இந்த படத்தில் எந்தவிதமான வன்முறையும் இல்லை; குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம்! -‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் பேச்சு

யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடிக்க, டெனிஸ் மஞ்சுநாத் இயக்கி, வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், ‘‘கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழுவினர் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ‘‘இந்த படத்தின் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர். எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருக்கு வாழ்த்துகள்!

படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள்” என்றார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன், ‘‘சின்ன வயதில் இருந்து கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிற மொழியில் உள்ளவர்கள் நம் தமிழ் சினிமாவை பெரிதாக பார்க்கிறார்கள். இங்கு பெரிய படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்குப் அதிக திரையரங்குகளோ, நல்ல டைமிங்கோ கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதில் நிறைய நடிகர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். பெரிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களை வருடத்திற்கு இரண்டாவது தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் உத்ரா புரொடக்சன்ஸ்’ ஹரி உத்ரா, ‘‘கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு இப்போதுள்ள இயக்குநர்கள் யாரும் ஃபேமிலி எண்டர்டெயினர் காமெடி படங்கள் இயக்குவதில்லை. அதை மாற்றும் விதத்தில் ‘தூக்குதுரை’ வந்திருக்கிறது. படம் வெளியான பின்பு நிச்சயம் இந்தப் படக்குழுவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ், ‘‘அஜித் சாருடைய அல்டிமேட் கதாபாத்திரப் பெயரை இந்த படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர். அதனால் நிச்சயமாக அஜித் சார் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆதரவு கொடுப்பார்கள். யோகிபாபு, சென்றாயன், பால சரவணன், மகேஸ் இவர்கள் படத்தில் இருப்பதை பார்க்கும்பொழுது படம் நிச்சயமாக கலகலப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. அஜித் சார், விஜய் சாரை ஆடவைத்த ஸ்ரீதர் மாஸ்டர் இந்த படத்திற்கு நடனம் அமைத்திருப்பது மிகப்பெரிய பலம். இயக்குநர் டெனிஸூம் அடுத்தடுத்து வெவ்வேறு உயரங்களுக்கு செல்வார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் மகேஸ் சுப்ரமணியன், ‘‘இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் கும்கி அஸ்வின், நடிகர் சென்றாயன், நடிகர் பால சரவணன், நடிகர் சத்யா, தயாரிப்பாளர் அரவிந்த், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், இணைத் தயாரிப்பாளர் வினோத்குமார், இசையமைப்பாளர் மனோஜ் கே.எஸ்., ஒளிப்பதிவாளர் ரவிவர்மா, எடிட்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here