வெள்ளகுதிர சினிமா விமர்சனம்

சாலை வசதியற்ற மலை கிராம மக்களின் வலிகளை எடுத்துக்காட்டும் ஒருசில படைப்புகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அட்டனன்ஸ் போட்டதுண்டு. அதே வலியை மாறுபட்ட கோணத்தில் அணுகியிருக்கிறது இந்த ‘வெள்ளகுதிர.’

ஒரு மலை; அதன் மீதிருக்கும் கிராமத்தில் சாலை வசதியின்றி கஷ்டநஷ்டங்களை அனுபவித்தபடி வசிக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள்; அவர்களுக்கு சொந்தமான வீட்டையும் நிலங்களையும் கணிசமான தொகை கொடுத்து வாங்கிக் கொண்டு ஒட்டுமொத்த கிராமத்தினரையும் வெளியேற்றும் திட்டத்துடன் செயல்படும் ஒரு ஆளுமையான மனிதர். அவரிடம் இடத்தை விற்றவர்கள் மலையின் கீழ் வசிக்க புறப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலை.

அந்த காலகட்டமாகப் பார்த்து, மலையின் கீழ் வசித்துக் கொண்டிருந்த கதிர் என்பவர் அங்கு தப்பும் தவறுமாக எதேதோ செய்துவிட்டு, கடனிலும் சிக்கிக்கொண்டு அவதிப்படும் நிலையில் அவற்றிலிருந்து தப்பிக்க மலையின் மீது வசிக்க வருகிறார். வந்தவர், அங்கும் பணத்தாசையில் தப்பும் தவறுகளும் செய்யத் துவங்குகிறார்.

செய்த தப்புக்கு கண்டிப்பாக ஒருநாள் தண்டனை கிடைத்தே தீரும். கதிர் தப்புமேல் தப்பு செய்கிறார்.

அவருக்கு காலம் கொடுத்த தண்டனை என்ன? மலையின் கீழ் அவர் செய்த தப்பு என்ன? மலைமீது அவர் செய்த தப்பு என்ன? ஒட்டுமொத்த மலைகிராம மக்களையும் காலி செய்ய நினைத்து செயல்படுபவரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா இல்லையா? மலை கிராமத்துக்கு சாலை வசதி கிடைத்ததா இல்லையா?

இப்படியான கேள்விகளுக்குப் பதில்களாக பரபரக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…

கதிராக ஹரிஷ் ஓரி. செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க ஓடி ஒளிந்த இடத்திலும் சமுக விரோதச் செயல்களைச் செய்யத் தயாராகும்போது எழுந்துபோய் நாலு அப்பு அப்பலாமா என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு கேரக்டருக்கேற்ற இயல்பான நடிப்பைத் தந்திருப்பவர், திக்கித்திக்கி பேசுகிறவராகவும் கவனம் பெறுகிறார்.

பெயரளவில் தன்னை பிரசிடென்டாக வைத்துக்கொண்டு, அந்த பதவியைப் பயன்படுத்தி அநியாய அக்கிரமம் செய்யும் சூழ்ச்சிக்காரர் மீது சரியான சந்தர்ப்பத்தில் மெலடி காட்டும் சீற்றம் கெத்து.

ஹரிஷூக்கு மனைவியாக வருகிற அபிராமி, கணவன் செய்த தப்புக்காக அவனுடன் பிள்ளையையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என ஓடிக்கொண்டேயிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிற வேதனையை ஆத்திர ஆவேசத்துடன் கணவன் மீது செலுத்தும்போது தனக்குள்ளிருக்கும் தேர்ந்த நடிகையை காண்பிக்கிறார்.

மலை கிராமம் முழுவதையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை காலி செய்யவைக்கும் தந்திரம், சாலை வசதி கிடைக்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி என வில்லனுக்கான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ‘உதிரி’ விஜயகுமார்.

ஊரில் யார் வீட்டிலாவது கல்யாணம், காதுகுத்து என விஷேசம் வரும்போது ‘மூலிகை ரசம்’ என்ற போதை பானம் தயாரித்து வழங்குவதை ஆன்மிக அருளாசியுடன் செய்கிற பெரியவர், அந்த வேலையை தன் மகன் முறைகேடாக செய்ய நினைக்கும்போது மனம் உடைவதும், தண்டனைக்கு ஆளாவதும் படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்றாக கடந்துபோகிறது.

தன் மகளுக்கு கட்டிவைத்த இளைஞன் நிலத்தை அபகரிப்பதற்காக வந்தவன் என தெரியும்போது கத்திக் கதறும்போது யார்யா இவர்? என நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் சிவசங்கரின் மனைவி சரண்யா.

ஒரு இடத்தில் நின்றபடி ஒரு சுற்று சுற்றிப் பார்ப்பதாக இருந்தாலே ஒரு நாள் பத்தாது. அப்படியொரு பரந்து விரிந்த மலையையும் அடர்ந்த மரங்களையும் பச்சைப் பசேல் என கழுகுப் பார்வையில் பார்த்து ரசித்து வியக்கும் வாய்ப்பைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் ராம்தேவ்.

கதைக்களத்தின் தன்மையை விளக்கும் பாடல்களுக்கும், உணர்வுகளின் கலவையாய் பரவிப்பாயும் காட்சிகளுக்கும் தன்னால் இயன்றளவுக்கு ஜீவன் தந்திருக்கிறார் பரத் ஆசீவகன்.

மலை கிராம மக்களுக்கு எந்தெந்த வசதிகள் கிடைக்கவில்லையோ அதையெல்லாம், மலையின் கீழ் வசிப்பிடம் உருவாக்கி செய்து தர அரசாங்கம் முன்வந்தாலும் ‘காலங்காலமாக வசித்த இடத்திலிருந்து எங்கும் நகர மாட்டோம்’ என பிடிவாதம் பிடிக்கும் மக்கள் இருக்கும்வரை அவர்களை வைத்து செய்கிற அரசியல் தொடர்ந்துகொண்டேயிருக்கும். வெள்ளகுதிர மாதிரியான படைப்புகள் வந்துகொண்டேயிருக்கும்.

அதையெல்லாம் தாண்டி ஒரு படைப்பை படைப்பாக பார்க்கும்போது வெளிப்படுத்த நினைத்த கருத்தை மிகச்சரியான சம்பவங்கள், காட்சிகள் வழியாக பிரதிபலித்து பாராட்டுக்களையும் விருதுகளையும் (வெளியாகும் முன்பே 60க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது) குவித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சாரங்ராஜ் செந்தில்குமார் அடுத்தடுத்து தரமான படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்.

வெள்ளகுதிர – வெற்றியை வெல்லும் குதிர!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here