உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, ‘நாற்கரப் போர்’ என்கிற சதுரங்க விளையாட்டுப் பின்னணியில் உருவான படைப்பு.
துப்புரவுத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் நந்தன், தனது திறமையால் சதுரங்க விளையாட்டில் எப்படி கிராண்ட் மாஸ்டராக உயர்கிறான் என்பது கதை.
அந்த உயரத்தை எட்டுவதற்குள் அவன் சந்திக்கும் சாதிப் பாகுபாடு, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை, சவால்களை விறுவிறுப்பான எபிசோடுகளாக்கியிருக்கிறது இயக்குநர் வெற்றிச் செழியனின் திரைக்கதை…
‘சேத்துமான்’ படத்தில் கவனம் ஈர்த்த மாஸ்டர் அஸ்வின் இந்த படத்தின் கதைநாயகன். ‘உங்காளுங்க உங்காளுங்கன்னு சொல்றாங்களே, அப்படினா என்ன மாஸ்டர்?’ என கேள்வி எழுப்புவதிலிருந்து ஏச்சுப் பேச்சுக்களால் ஏற்படும் வலியை உணர்த்துவது, அந்த வலிகளை அஸ்திவாரமாக்கி முன்னேறுவது என அஸ்வினிடமிருந்து கிடைத்திருக்கிறது எதார்த்த நடிப்பு.
ஏழை எளிய குடும்பத்துப் பெண்ணாக, துப்புரவுத் தொழிலாளியாக, 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக கெட்டப்பும் சரி, உணர்வுபூர்வமான நடிப்பும் சரி அபர்ணதிக்கு பாராட்டுக்களைக் குவிப்பது நிச்சயம்.
‘ஏதோ தலைமுறையில மிதிச்ச சாணி, இவங்க அதை கழுவாம இருக்காங்க. அதுக்காக இன்னமும் அப்படித்தான் இருக்கணுமா? என சாதிப் பாகுபாட்டுக்கெதிராக கொதிப்பது உட்பட கதையின் முக்கியமான தருணங்களில் அழுத்தமான பங்களிப்பை தந்திருக்கிறார் லிங்கேஷ்.
சுரேஷ் மேனன் போதுமான அளவில் வில்லத்தனம் காட்ட விசித்திரன், தமிழரசி, அன்பு, மனோ மதுரை என இன்னபிறர் தங்கள் கடமையை சின்சியராக செய்திருக்கிறார்கள்.


