வங்கிக் கொள்ளை என்ற பரபரப்பான கதைக்களத்தை உருவாக்கி, வங்கிகள் மக்களின் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன என்பதை துணிச்சலாக எடுத்துக் காட்டியிருக்கும் ‘துணிவு.’ முள்ளை முள்ளால் எடுப்பது போன்ற முயற்சி!
அந்த தனியார் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள ரூ. 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிட்டு நுழைகிறது ஒரு தரப்பு. அவர்களின் திட்டத்தை முறியடிக்கிற அஜித், தான் அதே வங்கியிலுள்ள 25’000 கோடியை கொள்ளையடிக்க வந்ததாக சொல்கிறார். சொன்னபடி செயலிலும் இறங்குகிறார். வங்கி ஊழியர்களையும், வங்கிக்கு வந்தவர்களையும் பணயக் கைதியாக மடக்கி வைத்துக் கொண்டு, கொள்ளையடித்த பணத்தோடு தப்பிச்செல்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையிடம் செய்து தர சொல்கிறார், ம்ஹூம் உத்தரவிடுகிறார்.
இப்படியான ‘மங்காத்தா’ விளையாட்டில் அஜித் யார்? திட்டமிட்டபடி அவரால் பணத்தை கொள்ளையடிக்க முடிந்ததா? அவர் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதற்கான காரணம் என்ன?
பணம் கொள்ளை போகாமல் தடுக்க வேண்டும், உள்ளே சிறைபிடிக்கப் பட்டிருக்கிற மக்களை உயிருடன் மீட்க வேண்டும். சவாலான இந்த பிரச்சனையில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது?
இப்படியான கேள்விகளுக்கு, ஒரு நிமிடம் கூட அங்கும் இங்கும் பார்வையைத் திருப்ப முடியாதபடி விறுவிறுப்பாக தடதடக்கிற திரைக்கதையில் பதில் இருக்கிறது… காட்சிகளின் பிரமாண்டம் வியக்க வைக்கிறது. இயக்கம்: எச் வினோத்
கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித். காட்சிக்கு காட்சி உடல்மொழியில் காட்டுகிற தெனாவட்டு, வசனங்களில் வெளிப்படுத்துகிற கிண்டல், கேலி, கோபம், தாக்க வருகிறவர்களை சுட்டு வீழ்த்துகிற ஸ்டைல், உற்சாகமான ஆட்டம் என அத்தனையும் கவர்கிறது. ஏகே ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டர்களை தெறிக்க விடுகிறது!கதாநாயகியாக மஞ்சு வாரியர். படத்தில் அவரும் கேங்ஸ்டர் என்பதால் நடிப்பில் அதற்கேற்ற உடல்மொழியை சண்டைக் காட்சி, துப்பாக்கிச் சூடு என எல்லாவற்றிலும் சரியாக வெளிப்படுத்துகிறார்.
நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக சமுத்திரகனி. ஏற்ற வேடத்திற்கான கம்பீரத்தில் நிறைவு!
நகைச்சுவையால் பட்டிமன்றங்களை கலகலக்க வைக்கிற மோகனசுந்தரம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். தான் ஏற்ற தொலைக்காட்சி செய்தியாளர் கதாபாத்திரத்தின் தன்மையுணர்ந்து, நளினமான நடையாலும் டயலாக் டெலிவரியாலும் ஒன்ஸ்மோர் கேட்கிற அளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஊடகங்களின் போக்கை விமர்சித்து விளாச நினைத்த தனது எண்ணத்தை அவர் கச்சிதமாக கையாண்ட திருப்தி இயக்குநருக்கு கிடைத்திருக்கும்! யோகிபாபு, காளி வெங்கட், முனீஸ்காந்த் என காமெடி நடிகர்கள் குணச்சித்திர நடிகர்களாக மாறிவரும் சூழலில் மோகனசுந்தரம் போன்றவர்களை இயக்குநர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டுகிற வங்கி அதிபராக ஜான் கொகேன். வில்லனுக்காக கெத்து குறைவு!
மகாநதி சங்கர், பிரேம், பக்ஸ் பகவதி பெருமாள் என நிறைய நடிகர்கள்… அத்தனை பேரும் அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்கள்.
படம் முழுக்க துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, சுவர்கள் பிளப்பு, கார்கள் சிதறடிப்பு கூடவே கடலில் சீறும் போட், தாழ்ந்து பறக்கும் ஹெலிகாப்டர் என தாறுமாறாய் பயணிக்கிற காட்சிகளுக்கு பின்னணி இசையால் தீ மூட்டியிருக்கிறார் ஜிப்ரான்! பாடல்கள் ஒருவிதத்தில் ஸ்பீட் பிரேக்கர்கள்.
சூறாவளியும் சுனாமியும் கைகோர்த்தது போலிருக்கிறது சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள்!
அஜித் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக பார்த்துப் பார்த்து காட்சிகளை உருவாக்கிய இயக்குநர், நம்முடைய பணத்தை அபகரிக்க வங்கிகள் எப்படியெல்லாம் வலை விரிக்கிறார்கள் என்கிற விழிப்புணர்வையும் விதைத்திருக்கிறார். அந்த விதத்தில் துணிவு நிமிர்வு!