இந்த படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது! -‘விடுதலை’ பட வெற்றி விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

சூரி கதையின் நாயகனாக நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் கடந்த வாரம் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்று, தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.நிகழ்வில் நடிகர் சூரி, “ ‘விடுதலை’ படம் ரிலீஸான வேகத்திலேயே இப்படியொரு நன்றி சொல்லும் நிகழ்வு நிகழும் என எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. இந்த படத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் சார்தான். இந்த படம் பார்த்துவிட்டு ‘நான் நல்லா இருக்க வேண்டும்’ என்று பலரும் வாழ்த்தினார்கள். வெற்றிமாறன் இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் வருங்காலத்தில் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என நினைக்கிறேன். சக நடிகனான எனக்கு ஹீரோ விஜய்சேதுபதி மாமா ‘சூப்பர் சூப்பர்’ என பாராட்டுதல் கொடுத்துக் கொண்டே இருந்தார். பவானியுடன் நடித்தது மகிழ்ச்சி. ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி, “இந்த படத்தில் எனக்கு பிரதானமாக இருப்பது வெற்றிமாறன்தான். மேக்கிங் வீடியோவிலேயே அவரது உழைப்பைப் பார்த்திருப்பீர்கள். நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். அவர் சொல்லாமல், அவரது பிஹேவியரில் இருந்தும் புரிந்து கொண்டு செய்வேன். ஏனெனில் மொழி என்பது தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அதற்கு முன்பு உணர்வுகள்தான் நம்மிடம் பேசும் மொழி. இந்த படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரமாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத் தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தது. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது. பல வாத்தியார்களை கிரகித்துக் கொடுத்த வெற்றிமாறன்தான்.

இந்த படம் இப்படி வெளியானதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன். அவருக்கும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கும் நன்றி. மக்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி. நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி சாரின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுகள். க/பெ ரணசிங்கம் படத்தில் பவானியுடன் நடித்திருந்தேன். அதன் பிறகு இரண்டாவது படம் இது. தன் வேலையை சரியாக புரிந்து கொண்டு நடிக்கக்கூடியவர்களில் ஒருவர். படத்தில் வரும் காட்டி அரசன் வேல்ராஜ். அந்த அளவுக்கு சிறப்பான பணியை செய்துள்ளார். ராஜீவ் சார் இந்தப் படத்தில் நடித்தபோது நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையையும் மொழியையும் புரிந்து கொள்ள கூடிய படத்தை அவன் ரசிக்கும்படி கொடுப்பது சாதாரணம் அல்ல. என் நினைவுகளில் மறக்க முடியாத படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.இயக்குநர் வெற்றிமாறன், “இந்த மாதிரியான படம் எடுப்பதில் எளிதான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதுதான். அடுத்த எளிதான விஷயம் இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைப்பது. இந்தப் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தோம் என்று யாரும் சொல்லவில்லை. இப்படி ஒரு கதையை கொண்டு வர அது நாங்களே உருவாக்கிக் கொண்டது. ஆனால், இப்படியான கதையை ஆரம்பிக்கிறோம் என அறிவித்ததில் இருந்தே ஊடகங்கள், ரசிகர்கள் என பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்து ஆதரவு கொடுத்தார்கள். அதுதான் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.

இந்த படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளது. ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தக் கதையின் தீவிரம், கருப்பொருள், நாங்கள் பட்ட கஷ்டம் ஆகியவற்றை மட்டுமே மதிப்பிட்டு கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது பெரிய விஷயம். மக்கள் இந்த கதையின் வலியை அவர்களுடையதாக எடுத்துக் கொண்டாடினார்கள். அது எங்களுடைய நன்றிக்குரியது. ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு நன்றி.

இந்த கதையில் நல்லவன் நாயகன். நல்லவனை நாயகனாகப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நல்லவனை கதைநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும். ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார். ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்.படத்தின் கதைநாயகி பவானிஸ்ரீ, காவல்துறை அதிகாரிகளாக நடித்திருந்த ராஜீவ் மேனன், சேத்தன், நடிகர் சத்யா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குநர் ஜாக்கி, ரெட்ஜெயண்ட் மூவிஸ் குணா உள்ளிட்டோரும் நிகழ்வில் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here