ஹாரர் உலகத்துக்குள் மீண்டும் ஒருமுறை போய்வர வாய்ப்பு தருகிற ராஜா சாப். காமெடி, ஆக்சன் என கமர்சியல் மசாலாக்களை மனம்போனபோக்கில் அள்ளிப் போட்டு கிளறியிருக்கும் ஃபேண்டசி பிரியாணி.
பல வருடங்கள் முன் பிரிந்துபோன தன் பாட்டியின் கணவரை, அதாவது தன் தாத்தாவை தேடிக் கண்டுபிடிக்கும் பேரன்.
படத்தின் ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்…
பாட்டி தாத்தாவை உலகமகா உத்தமர் என நினைத்துக் கொண்டிருக்க, அவரை தேடிப்போன பேரனுக்கு அந்த தாத்தா உலகமகா அயோக்கியன், மாயமந்திரங்கள் தெரிந்த அசுரன், பல்லாயிரம் கோடி பணத்தை, டன் கணக்கிலான தங்க வைரை நகைகளைக் கொள்ளையடித்து மர்மமான இடத்தில் பதுக்கியிருப்பவன் என்பதெல்லாம் தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த மர்மமான இடத்துக்கு போய்ச்சேரும் பேரன், தாத்தாவின் மந்திரதந்திர பிடியில் சிக்கிக்கொண்டு உயிருடன் வெளியில் வருவது சாத்தியமில்லை என்ற சூழ்நிலையும் உருவாகிறது.
அப்படியொரு சவாலான நிலைமையை அவன் எப்படி சமாளிக்கிறான், தாத்தாவிடமிருந்து தப்பிக்க முடிந்ததா? தாத்தா அசுரனாக மாறியதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் காண்பித்துக்கொண்டே கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
பாகுபலியாய் சிவனை சுமந்த பிரபாஸ் இந்த படத்தில் ‘ராஜாசாப்’பாய் ஆக்சன், காமெடி, காதல், சென்டிமென்ட் என எல்லா வித்தைகளையும் மொத்தமாக இறக்கிவைத்து படத்தை தாங்கியிருக்கிறார்.
பேராசைத்தனம் ஒருவனை எந்தளவுக்கு கொடூரனாக்கும் என்பதற்கு உதாரணமாக களமாடியிருக்கிறார் சஞ்சய் தத்.
பிரபாஸுக்கு மூன்று ஜோடிகள். மெழுகுச் சிலை போலிருக்கும் நிதி அகர்வாலின் சின்னச்சின்ன முக அசைவுகள் கியூட்டாக இருக்க, உடம்பின் மேடு பள்ளங்களை வளைவு நெளிவுகளை எந்தளவு முடியுமோ அந்தளவு காட்டியிருப்பது கிறக்கம் தருகிறது. கன்னம் ஒட்டிப்போய் பரிதாபமாக இருக்கும் மாளவிகா மோகனன் திடுதிப்பென எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுகிறபோது மட்டும் கவனம் பெறுகிறார். சில காட்சிகளில் பிரபாஸை காதலிப்பதற்காக இணைந்திருக்கிறார் ரித்தி குமார்.
பொம்மன் இரானி உள்ளிட்ட இன்னபிறரின் நடிப்புப் பங்களிப்பும் இருக்கிறது.
பாடல் காட்சிகளின் பின்னணியும் ஆடுபவர்கள் அணிந்திருக்கும் உடைகளும் கலர்ஃபுல்லாக இருக்க, தமன் இசை உற்சாகம் கூட்டுகிறது. பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டம் அதிகம்.
கலை இயக்குநரும் அவரது குழுவினரும் மாதக்கணக்கில் உழைத்திருக்க வேண்டும். அதன் பலனும், கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவிலிருக்கும் தரமும் படத்தை பிரமாண்டமாக்கியிருக்கிறது. மந்திர தந்திரம் சார்ந்த ரசிகர்களை பயமுறுத்தும் என்ற நினைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் வி எஃப் எக்ஸ், ஜிஜி என மற்ற தொழில்நுட்பத் துறையினர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து உழைத்திருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது.
மாருதி இயக்கியிருக்கும் இந்த படத்தின் நீளம் அனுமார் வால் அளவுக்கு நீ….ளம்.
காட்சிகளை பிரமாண்டமாக்குவதற்காக பணத்தை தண்ணீராக செலவிட்டிருப்பவர்கள் கதை, திரைக்கதையை மாற்றி சிந்தித்திருந்தால் ராஜாசாப் வசூல் குவிக்கும் ராஜாவாகியிருப்பார்!
-சு.கணேஷ்குமார்
