சீயான் விக்ரம் நடிக்க, பா.இரஞ்சித் இயக்கி சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் சென்னையில் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், நடிகர் விக்ரம், இயக்குநர் பா. ரஞ்சித், விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசியபோது, ”இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ… அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது. மக்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கடத்த வேண்டும். எனக்குள் இருக்கும் அகத்தை இந்த படைப்பிற்குள் வெளிப்படுத்த வேண்டும். நான் மக்களிடம் பேச வேண்டும் என்று நினைத்த விசயத்தை இதில் சொல்லி இருக்கிறேன். இதனை என் அளவில் சரியாகப் புரிந்து கொண்டு அதை கொண்டாடி வரும் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும், மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. இந்த படத்தை பற்றி ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருப்பதை கண்டு நாம் சரியான படைப்பை தான் வழங்கி இருக்கிறோம் என்ற மிகப் பெரிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
என்னுடைய இந்த வெற்றியில் பலர் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் விக்ரம் பேசியபோது, ”இந்த படத்தை தொடங்கும் போது இது போன்ற ஒரு கதை. இது போன்றதொரு மக்கள். இது போன்றதொரு வாழ்க்கை. அந்த காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு இன்னல்கள் சவால்கள் என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தை தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்கு தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தை கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படி தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் புரியாமல் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ. அதேபோல் நாங்களும் மாறிவிட்டோம். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தங்கலான் குடும்பமும். கஷ்டப்பட்டோம். அனைத்திற்கும் இறுதியாக தங்கத்தை கண்டுபிடித்தோம். அதுதான் இந்த படத்தின் வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
ரஞ்சித் என்னை சந்தித்து கதையை சொல்லும்போது ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என சொன்னார். முதலில் தலையில் கொஞ்சம் முடியை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். அதன் பிறகு பாதி மொட்டை அடிக்க வேண்டும் என்றார். பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் கோவணம் கட்ட வேண்டும் என்றார்.
முன்னணி நட்சத்திர நடிகர்கள் யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிறைய யோசிப்பார்கள். இதைக் கேட்டதும் முதல் எனக்கு தூக்கி வாரி போட்டது. மற்றொருபுறம் எனக்குள் ஒரு பயமும் இருந்தது. மறுபுறம் இதனை மட்டும் சரியாக செய்து விட்டால்.. எப்படி இருக்கும் என்ற ஒரு பிரமிப்பும் இருந்தது. ஆனால் இதனை ரஞ்சித் கேட்டதால்… ஒப்புக்கொண்டேன். அவர் கேட்டால் நான் ஆதாமாகவும் நடிக்க தயார்” என்றார்.