரும்பிப் போகிறது.

சிங்கம் புலி அணிந்து வந்த செருப்பு இன்னொருவரிடம் போய்ச் சேர்கிறது. அந்த செருப்பில் பல கோடி மதிப்புள்ள வைரம் பதுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கதையிலிருக்கிற சுவாரஸ்யம்.

அந்த வைர செருப்பு ஒரு குடிகாரன் காலுக்கு டிரான்ஸ்பராகி, பின்னர் ஒரு கவுன்சிலர் வீட்டுக்கு போய் சேர்கிறது. சிங்கம் புலியின் மகன் செருப்பை கைப்பற்றி வர கவுன்சிலர் வீட்டுக்கு போகிறார்.

போனவருக்கு பெரிய ஷாக். கவுன்சிலர் இறந்துபோய், ஊரும் உறவுகளும் கூடியிருக்கிறது. போலீஸ் வேறு வைரத்துக்கு தொடர்புள்ள ரத்னத்தை தேடி சாவு வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இப்படியான சூழலில் அங்கிருக்கும் செருப்பை எடுக்க சிங்கம் புலியின் மகன் சிலபல முயற்சிகளைச் செய்கிறார். அதன் விளைவுகள் என்ன என்பது திரைக்கதையாக விரிய, செருப்பு யாருக்கு சொந்தமாகிறது என்பது கிளைமாக்ஸ். இயக்கம் ராஜேஷ் சூசைராஜ்

கதைநாயகனாக விவேக் ராஜகோபால். சாவு வீட்டுக்கு போய் தனக்கு தேவையான செருப்பை அடையாளம் கண்டு அதை எடுக்கும் தருணத்தில் போலீஸ் விசாரணையில் சிக்கி உளறிக் கொட்டுவது, டெட் பாடியை எடுப்பதை தாமதப்படுத்துவதற்காக வாரிசுகளுக்குள் சொத்து பிரச்சனையை தூண்டிவிட்டு கலவரச் சூழல் உருவாக்குவது என தனக்கான காட்சிகளில் நடிப்பு எளிமை என்றாலும் ரகளை எக்கச்சக்கம்.

வி ரா’வுக்கு ஜோடியாக ஐரா அகர்வால். லட்சணமாக இருப்பவரின் குழந்தைபோல் பேசுகிற வெகுளித்தனம் ரசிக்க வைக்கிறது.

தன் மகனைக் கூட்டிக்கொண்டு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு போவது, பாரில் முத்தத்துக்கு பயப்படும் குடிகாரனின் அலப்பரைகளை சமாளிப்பது என தன் பங்கிற்கு சிரிப்பூட்டுகிறார்.

வைரக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படுபவர்களை சுற்றி வளைக்கிற பொறுப்பு பத்திரிகையாளர் ஹுசைனுக்கு. ரெய்டுக்கு போன இடத்தில் சிலிண்டர் தூக்குவது உள்ளிட்ட செயல்களும் அஷ்டகோணல் முகபாவங்களும் அவருக்குள் நல்ல காமெடி நடிகன் இருப்பதை எடுத்துச் சொல்கிறது.

மரணம் நிகழ்ந்த வீட்டில் வாரிசுகளுக்குள் ஏற்படும் சொத்துரிமை தகராறுகளும் ரசிக்க வைக்கின்றன.

பின்னணி இசை, ஒளிப்பதிவு நேர்த்தி.

அயலியில் தொடங்கி ஐந்தாம் வேதம் வரை கதையாழமிக்க, பிரமாண்டமான வெப் சீரீஸ்களை தந்து தனி முத்திரை பதித்திருக்கும் ZEE5,

சினிமா வடிவிலான வெப் சீரிஸ்களையும் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் தரும் என்பதற்கு சாம்பிளாக அமைகிறது இந்த வெப் சீரிஸ்.

செருப்புகள் ஜாக்கிரதை _ சிரிப்புக்குப் பஞ்சமில்லை!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here