என் மகள் பிறந்தநாளில் இந்த படம் வெளியாவதில் மகிழ்ச்சி! -‘வாஸ்கோடகாமா’ ஹீரோ நகுல்

நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார், நகுலின் சகோதரி நடிகை தேவயானி கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நாயகன் நகுல் பேசியபோது “இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி என் மகள் பிறந்த நாள். அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ஆர்ஜிகே பேசியபோது, சினிமாவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ரஜினி ஒருவர் தான். அவர் மூலம் தான் நான் சினிமாவைக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் ஒரு 40 வயது குழந்தை நகுலை நான் நடிக்க வைத்துள்ளேன் . இந்தப் படத்தில் 44 நடிகர்களை நடிக்க வைத்து 41 நாட்களில் படத்தை முடித்துள்ளேன். குறிப்பிட்ட பட்ஜெட்டில்,சொன்ன மாதிரி குறிப்பிட்ட நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம்.இந்தப் படத்தில் நாங்கள் எடுக்க நினைத்ததை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக அது உங்களுக்குப் பிடிக்கும். நல்ல என்டர்டெய்னராக இருக்கும். வேண்டாம் என்று தோன்றுகிற பல காட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் எடுத்து விட்டோம்.கஷ்டப்பட்டு எடுத்து விட்டோமே என்று வைக்காமல் தூக்கி இருக்கிறோம். படம் பார்ப்பவர்களின் உணர்வு தான் முக்கியம். இதை உணர்ந்து சரியானபடி எடுத்துள்ளோம் என்று நினைக்கிறோம்” என்றார்.

நிகழ்வில், நாயகன் நகுலின் சகோதரி நடிகை தேவயானி, படத்தைத் தயாரித்திருக்கும் டத்தோ. பா. சுபாஸ்கரன், நாயகி அர்த்தனா பினு, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன்,பாய்ஸ் மணிகண்டன், வாழ்த்த வருகை தந்த சாந்தனு, ஜெகன் ,படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் யுவராஜ், இசையமைப்பாளர் அருண் என்.வி ,ஒளிப்பதிவாளர் என். எஸ். சதீஷ்குமார், எடிட்டர் தமிழ்குமரன் , கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், பாடகர் அந்தோணி தாஸ்,இணைத் தயாரிப்பாளர் கோபிநாத் நபராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாகத் தயாரிப்பாளர் டத்தோ பா. சுபாஸ்கரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here