Home விமர்சனம் பராசக்தி சினிமா விமர்சனம்

பராசக்தி சினிமா விமர்சனம்

புரட்சித்’தீ’யின் சக்தியை எடுத்துக்காட்டும் ‘பராசக்தி.’

தங்கள் இன விடுதலைக்காக, இன உரிமைக்காக, இனத்தின் மொழியை அழிக்க முற்பட்டவர்களுக்கெதிராக போராடி உயிரிழந்தவர்கள் புரட்சியாளனாக, தியாகியாக வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள். உலகம் முழுக்க அப்படியான போராட்டத்தினாலும் உயிர்த் தியாகங்களாலும் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். தமிழ்நாட்டிலும் அப்படியான பல புரட்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன, நடந்துகொண்டுள்ளன. அவற்றில் ஒன்று 1960 காலகட்டத்தில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம். அதில் நடந்த கொடூரங்கள், உயிரிழப்புகள், ஏற்பட்ட தீர்வு என பலவற்றை காட்சிகளாக தொகுத்து தந்திருக்கும் படைப்பு இது.

கல்லூரி மாணவரான செழியன் மாணவர்களைத் திரட்டி இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராடுகிறான்; ரயில் எரிப்பு உள்ளிட்ட பெரியளவிலான செயல்களைச் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் போராட்டத்திலிருந்து பின்வாங்க, அவனது தம்பி மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்குகிறான். போராட்டத்தை தடுக்க, போராடுபவர்களை அழித்தொழிக்க மத்திய அரசு அதிகாரியொருவரை களமிறங்கிறார். அவர் என்னவெல்லாம் செய்தார், போராட்டம் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கியது என்பதையெல்லாம் இயக்குநர் சுதா கொங்கராவின் மேக்கிங்கில் பார்க்கும்போது குலை நடுங்குகிறது; கம்பீர உணர்வும் எட்டிப் பார்க்கிறது.

செழியனாக சிவகார்த்திகேயன். ‘எதிர்ப்பது இந்தியையல்ல; இந்தித் திணிப்பை’ என கொள்கையை முன்வைக்கும் ஆரம்ப ரயில் எரிப்புக் காட்சியாகட்டும், ரயில் எரிப்பில் நண்பனைப் பறிகொடுத்து கதறுவதாகட்டும், போராட்டத்தில் சொந்த தம்பியை இழந்து மனம் உடைவதாகட்டும், ‘கொன்றது ஒரு தம்பியை மட்டும்தான், இன்னும் பலர் இருக்கிறார்கள்’ என்கிற ரீதியில் கர்ஜிப்பதாகட்டும் நடிப்பில் போராளியென்பவன் இப்படித்தான் இருப்பான் என்பதற்கு சாட்சியாக, இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நிற்கிறார்.

‘மனிதாபிமானம் என்றால் என்ன?’ என்று கேட்பவராக, ஹிட்லர் போன்ற கொடுங்கோலராக ரவி மோகன். அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபடி போராட்டக்காரர்களை துப்பாக்கிச் சுடு நடத்தி கொன்று குவிக்கும்போது, கதைநாயகனையும் அவனது தம்பியையும் சித்தரவதை செய்யும்போது காட்டியிருக்கும் மிரட்டலான நடிப்புக்கு பாராட்டும் விருதும் மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் குவிவது நிச்சயம்.

1960 காலகட்டத்தில் நன்றாக படித்த பெண் எப்படியிருப்பாளோ அப்டியெல்லாம் இருக்கிறார் சிவகார்த்தியின் ஜோடியாக வருகிற ஸ்ரீலீலா. அழகானவர், நல்ல டான்ஸர். அதற்காக இந்த படத்தில் அவரை இழுத்துப் போட்டிருப்பார்கள் என்று நினைத்தால், அவர் செய்யும் சமாச்சாரங்கள் அத்தனையும் அதிரடியாக இருக்கிறது. போராட்டத்தின் தூண்களில் ஓருவராக மாறுகிற தருணங்கள் சிலிர்ப்பு தருகிறது.

போராட்டங்களுக்கு தலைமையேற்கும்போது வேகமும் தேவை; விவேகமும் தேவை. வேகம் மட்டுமிருந்தால் அதன் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதை சிவகார்த்தியின் தம்பியாக அதர்வாவின் கதாபாத்திரம் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. காட்சிகள் ஏற்ற கேரக்டருக்கான கெத்தான நடிப்பை அவர் வழங்கியிருப்பதை உறுதிபடுத்துகிறது.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பற்றியெரிந்ததன் பின்னணியில் இருந்த மாபெரும் ஆளுமையான சி என் அண்ணாதுரை ஒன்றிரண்டு காட்சிகளில் தேர்ந்த நடிகர் சேத்தனுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கிறார். அந்த கெட்டப்பும் மிகச்சில நிமிடங்களில், இல்லையில்லை ஒருசில விநாடிகளில் அவருக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் தேர்ந்த நடிப்பும், ‘அதை யார் செஞ்சிருந்தாலும் அது என் தம்பி’ என்ற வசனமும் படத்தின் கெத்து.

இந்தி திணிப்பை எதிர்த்து தண்டவாளத்தில் படுத்துப் போராடிய கலைஞர் மு கருணாநிதியாக தோன்றுவது குரு சோமசுந்தரம். பிரதமராவதற்கு முன் மத்திய அமைச்சராக பதவி வகித்த இந்திரா காந்தி, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

ராணா டகுபதி, பசில் ஜோசப் இருவருக்கும் வழங்கப்பட்டிருப்பது பெஸ்ட்டான கெஸ்ட் ரோல்.

‘நமக்கான காலம்’, ‘சேனைக்கூட்டம்’ என படத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை ஆக்கிரமித்திருக்கும் பாடல்கள், ‘அடி அலையே அலையே’, ‘ரத்னமாலா’ என இனிமையான தருணங்களை நிரப்பியிருக்கும் பாடல்கள் ஜி வி பிரகாஷ் இசையில் உயிரோட்டமாகியிருக்கின்றன. பின்னணி இசைக்காக ஜி வி பிரகாஷை தனியாக பாராட்டுவது கடமை.

கலை இயக்குநர் எஸ் அண்ணாதுரை குழுவினரின் பங்களிப்பில் 1960 காலகட்டத்திற்கு டைம் டிராவல் செய்யாமலே போய் வர முடிகிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் படம் முழுக்க சூரியனின் பிரகாசம்.

ஒவ்வொருவரும் நமது தெருவின், ஊரின், மாவட்டத்தின், மாநிலத்தின், நாட்டின், உலகத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம். நாம் தெரிந்துகொள்ளும் வரலாற்றை நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்துவது கடமை. அவசியமும் கடமையும் யாருக்குத்தான் இல்லை?

அந்த தரப்பின் எதிர்ப்பு, இந்த தரப்பின் முறைப்பு, சென்ஸாரின் கட்டு வெட்டு என சிக்கல்கள் பலவற்றைக் கடந்தும் சிறப்பான படைப்பாக திரையரங்குகளை வந்தடைந்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கராவின் பராசக்தி _ பார் முழுக்க பரவ வேண்டிய தீ!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்