காமமும் காதலும் மோதிக் கொள்கிற கதை.
சென்னையில் வசிக்கிற, ஐ டி துறையில் பணிபுரிகிற நான்கு இளைஞர்கள் வாரக்கடைசியில் மனதையும் உடம்பையும் குஷிப்படுத்திக் கொள்ள ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு போகிறார்கள். போன நாளில் வகைதொகையில்லாமல் குடிக்கிறார்கள். போதை அளவுக்கு அதிகமாகி தூங்கிவிடுவதால் அழைத்துச் சென்ற பெண்ணை அனுபவிக்க முடியாமல் போகிறது. மறுநாள் அவள் அளவுக்கதிகமாக குடித்து மட்டையாகிவிட அன்றும் அவளைத் தொட வாய்ப்பில்லாமல் போகிறது. அப்படியே மறுநாள் விடிய, அவள் காணாமல் போகிறாள். கூடவே நான்கு இளைஞர்களில் ஒருவர் மிஸ்ஸிங்.
இப்படி குளிரான ஊட்டியில் நடக்கும் சம்பவங்களால் கதை சூடுபிடிக்க, பாலியல் தொழிலாளியும் இளைஞனும் காணாமல் போனதன் பின்னணி என்ன? அந்த இரண்டு பேருக்கும் என்னவானது? என்பதை பரபரப்பான திரைக்கதையாக தந்திருக்கிறார் இயக்குநர் மணிபாரதி
காம உணர்வை தீர்த்துக் கொள்வதற்காக பாலியல் தொழிலாளியை பணம் கொடுத்து கூட்டிச் செல்கிற நால்வரில் ஒருவராக ஸ்ரீகாந்த். நண்பர்களுக்கு மதுவை அளவுக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்து போதையின் உச்சத்துக்கு கொண்டு போவது, பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள்மீது காதல் கொள்வது, அந்த காதல் உணர்வை புரிந்துகொள்ளாத அவள் மீது ஆத்திரப்படுவது, போலீஸாரின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி வலியால் துடிப்பது என தனக்கான காட்சிகளை பொருத்தமான நடிப்பால் ஆக்கிரமித்திருப்பவர் கதைக்கு அவ்வளவாய் பொருத்தமில்லாமல் வருகிற ஆக்சன் காட்சியில் அதிரடிப் பாய்ச்சல் காட்டியிருக்கிறார்.
பாலியல் தொழிலாளியாக வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. அமுல்பேபி போலிருக்கிற, குழந்தைபோல் சிரிக்கிற அவருக்கு அப்படியொரு கேரக்டரை கொடுத்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த கதாபாத்திரத்தில் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் ஆபாசமாக காட்டியிருக்கலாம்; படுக்கையில் போட்டுப் புரட்டியிருக்கலாம். ஆனால், கொஞ்சமே கொஞ்சம் கவர்ச்சியான உடையணிய வைத்து தொப்புள் காட்டுவதோடு முடித்துக் கொண்டிருக்கிறது படத்தின் திரைக்கதை. நடிப்பில் கேரக்டருக்கேற்ற காமம் ததும்பும் உடல்மொழியில் கிறக்கம் தருபவர் வழக்கமான வசீகர சிரிப்பையும் வழங்கி நகர்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக வருகிற பிளாக் பாண்டி, வி ஜே பப்பு உள்ளிட்டோர் காமதாகம், அதை தீர்த்துக் கொள்ள முடியாத ஏக்கம் என தங்கள் பங்களிப்பை சிரித்து ரசிக்கும்படி டெலிவரி செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் போலீஸாக வந்த படங்களில் எரிச்சலூட்டும்படி வெளிப்படுத்திய திமிர் தெனாவட்டை குறைத்துக் கொண்டு கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் கடமையை சீரியஸாக செய்திருக்கிறார் காவல்துறை உயரதிகாரியாக வருகிற ஜான் விஜய்.
தாஜ்நூர் இசையில் ‘காற்றிலாடும் இறகோ இறகு’ பாடல் தென்றலாய் மனம் வருகிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு தேவையான அளவிலிருக்கிறது. ஊட்டியின் பசுமை நிரம்பிய அழகை கே.கோகுலின் கேமரா ஏரியல் வியூவாக வழங்கி பார்வைக்கு விருந்து படைக்கிறது.
காமத்திற்காக அணுகிய பெண்ணிடம் காதலைச் சொல்வதென்பது பழகிய கதைதான் என்றாலும், திரைக்கதையில் கிரைம் திரில்லருக்கான விறுவிறுப்பு தொற்றிக் கொண்டிருப்பதால் படத்தை சோர்வின்றி பார்க்க முடிகிறது.
-சு.கணேஷ்குமார் 

