போலீஸ் – ரவுடி மோதல் என்கிற பழகிப்போன கதையில், இதுவரை பழக்கப்படாத திரைக்கதையில் ‘வீர தீர சூரன்.’
காவல்துறை உயரதிகாரி அருணகிரி இரவு தொடங்கும் நேரத்தில், ரவி என்கிற ரவுடியையும் அவனது மகனையும் பொழுது விடிவதற்குள் என்கவண்டரில் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.
ரவியின் காதுக்கு விஷயம் எட்டுகிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் பொழுது விடிவதற்குள் அருணகிரியின் கதையை முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அந்த சம்பவத்தை செய்து முடிக்க காளியை தேர்ந்தெடுக்கிறார். ஒரு காலத்தில் ரவுடித்தனத்தை டெடராக செய்து கொண்டிருந்த, தற்போது திருந்தி வாழ்கிற காளி, ரவி சொல்வதைச் செய்ய மறுக்கிறார்.
காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கலாம், தப்பில்லை என யோசிக்கும் ரவி காளியின் காலில் விழ, வேறு வழியின்றி கமிட்’டான காளி வெடிகுண்டோடு வேகமாய்ப் புறப்பட அதன் பின் நடப்பவை அத்தனையும் ரத்த சரித்திரம்; திரைக்கதை நரம்புகளில் ஏற்றிய புது ரத்தம்.
கன்னாபின்னாவென இடுப்பில் சுற்றிக் கொண்டிருக்கும் அழுக்கடைந்த வேட்டி, அதற்கு பொருத்தமான ஒரு சட்டை என படம் முழுக்க சிம்பிள் காஸ்ட்யூமில் வருகிறார் சீயான் விக்ரம். ஒரு காட்சியில் குப்பைபோல் எதையோ எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனில் நுழைபவர், தன் கையிலிருப்பதை அப்படியும் இப்படியுமாக புரட்டிப்போட்டு துப்பாக்கியாக்கி ஒருவரை போட்டுத் தள்ளும்போது தெறிக்கிற குருதியைப் பார்த்து நம் உடம்பில் உதறலெடுக்கிறது; அந்த உதறல் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. அந்தளவுக்கு எதிரிகள் மீறி சீறிப் பாய்கிறார் சீயான்.
கத்தி, துப்பாக்கி, கன்னிவெடி என ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சுற்றுபவர், மனைவியுடனான கொஞ்சல் மிஞ்சலில் கொண்டு வந்திருப்பது ‘இத்துணூண்டு முத்தத்துல இஷ்டமிருக்கா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட அந்தக்கால எனர்ஜி.
அப்பனையும் மகனையும் ஒரே இடத்தில் வைத்து உயிர் பறிக்க வேண்டும் என்பதற்கு போடும் ஸ்கெட்ச்’சாகட்டும், அவர்களின் உடலில் எப்படியெல்லாம் தோட்டாக்களை செலுத்த வேண்டும் என கண்களில் வன்மம் பொங்க அதிகாரிகளுக்கு கிளாஸ் எடுப்பதாகட்டும் மிரள வைக்கிறார் காவல்துறை உயரதிகாரியாக வருகிற எஸ் ஜே சூர்யா.
கணவனை ஆபத்து சுற்றுப் போடுகிறது என்பதறிந்து தவித்துப் போவதாகட்டும், எப்படியாவது அவரை தடுத்துவிட வேண்டும் என குழந்தை மீது சத்தியம் கேட்பதாகட்டும், கல்யாணத்துக்கு தயாராகும்போதே மாப்பிள்ளையுடன் கட்டிப் பிடி தொட்டுக் கடி சங்கதிகளையெல்லாம் முடித்துக் கொண்டு நமுட்டுச் சிரிப்போடு காளியின் தாலிக்கு கழுத்தை நீட்டுவதாகட்டும் நடிப்புப் பங்களிப்பை பெட்டராக, பெஸ்டாக தந்திருக்கிறார் துஷாரா.
தன்னைக் காவு வாங்க கட்டம் கட்டும் எஸ் பி’யை கண்டம் துண்டமாக்கிவிட வேண்டும் என்ற உறுதியோடு கண்களில் வெறியேறித் திரிபவராக சுராஜ் வெஞ்சரமூடு’வின் பெர்ஃபாமென்ஸ் பவர்ஃபுல்.
எஸ் பி’யிடம் சிக்காமல் மகனைக் காப்பாற்ற எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கத் தயாராகிற பிரித்வியின் விழிகளில் பயம் நிரம்பிய உடல்மொழி அசத்தல் ரகம்.
படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அந்த கூட்டத்தில் சீயானின் வாரிசுகளாக வருகிற சிறுவன் சிறுமியைத் தவிர அத்தனை பேரும் குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பது நெருடலாக இருந்தாலும் அவர்கள் தருகிற நடிப்பில் குறையில்லை.
ஒரே இரவில் நடக்கும் கதைக்கேற்ப அடர்த்தியான இருள், அதிகாலை இருள், மிதமான இருள், மிதமிஞ்சிய இருள் என வேறுபடுத்திக் காட்டி ஒளிப்பதிவின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் தேனி ஈஸ்வர்.
வரைமுறைக்குள் அடங்காத வன்முறை வெறியாட்டம் படம் முழுக்க பரவியிருக்க, நிலநடுக்கம் நிகழ்வதுபோன்ற உணர்வைத் தருகிறது ஜீ வி பிரகாஷின் பி ஜி எம். பாடல்கள் இரண்டு ஆல்பமாக அல்ரெடி ஹிட்டு. காட்சிகளாய் பார்ப்பது கண்களுக்கு டிரீட்டு.
படத்தில் ‘இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம். அப்படியான காட்சிகளும், லாஜிக் மீறல்களும் நிறைய உண்டு. அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தாத அளவுக்கு ஒருவித விறுவிறுப்பை படம் முழுக்க தூவி வீர தீர சூரனை விக்ரமின் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இணைத்திருக்கிறார் இயக்குநர் எஸ் யூ அருண்குமார். முதல் பாகத்தில் ஆச்சரியங்கள் காத்திருக்கும் என நம்பலாம்.
இரண்டாம் பாகத்தை இப்போது கொடுத்து, முதல் பாகம் எப்போது என எதிர்பார்க்க வைத்ததிலும் தனித்துவம் பெறுகிற இந்த படம் ஹிட்டடித்தது சந்தோஷம்தான். இருந்தாலும், இதன் விளைவாக இதே ரகத்தில் எட்டுப் பத்து படங்கள் வராமல் போகாது என்பதை நினைத்தால் மனம் பதறுகிறது.
வீர தீர சூரன் _ வெற்றியில் மிதக்கும் வீரன்!
-சு.கணேஷ்குமார்