Home விமர்சனம் டைட்டானிக் சினிமா விமர்சனம்

டைட்டானிக் சினிமா விமர்சனம்

காதலும் காதல் சார்ந்தும் மற்றுமொரு ஃபீல் குட் மூவி.
‘வாழ்க்கை பூரா நடிச்சாத்தான் தப்பு; வாழ்க்கைய ஆரமிக்க நடிச்சா தப்பில்ல’ என படத்தில் ஒரு வசனம் வருகிறது. கதை, திரைக்கதை எல்லாமே அதிலேயே அடங்கியிருக்கிறது.

இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயதுக்காரர் என கதையின் மூன்று ஹீரோக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். ஒரு இளைஞர் தன் கல்யாணத்துக்காக போகிறார், இன்னொருவர் தன் காதலியைத் தேடிப் போகிறார்; நடுத்தர வயதுக்காரர் தன் மனைவியை அழைத்து வருவதற்காக செல்கிறார். மூவருமே சென்று சேர்கிற இடம் பெங்களூரு.

அங்கு மூவரும் எதிர்பார்க்காத சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்க, அதுவே படத்தின் கிளைமாக்ஸ். பயணத்தில் மூவரும் தங்களின் கடந்த கால காதல் பற்றி பகிர்ந்து கொள்வதாய் அமைந்திருக்கிற திரைக்கதையும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்தான். படம் எடுத்து ஆறேழு வருடங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

கலையரசன் நடிக்கிற படங்களில் அவரை கொலை செய்வதுதான் வழக்கம். இந்த படத்தில் அந்த கொடுமை நடக்கவில்லை. காதலிக்கிற, காதலிக்காக ஆறு வருட காலம் காத்திருக்கிற, காதலி கிடைக்காதபோது அடுத்த காதலை நோக்கி நகர்கிற வேலை கொடுக்கப்பட அதை சரியாகச் செய்திருக்கிறார்.

கலையரசனுக்கு கொடுக்கப்பட்ட அதே வேலைதான் இரண்டாவது ஹீரோ ராகவ் விஜய்க்கு. அவரது பங்களிப்பும் கச்சிதம்.

23 வயதில் 10-வது படிப்பு, சக மாணவியைக் காதலித்தல், கட்டினா உன்னைத்தான் கட்டுவேன் என குலதெய்வம் மீது சத்தியம் செய்தல், ஒரு கட்டத்தில் சத்தியம் சவால் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு கிடைத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுதல் என மூன்றாம் ஹீரோ காளி வெங்கட்டுக்கு வெள்ளந்தியான கேரக்டர். ஸ்கூல் யூனிஃபார்மிலெல்லாம் வந்து கலகலப்பூட்டுகிறார்.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் ஹீரோக்கள் மூன்று பேருமே காதலிக்கிற பெண்ணாக கயல் ஆனந்தி. ஒரு ஹீரோவை காதலித்து, இன்னொரு ஹீரோவுடன் இணைகிறவராக ஆஷ்னா ஜாவேரி. இருவருமே துள்ளலாக நடித்து கேரக்டர்களுக்கு பலம் சேர்க்க, காளி வெங்கட்டுக்கு மனைவியாக வருகிற தேனடை மதுமிதா உள்ளிட்ட இன்னபிறரின் பங்களிப்பு போதுமான அளவிலிருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் சிம்பு பாடும் ‘கொக்கா மக்கா’ பாட்டு உற்சாகமூட்ட, மற்ற பாடல்கள் இதம் தந்தாலும் மனதில் தங்க மறுக்கிறது.

பாலுவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். ரயிலில் கடந்தோடும் காட்சிகளை அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது.

‘ஒரு காதல் போனால் அப்படியே முடங்கி விடாமல், தவறான முடிவுகளுக்குப் போகாமல், அடுத்த காதல், கல்யாணம் என நகர்ந்து விடுங்கள்’ என்ற அழுத்தமான கருத்தை ஜாலியாக சொல்வது இயக்குநர் ஜானகிராமனின் நோக்கம். எடுத்த விதம் படம் சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தந்தாலும் இயக்குநரின் நோக்கத்தைப் பாராட்டாமல் விட முடியாது.

டைட்டானிக் – காதல் கவிழ்வதெல்லாம் சகஜம்பா!

-சு.கணேஷ்குமார்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்