‘கார்பன்‘ சினிமா விமர்சனம்
சற்றே வித்தியாசமான கிரைம் திரில்லர் பேஸ்மென்ட்; போனஸாய் அப்பா மகன் சென்டிமென்ட்.
விதார்த்துக்கு கனவில் வருவது நிஜத்தில் நடப்பது தொடர்கதை. தனது தந்தை விபத்தில் சிக்குவதுபோல் கனவு வந்து, அதன்படியே நடப்பது துரதிஷ்டம். உயிருக்குப் போராடும் தந்தையைக் காப்பாற்ற 10 லட்சம் தேவைப்படும் சூழலில் அந்த பணத்தைப் புரட்ட முட்டிமோதும் விதார்த்தின் முயற்சி ஒரு பக்கம்…
தந்தைக்கு நடந்தது விபத்தல்ல: கொலை முயற்சி என்பதை தெரிந்துகொள்ளும் விதார்த், தனது கனவின் மூலம் குற்றவாளியைக் கண்டறிய துப்பறிவாளனாவது இன்னொரு பக்கம்…
கொலை முயற்சி எதற்காக என்பதை தோண்டித் துருவும்போது சிலை கடத்தல், சினம் வெடித்தல் என வேகமெடுக்கிற பரபரவிறுவிறு அத்தியாயங்கள் அதிர்ச்சி தரும் திருப்பங்கள்…
கிளைமாக்ஸில் இருக்கிறது எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனும்படியான எபிசோடுகள்…
வாழ்க்கையில் நடக்கப்போவது முன்கூட்டியே தெரிந்தால் என்னவாகும் என்ற ஒன்லைனில் அமைந்த கதைக்களம்தான். திரைக்கதையில் சஸ்பென்ஸ், திருப்பம் என கலந்துகட்டி எதிர்பார்ப்பைத் தூண்டும் காட்சிகளால் கட்டிப்போடுகிறார் இயக்குநர் சீனுவாசன்.
விதார்த் நடிப்பில் 25-வது படம். ‘வேலைக்குப் போய் சம்பாதித்தபிறகே முகம் கொடுத்துப் பேசுவேன்’ என அப்பாவிடம் வைராக்கியம் காட்டுவதாகட்டும், அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் என்றதும் துடித்துப்போவதாகட்டும், கனவின் துணையோடு குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளாகட்டும் அளவான நடிப்பைத் தந்து தன் கதாபாத்திரத்திற்கு முழுமையாய் உயிரூட்டியிருக்கிறார் விதார்த்!
தான்யா பாலகிருஷ்ணனுக்கு கொஞ்சல்த்தனம் , கொடூர முகம் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்புப் பரிமாணத்தை பந்திவைக்கிற வாய்ப்பு. துள்ளும் இளமை அதற்கும், துடிக்கும் விழிகள் இதற்கும் என பங்குபோட்டுப் பரிமாறியிருக்கிறார். குறையில்லை!
கள்ளங்கபடமில்லா மனதுக்காரர், மகன் மீது அதீத பாசம், அவன் விரும்பிய போலீஸ் வேலையை எப்படியாவது அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற தவிப்பு என உணர்ச்சிகளின் கலவையாய் குப்பை லாரி டிரைவராக மாரிமுத்து; நடிப்பு வழக்கம்போல் கெத்து!
‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘டவுட்’ செந்தில் ‘மூணாறு’ ரமேஷ், ‘ராட்சசன்’ வினோத் சாகர்… கதையோட்டத்துக்கு உற்றதுணையாய் மற்ற பாத்திரங்கள்!
அப்பாவும் மகனும் வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலமாக பேசிக்கொள்வது சுவாரஸ்யம்.
உயிரோட்டமாய் வசனங்கள். உதாரணத்துக்கு ஒன்று, ‘ஒரு வயசுக்கப்புறம் அம்மா இடத்துக்கு பொண்டாட்டி வந்துடுவா; அப்பா இடத்தை நிரப்ப ஆண்டவனால மட்டும்தான் முடியும்.’
தனது பின்னணி இசையால் மெல்ல நகரும் காட்சிகளுக்கும் ஃபோர்த் கியர் போடுகிறார் சாம் சி.எஸ். ‘நான் தொழும் தெய்வமே’ பாடல் இதம்.
பிரவின் கே. எல்.லின் எடிட்டிங் நேர்த்திக்கு தனி பாராட்டு!
லாஜிக் பார்க்காமல் கதையின் விறுவிறுப்பில் மூழ்கத் தயாரானால் ‘கார்பன்‘ காப்பி; ஹேப்பி!