ஆளுங்கட்சி கிருத்திகா பங்கேற்பு, ஆடல் பாடல் கலகலப்பு! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் உற்சாகம்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் இன்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா, நடிகர் ஆண்டனி, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா உலகப்புகழ் பெற்ற லிடியன் குடும்பத்தாரின் மினி இன்னிசைக் கச்சேரியோடு தொடங்கியது. தொடர்ந்து நகைச்சுவைக் கலைஞர்கள் முல்லை – கோதண்டம் தங்களது மாஸ்டர் ஃபீஸ்களில் ஒன்றை நடித்துக்காட்டி கலகலப்பூட்ட, அடுத்ததாக சங்கத்தின் செயலாளர் ‘கோடாங்கி’ ஆபிரகாம் அவர்களின் மகன் சந்தோஷின் நடன நிகழ்ச்சி ஈர்த்தது!

நிகழ்வைத் தொடங்கிவைத்துப் பேசிய கிருத்திகா உதயநிதி, ”ரொம்ப பாசத்தோடு கூப்பிட்டதால் இந்த விழாவிற்கு வந்தேன். பத்திரிகையாளர்களின் எழுத்துகள்தான் எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது. என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.

நடிகர் தம்பி ராமையா, ”இந்த விழாவில் இரண்டு தந்தைகளின் நெகிழ்வை பார்த்தேன். ஒன்று லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன். மற்றொன்று கோடாங்கி. இவர்கள் இரண்டு பேரும் தங்களது பிள்ளைகளின் திறமையைக் கண்டு நெகிழ்ந்து இருக்கிறார்கள். நடிகர் ஆண்டனியை உயர்த்தி அழகு பார்க்கிறீர்கள். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. முல்லை கோதண்டம் காமெடி சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பார்த்தது தான் ஆனால், அதை புதுமையாக அப்படியே டைமிங் மாறாமல் நடித்து அசத்தி இருக்கிறார்கள்.

என் தாய்தான் என்னை வளர்த்தார். அவர் இறந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. அவருக்கு பின், என் மனைவி தற்போது தாயை போல் இருந்து என்னை பார்த்து கொள்கிறார். நான் என் மகனுக்காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டது கிடையாது. நீயாக போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு என்று சொல்லிவிட்டேன். நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும் என்றேன்.

சந்தோஷின் நடன நிகழ்ச்சி

சமீபத்தில் கலந்துகொண்ட விழாவில் என்னிடம் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்கள். அதற்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். முதலில் அனைவரும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.

ஆண்டனி பேசும் போது, ”மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு முன்பு நிறைய படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் மேற்குத் தொடர்ச்சி படம் தான் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது. சமீபத்தில் வெளியான ரைட்டர் படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் எழுதும் எழுத்துக்கள் சில பேருக்கு வழக்கமாக இருக்கும். எனக்கு வாழ்க்கையாக மாறி இருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.

சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது

சங்க தலைவர் கவிதா பேசும்போது, இந்த முறை யாரிடமும் எதிர்பார்க்காமல் சங்க வைப்பு நிதியில் இருந்து உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கினோம்” என்று குறிப்பிட்டு, பொங்கலையொட்டி உறுப்பினர்களுக்கு பொருளுதவி செய்த ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஆதி, நடிகர் மெட்ரோ சத்யா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. சங்கத்தின் உறுப்பினர் பரத்  நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here