‘வேர்வை சிந்தி உழைக்கணும்; நேர்மை தவறாம நடக்கணும்’னு தீர்மானிச்சு வாழற ஒருத்தன அப்படி வாழுறது தப்புன்னு சொல்லி சொந்த பந்த சுயநல மனுச கூட்டம் சுத்தி வளைச்சு தாக்குது. ‘எவ்ளோ வேணாலும் அடிச்சுக்கோங்க, உசுர வேணாலும் எடுத்துக்கோங்க. சத்தியமா பாதை மாற மாட்டேன்; பாவ காரியம் செய்ய மாட்டேன்’ன்னு உறுதியா நிக்கிறான் அந்த மனுசன். அந்த உறுதிக்கு பரிசா கிடைச்சது என்ன, பறிபோனது என்னங்கிறதுதான் திரு மாணிக்கத்தோட கதைக்கரு.
மாணிக்கம் லாட்டரி சீட்டு வியாபாரி. அவரு பாவப்பட்ட ஒரு பெரியவருக்கு ரெண்டு மூணு லாட்டரிச் சீட்டுகள விக்கிறாரு. வித்த சீட்டு எல்லாமே மாணிக்கத்து கையிலயே தங்கிடுது. அதுல ஒரு சீட்டுக்கு ஒன்ற கோடி ரூபா பரிசு விழுகுது. அந்த பணம் பெரியவருக்கு போயச் சேரணும்கிறது மாணிக்கத்தோட எண்ணம். ஆனா, பெரியவரு யாரு, ஊரு, பேரு எதுவும் தெரியாது. எப்படியாச்சும் அலஞ்சு திரிஞ்சு அவர்கிட்ட லாட்டரிச் சீட்ட கொடுத்துடணும்னு கிளம்புறாரு மாணிக்கம்.
அவர மாணிக்கத்தோட பொஞ்சாதி தடுக்குறாங்க. லாட்டரில கிடைக்கிற பணத்த நாம எடுத்துக்கிட்டு கடனையெல்லாம் அடைச்சுடலாம்; சரியா பேச்சு வராத நம்ம குழந்தையோட ஆபரேஷனையும் முடிச்சுக்கலாம்’னு எடுத்துச் சொல்றாங்க. அவரு அதை கண்டுக்கல. அழுது புலம்புறாங்க, மனுசன் அசரல. நான் சொல்றதுக்கு சம்மதிக்கலைன்னா புள்ளைகளோட தற்கொலை பண்ணிப்போம்னு மிரட்டுறாங்க… அந்த அட்டாக்க அவரு எதிர்பார்க்கல. மனசொடஞ்சு போறாரு.
அதுக்குப் பிறகும் அவரு, தான் நெனச்சதத்தான் செஞ்சாரா, இல்ல பொண்டாட்டி பேச்சுக்கு வளைஞ்சாராங்கிறதுக்கு பதில் சொல்லுது நந்தா பெரியசாமியோட ஸ்கிரின் பிளே…
ஒலகத்துல ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் நேர்மையா இருக்குறதுதான் அப்படிங்கிறதுக்கு உதாரணமா ஒரு கேரக்டர். அதை எல்லா விதத்துலயும் சரியா செஞ்சிருக்காரு சமுத்திரகனி.
தானா வர்ற பணத்த தள்ளி விட்டுடக்கூடாதுங்கிற நெனப்புல தவியா தவிச்சுப் போற அனன்யாவோட நடிப்ப அட்டகாசம், அசத்தல், கலக்கல்னு எப்டி வேணா சொல்லலாம்.
பாரதிராஜாவுக்கு ஆரம்பத்துல ஒண்ணு, கடைசியில ஒண்ணுன்னு ரெண்டு தடவ முகங்காட்டுற வாய்ப்பு. தான் லாட்டரிச் சீட்டு வாங்குறது எதுக்காகன்னு அந்த இயக்குநர் இமயம் சொல்றப்போ இதயம் கொஞ்சம் கலங்கித்தான் போவுது.
அம்புட்டுப் பெரிய நடிகை வடிவுக்கரசி. அவங்களுக்கு இம்புட்டுத்தான் உனக்குங்கிற மாதிரி சின்ன ரோல். இருந்துட்டுப் போகட்டும். பாரதிராஜாவுக்கு ஜோடிங்கிறது பெருமையான சங்கதிதான்.
சின்ன வயசு மாணிக்கமா வர்ற விதேஷுக்கு சீனியர் நடிகர் நாசர் கூட ஸ்கிரீன ஷேர் பண்ணிக்கிற சான்ஸ். அந்த தம்பி, திருடன் மாணிக்கமா இருந்து திருந்திய மாணிக்கமா மாறுறவரை துடிப்பான நடிப்பால கவனிக்க வைக்கிறாப்ல.
களவாணியா இருக்கிற மாணிக்கத்த கண்ணியவானா மாத்துற நாசர், மாணிக்கத்தை உள்ளே தள்ளிட்டு கோடிக்கணக்கான ரூபாய அபகரிக்க திட்டம் போடுற போலீஸ் உயரதிகாரி, அவருக்கு அடியாளா வேலை பாக்குற அதிகாரியா சேரன்ராஜ், அவரு சொல்றத ஏன் எதுக்குன்னு கேட்காம செய்ற கருணாகரன், பாண்டி ரவி, பஸ் டிரைவரா சாம்ஸ் எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க.
பாதரா வர்ற சின்னி ஜெயந்த், நேர்மை தவறுறதுக்கு பரிகாரமா சர்ச்சுக்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லிட்டு கிளம்பிப் போறாரு. அதை எப்படி எடுத்துக்கிறன்னு புரியாம மூளை குழம்பிப் போகுது.
ஸ்ரீமனுக்கு காஞ்சனாவுல பேய்க்கு பயந்த மாதிரி இதுல யானைகளுக்கு பயப்படுற வேலை. நல்லாவே பயந்திருக்காரு. கொஞ்சமா சிரிக்கவும் வெச்சிருக்காரு.
தம்பி ராமையாவையும் சிரிப்பு காட்டத்தான் போட்டிருக்காங்க. அவரும் காட்டுறாரு. ஆனா, சிரிக்கத்தான் முடியல.
கேரளாவுல குமுளி, தமிழ்நாட்ல தேனி கம்பம்னு சிலபல இடங்கள சுகுமாரோட கேமராவுல ஏரியல் வியூல பாக்குறது அடேங்கப்பா எம்புட்டு அழகு.
விஷால் சந்திரசேகர் மியூஸிக்ல பாட்டெல்லாம் மனசுக்கு எதமா இருக்கு.
படத்துல நடக்குறது நம்ம நாட்ல உண்மையா நடந்த சம்பவம்தான். இந்த படம், அதை மையமா வெச்சு ஏற்கனவே வந்த பம்பர் படத்தை லேசா ஞாபகப்படுத்தவும் செய்யுது. சில சீன்கள்ல சினிமாத்தனம் தூக்கலாவும் இருக்குது. அதையெல்லாம் பொருட்படுத்தாம, இந்த படம் நேர்மையா இருக்குறவனை பொழைக்கத் தெரியாதவன், பைத்தியக்காரன்னு சொல்லி நோகடிக்கிற ஒலகத்துல, அப்படி இருக்குறவனுக்கு என்னைக்காச்சும் நல்லது நடக்கும்னு தன்னம்பிக்கை கொடுக்கும் கிறது உறுதி.
படத்த முடிக்கிறப்போ ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ன்னு நல்ல வாசகத்த போட்டு, அதை திருவள்ளுவர் எழுதினதா குறிப்பிட்டிருக்காங்க. வாசகம் கதைக்கு பொருத்தமாத்தான் இருக்கு. அத மறுக்க முடியாது. ஆனா, அதை எழுதினது வள்ளுவர் இல்லைன்னு மறுக்க முடியும். ஏன்னா அதை எழுதினது ஒளவையாரு.
திரு மாணிக்கம் _ தகரங்களுக்கிடையில் புதைந்து கிடக்கும் தங்கம்!
-சு.கணேஷ்குமார்