‘உழைக்கும் கைகள்’ சினிமா விமர்சனம்

உழைக்கும் கைகள்‘ சினிமா விமர்சனம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து மக்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்று ‘விவசாயி.’ 1967-ம் ஆண்டு வெளிவந்த, விவசாயத்தைக் கொண்டாடிய, எப்போது கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல்களைக் கொண்ட, கண்ணியம் மீறாத காதல் காட்சிகளால் கவர்ந்த அந்த படத்தின் ‘ரீ மேக்’ வெர்ஷனே ‘உழைக்கும் கைகள்.’

ஊரில் செல்வாக்குடன் இருக்கிற பண்ணையார் விவசாயிகளுக்கெதிராக செயல்படுகிறார். அதை பொதுநலவாதியான எம்.ஜி.ஆர். தட்டிக் கேட்க, அதன் மூலம் வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதையின் ஒன்லைன். தான் யாருடன் மோதுகிறாரோ அவரது மனைவியின் தங்கையைக் காதலிப்பது, அவருடன் ஜாலியாக ஆடிப் பாடுவது, அவரை வைத்து பெண்கள் உடையணிகிற விஷயம் பற்றி சமூகத்துக்கு பாடலின் மூலம் பாடம் நடத்துவது என இன்னபிற அம்சங்களும் படத்தில் உண்டு. சீரியஸான கதைக்களத்தில் ஆங்காங்கே காமெடிக்கும் இடம் கொடுத்திருக்கிறது திரைக்கதை.

விவசாயி படத்தில் எம். ஜி. ஆர். ஏற்றிருந்த முத்தையா என்ற கதாபாத்திரத்தை, எம்.ஜி.ஆரை போலவே தோற்றம் கொண்ட நாமக்கல் எம்.ஜி.ஆர். ஏற்றிருக்கிறார். படத்தை இயக்கியிருப்பதும் அவரே!

விவசாய நிலங்களை முறைகேடாக ஆக்கிரமிக்க நினைக்கிற பண்ணையாரை ஆக்ரோஷமாக எதிர்ப்பது, தவறு செய்கிற தன் தந்தைக்கு எதிராக களமிறங்குவது, தன்னை நேசிக்கிற பெண்ணுக்காக ஊரைவிட்டு வெளியேற தீர்மானிப்பது என விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர். தந்திருந்த நடிப்புப் பங்களிப்பை நகலெடுத்து நடித்திருக்கிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர். பாடல் காட்சிகளில் உற்சாகம் தெறிக்க, பண்ணையாருடன் மோதுகிற அந்த கம்புச் சண்டைக் காட்சியில் கனல் பறக்கிறது.

விவசாயி படத்தில் கே.ஆர். விஜயா ஏற்றிருந்த கதாநாயகி பாத்திரத்தை (லேசாக அவரது சாயலில் உள்ள) கிரண்மயி ஏற்றிருக்கிறார். மாடர்ன் உடையில் வரும்போது ஹார்மோனுக்குள் கலவரம் நிகழ்த்தப் பார்த்து, சேலை ஜாக்கெட்டில் வரும்போது கையெடுத்துக் கும்பிடும்படி தோற்றத்தில் வெரைட்டி காட்டுகிறார். பாடல் காட்சிகளில் கிரண்மயி காட்டுகிற நெருக்கம் கிறக்கம்!

நம்பியார் ஏற்றிருந்த பண்ணையார் வேடத்தில் பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம். உள்ளூர் விவசாயிகளிடம் நயவஞ்சக முகம் காட்டுவது, மனைவியின் தங்கை மீது காமப் பார்வை வீசுவது என மனிதர் அத்தனை கெட்ட விஷயங்களையும் குத்தகைக்கு எடுத்துச் செய்கிறார். நம்பியார் அளவுக்கு இல்லையென்றாலும் நடிப்புப் பங்களிப்பு குத்தம் சொல்கிற அளவுக்கு இல்லை! படத்தின் சண்டைக் காட்சிகளையும் இவரே அமைத்திருக்கிறார்; அசத்தலாய், அட்டகாசமாய்!

காமெடிக்கு போண்டாமணி. அவர் புதையல் இருப்பதாய் நம்பி கிணறு ஆழத்துக்கு தரையில் குழி தோண்டி களைத்துப் போவது கலகலப்பு!

பிரேம்நாத், மோகன், ஷர்மிளா, விஜயலெஷ்மி என இன்னபிற கதாபாத்திரங்களில் வருபவர்களின் பங்களிப்பும் நிறைவு!

காலத்துக்கேற்ப திரைக்கதையில், வசனங்களில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருப்பது நேர்த்தி!

ரி மிக்ஸ் என்ற பெயரில் நவீன இசையைப் புகுத்தி ஒரிஜினல் பாடலின் கட்டமைப்பை கெடுக்காமல் நல்ல நல்ல நிலம் பார்த்து’, இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள’, கடவுள் எனும் முதலாளி’ என பழைய பாடல்களை அப்படியே பயன்படுத்தியிருப்பதற்கு தனி பாராட்டு. சங்கர் கணேஷின் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கை கொடுத்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். ரசிகர்களை மட்டுமே பக்தர்கள் என்று சொல்வது வழக்கத்திலிருக்கிறது. அவர்களுக்கு, ‘உழைக்கும் கைகள்’ உன்னத விருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here