டி.பி.கஜேந்திரன்
——-
‘பாரதி’ படம் பார்த்தபோது படத்தில் பாரதிக்கு அடுத்தபடியாக எனக்கு அதில் பிடித்தவர் குவளை கண்ணன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்காகவே வாழ்கிற அந்த குவளை கண்ணன் கேரக்டரில் நடித்தவர் பங்காளி டி.பி.கஜேந்திரன். அந்த கேரக்டர் போலவே மற்றவர்களுக்காக வாழ்கிறவர்.
அண்ணன் தினத்தந்தி கங்காதரன் மூலம்தான் அவர் அறிமுகம். முதல் சந்திப்பிலேயே “வாங்க பங்காளி” என்று தோளில் கைபோட்டு உறவு கொண்டாடியவர். அன்று முதல் இன்று வரை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்து இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். இப்போது அவர் டி.ஜி.பி நெஸ்ட் என்ற தங்கும் விடுதியை கட்டியிருக்கிறார். அதில் இந்த சந்திப்பு தொடர்கிறது.
அவரது குடும்ப பிரச்சினைகள், அந்தரங்க பிரச்சினைகள் அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். எனது குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வந்து நிற்பார். என்னைப்போன்றே தினத்தந்தி கங்காதரன். முன்னாள் தினத்தந்தி நிருபர் பழனிகுமார், குமுதம் சித்ராமணி, மக்கள் தொடர்பாளர் மவுனம் ரவி, தினத்தந்தி முருகன், எழுத்தாளர் கடற்கரைய் என்று அவருக்கு ஒரு நட்பு வட்டாரமே இருக்கிறது.
பங்காளியின் பூர்வீகம் தூத்துக்குடி. அவரது உயரம் குறைவான தோற்றத்தை உலகம் கிண்டல் செய்தபோது அதையே பாசிட்டிவாக மாற்றி சினிமாவில் ஜெயித்தவர். பாலச்சந்தரிடம், விசுவிடம் சினிமா கற்று 25 படங்களை இயக்கினார். அதில் 20 படங்கள் வெற்றிப் படங்கள் 150 படங்களுக்குமேல் நடித்தும் விட்டார்.
அவரது படங்களில் குடும்ப பிரச்சினைகளின் அனைத்து வலிகளையும் தானே தாங்கிக் கொண்டு ஹீரோ தீர்த்து வைப்பார் . டி. பி. கஜேந்திரன் என்கிற நிஜ ஹீரோவின் பிம்பம்தான் அது.
அவரது படங்கள் பெரிய கலைப் படைப்போ, அல்லது வசூலை அள்ளும் கமர்ஷியல் படமோ அல்ல. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த மினிமம் கியாரண்டி படங்கள். தரமான குடும்ப படங்கள். டி.பி.கஜேந்திரனால் கெட்டவர்கள், நஷ்டம் அடைந்தவர்கள் எவருமில்லை. இப்படி ஒரு பெயரை சம்பாதிப்பது சினிமாவில் சிரமம். ரஜினி, கமலால் நஷ்டப்பட்டவர்களே நிறைய இருக்கிறார்கள்.
இன்றைக்கு சினிமாவில் பல சங்கங்களில் அவர் பொறுப்பில் இருக்கிறார். ஆனாலும் எந்த பொறுப்புக்கும் அவர் வாக்கு கேட்டுச் சென்றதில்லை. அவர் எந்த பொறுப்பில் நின்றாலும் “நம்ம கஜேந்திரன்” என்று அவருக்கு ஒரு ஓட்டை போட்டுவிடுவார்கள். அதற்கு காரணம் அவர் எல்லோரிடமும் பழகுகிற பாங்கு. இரண்டு படம் இயக்கி விட்டு வானத்தை பார்த்து நடக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் 25 படம் இயக்கி விட்டு அதுபற்றிய எந்த தலைக்கனமும் இல்லாமல் எளிமையாக இருப்பவர்.
உறவினர்கள் நண்பர்களுக்கு சத்தமின்றி உதவக்கூடியவர். தினமும் மாலையில் சினிமா வாய்ப்பு கிடைக்காத துணை நடிகர்கள், நடிகைகள் அவரைத் தேடி வருவார்கள். எங்கே வாய்ப்பு கிடைக்கும், என்ற தகவலைச் சொல்லி, அதை எப்படி பெற வேண்டும் என்கிற ஆலோசனையும் சொல்லி, அன்றைய செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்புவார்.
அடிப்படையில் போராட்ட குணம் மிக்கவர். டி.வி.விவாதங்களில் நியாயத்தின் பக்கம் நிற்பவர். அதற்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு முறை அவருக்கு லேசான நெஞ்சுவலி. அருகில் உள்ள பிரபலமான ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். அங்கு பல பரிசோதனைகளைச் செய்தவர்கள் உடனே இருதய ஆபரேஷன் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிழைக்க மாட்டார் என்று கூறிவிட்டார்கள்.
ஆனால் டி.பி.கஜேந்திரன் அதற்கு ஒத்துக் கொள்வில்லை. “என் உடல் நிலை பற்றி எனக்குத் தெரியும். இப்போதைக்கு உள்ள பிரச்சினைக்கு மட்டும் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட்டு அனுப்புங்கள் என்றார். “சார் இன்னும் சில மணி நேரத்துல நீங்க செத்துடுவீங்க” என்று மிரட்டினார்கள். வலுக்கட்டாயமாக அட்மிட் செய்ய பார்த்தார்கள். பரவாயில்லை நான் பாத்துக்றேன். என்றார். “அப்படீன்னா உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா எங்க ட்ரீட்மெண்ட் காரணமில்லைன்னு கையெழுத்து போடுங்க” என்று சில பேப்பர்களில் கையெழுத்து போடச் சொன்னார்கள். போட்டுவிட்டுத் திரும்பினார். இது நடந்து 3 வருடத்திற்கு மேலாகிறது.
இன்னொரு உதாரணம். சென்னை நகரின் இருதயம் போன்ற இடத்தில் அவர் குடியிருக்கிறார். அந்த இடத்திலேயே தங்கும் விடுதியும் கட்டியிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள், பிரச்சினைகள், அனைத்தையும் தன் நேர்மை, துணிச்சலை கொண்டு எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்றார்.
தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவரின் கல்லூரி நண்பர். அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அங்கு நடக்கும் தனிப்பட்ட விருந்துகளில் கலந்து கொள்வார். ஆனால் அதனை பயன்படுத்தி இதுவரை எந்த பலனையும் அடையாதவர். இந்த விஷயத்தையே யாரிடமும் சொல்லாதவர்.
பொதுவாக சினிமா கலைஞர்கள் பத்திரிகையாளருடன் லாபம் கருதியே பழகுவார்கள். ஆனால் டி.பி.கஜேந்திரன் நண்பனாகி விட்டால் பத்திரிகையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நண்பனாகத்தான் பார்ப்பார். செய்திகள், விளம்பரங்களை கடந்த நட்பாக அது இருக்கும்.
உடல் நிலை காரணமாக நடிப்பதை குறைத்துக் கொண்டார், அவ்வப்போது அன்பு அழைப்புகளுக்காக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்னொரு படம் இயக்கி மீண்டும் வாருங்கள், இன்றைய டிரண்டுக்கு ஏற்ற மாதிரியும் உங்களால் படம் எடுக்க முடியும் என்று அவரை வற்புறுத்தி வருகிறேன். விரைவில் எனது முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
அண்மையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது ஒரு பஸ்சின் பின்புறத்தில் ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரம் பார்த்தேன்.
அதன் வாசகம் என்ன தெரியுமா,
“நீங்கள் பட்ஜெட் பத்மநாபனா?, பந்தா பரமசிவமா?”.
படைப்பாளி தூங்கலாம், படைப்புகள் தூங்குவதில்லை!