‘உடன்பால்’ சினிமா விமர்சனம்

மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள். சுயநலத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இந்த உண்மையை உணர்வுபூர்வமாக சொல்கிற ‘உடன்பால்.’

விஷமுள்ள மனித மனங்களின் நீள அகலங்களை எடுத்துக்காட்டும் ‘விசு‘வல் விருந்து. காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சமில்லை!

சார்லிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகனும், மகளும் திருமணமானவர்கள். அவர்களுக்கு ஆளுக்கொரு வாரிசுகள். அந்த மகனும் மகளும் தாங்கள் சார்ந்த தொழிலில் பின்னடைவு ஏற்பட்டு கடன் தொல்லை அது இதுவென வாழ்க்கையில் சிலபல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள், பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு வீட்டை விற்கும் முடிவுக்கு வருகிறார்கள். அதை சந்தர்ப்பம் பார்த்து சார்லியிடம் சொல்லும்போது சம்மதம் கிடைக்காமல் போகிறது. அவர் மறுப்பதில் நியாயம் இருக்கிறது.

இது ஒருபக்கமிருக்க, மக்கள் அதிகம் கூடும் அந்த அடுக்குமாடி கட்டட வளாகத்துக்கு ஏதோவொரு வேலையாக செல்கிறார் சார்லி. அவர் சென்ற நேரமாகப் பார்த்து அந்த கட்டடம் இடிந்துவிழ பலரும் இறந்துபோகிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கிறது அரசாங்கம்.

அப்பா இறந்து போன துக்கம் ஒரு பக்கமிருக்க, அவர் மூலம் கிடைக்கவிருக்கும் அந்த 20 லட்சத்தை தங்களுக்குள் எப்படி பங்கிட்டுக் கொள்வது என பேச்சு வார்த்தை தொடங்குகிறது. பிரியாணிக்கடை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் சார்லியின் இளைய மகனுக்கும், வரக்கூடிய நிவாரணத்தில் பங்கு தர வேண்டிய கட்டாயம். யாருக்கு எத்தனை லட்சம் என்கிற பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போய் விவாதமாகிறது; சண்டையாகிறது.

ஒரு கட்டத்தில் நிவாரணத் தொகையைப் பெறுவதில் தடங்கல் ஏற்பட, அந்த சவாலான சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.காமெடியனாக இருந்து, காலப்போக்கில் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சார்லிக்கு மற்றுமொரு கனமான வேடம். மகன், மகளின் மனது புரிந்து கனிவோடு கண்டிப்பது, அக்கறையாக ஆத்திரம் கொள்வது, பேரக்குழந்தைகளோடு குஷியாக விளையாடுவது என மனிதர் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். ஒரு காட்சியில் ‘மகளிர் மட்டும்’ நாகேஷை நினைவு படுத்துகிறார்.

சார்லியின் மூத்த மகனாக லிங்கா. நடுத்தர குடும்பத் தலைவன் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் நெருக்கடியை யதார்த்தமாக உணர்த்துகிறது அவரது நேர்த்தியான நடிப்பு!

லிங்காவின் மனைவியாக அபர்நதி. ‘தேன்’ படத்தில் தேர்ந்த நடிப்பைத் தந்தவர். இந்த படத்தில் படபடக்கும் விழிகளால் உணர்வுகளை சிதறவிட்டு சிலாகிக்க வைக்கிறார்.

சார்லியின் மகளாக காயத்ரி. தனக்கான உரிமையில் உரிய பங்கு தரமறுக்கும் அண்ணன் மீது ஆத்திரம், சின்னச் சின்னதாய் சுடுசொல் வீசும் அண்ணி மீது ஆதங்கம் என அப்பாவித்தனம் அதிகமுள்ள கதாபாத்திரம். அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அவரது நடிப்பு ஊர்வசியை உள்வாங்கி பிரதிபலித்தது போலிருக்கிறது. கண்கலங்கிக் கொண்டே அவர் பேசும் வசனங்களை ரசித்துச் சிரிக்கையில் நமது கண்களிலும் கலக்கம்! ஒரு காட்சியில் காயத்ரி, சார்லிக்கு போடும் மேக்கப் ‘ப்ப்ப்ப்ப்ப்பா.’

எது நடந்தாலும் உணர்ச்சிவசப்படாமல், எதற்காகவும் பெரிதாக போராடாமல், கிடைப்பதை வைத்து உற்சாகமாக வாழ முயற்சிக்கிற ‘மிக்ஸர்‘ மனிதர்களின் நகலாக, காயத்ரியின் கணவராக விவேக் பிரசன்னா. மனிதர் பம்மிப் பம்பி பேசுவது அத்தனை அழகு. தன்னால் உடைந்த கட்டிலை ரிப்பேர் செய்ய சைக்கிளுக்கு பஞ்சர் போடுபவரை கூட்டி வந்து பேண்டேஜ் போடுவது ரகளை!

அந்த இரண்டு குட்டிக் குழந்தைகளின் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் கதையோட்டத்தில் சரியாக கலக்கிறது.

ஒரேயொரு காட்சியில் வந்தாலும் தடபுடலான நடிப்பால் தனித்து தெரிகிறார் மயில்சாமி.

மறதி வியாதிக்காரராக, நினைவில் வைத்துக் கொள்ளும்படி நடித்திருக்கிறார் ‘நக்கலைட்ஸ்’ தனம்!

விஜய் டி.வி. தீனா வருகிற காட்சிகளும் சிரிக்க வைக்கிற வாய்ப்பும் குறைவுதான். இருந்தாலும், கிடைத்த கேப்பில் ‘காம்ப்ளெக்சில் இருக்கும் மல்லிகா; மல்லிகாவே காம்ப்ளக்ஸ்தான்’ என போட்டுத் தாக்குகிறார்.

கிளைமாக்ஸ் காமெடியாகி விடக்கூடாது என யோசித்தது சரிதான். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உயிரோட்டம் கூடியிருக்கும்!

பெரும்பாலான காட்சிகள் நகர்வது ஒரே வீட்டுக்குள். ஆனாலும் அலுப்பு தட்டவில்லை. ஒளிப்பதிவு மதன் கிறிஸ்டோபர்.

இசை, எடிட்டிங் நேர்த்தி!

அது எப்படி சாத்தியம், இது நடக்க வாய்ப்பில்லையே என்றெல்லாம் யோசிக்க வைக்கும் காட்சிகள் உண்டுதான். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் – மனித மனங்களின் கருப்புப் பக்கங்களை பந்தி வைக்க, கலகலப்பான காட்சிகளை கச்சிதமாக கோர்த்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சீனிவாசனை பாராட்டலாம்! படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்!

இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் டிசம்பர் 30; 2022 முதல் பார்க்க கிடைக்கும்.

Review சு. கணேஷ்குமார்

WhatsApp 99415 14078

Mail startcutactionn@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here