வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ் என காட்சிக்கு காட்சி கொடூர கொலைகளும் ரத்தச் சகதியுமாக உருவாகி ரசிகர்களைச் சோதிக்கிற சமீபகால ‘டாக்ஸிக்’ ரக படங்களின் வரிசையில் ‘தி பாரடைஸ்.’
ஹீரோ கிராமத்துப் பெண்களைப் போல் ரெட்டை ஜடையை பின்னிப் போட்டபடி வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். தான் சார்ந்த, ஒடுக்கப்பட்ட சவாரி இன மக்களை அடிமையாக்கி சாம்ராஜ்யம் நடத்தும் மாலிக்கை பின்னிப் பெடலெடுக்கிறார். மாலிக்கை ஒழித்துக்கட்டும் முயற்சிகளில் அவரால் கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம். ஜடைப்பின்னல் ஏன் என்பதற்கு ஆரம்பக் காட்சி பதில் சொல்கிறது.
கதையில் சொல்லிக்கொள்ள விசேஷமாய் ஏதுமில்லை. பல படங்களில் பார்த்ததுதான். நானிக்கு எதிரிகளை கொத்துக் கொத்தாக வெட்டிக் கொல்கிற வேலை அதிகம். அதில் வெறித்தனமான பங்களிப்பைத் தந்து, அம்மா சென்டிமென்ட், காதலியுடன் மோதல் என எட்டிப் பார்க்கும் காட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.
சூழ்நிலைக் கைதியாகி பணத்துக்காக தவறான பாதையில் பயணிப்பவராக கயாது லோகர் கச்சிதமான நடிப்பைத் தந்து, கவர்ச்சிக்கும் உதவுகிறார். மாலிக்காக மோகன்பாபு உட்பட நன்றாக நடிக்கிற ஏராளமான நடிகர் நடிகைகளின் கூட்டம் திரையை ஆக்கிரமிக்கிறது.
அனிருத் இசையில் கீர்த்தி சுரேஷ் போடும் ஒற்றைப் பாடலுக்கான கும்தலக்கா குத்தாட்டம் தியேட்டர் ரசிகர்களுக்கான வைப் மெட்டீரியல். தாறுமாறான வன்முறை வெறியாட்ட கதையோட்டத்துக்கு தாறுமாறான பின்னணி இசையே போதுமென தீர்மானித்து மனம்போன போக்கில் அதிரடி கிளப்பியிருக்கிறார் ராக் ஸ்டார் அனிருத்.
ஆர்ட் டைரக்சன் டீமும் ஜிசி தொழில்நுட்பக் குழுவும் அசுரத்தனமாக உழைத்திருப்பது, சி ஹெச் சாயின் தரமான ஒளிப்பதிவில் தெரிகிறது. அத்தனை பங்களிப்பையும் இழுத்துப் போட்டு மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா. அதற்காக வேண்டுமானால் ஒரு வரி பாராட்டலாம். வன்முறைப் படங்களை விரும்புகிறவர்கள் மட்டும் தியேட்டருக்கு போகலாம்.
-சு.கணேஷ்குமார்

